”பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுக்க முடியாது”: ஆசிரியை வழக்கில் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

நிர்வாக காலதாமதம் காரணமாக ஆசிரியைக்கு  பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த  நளயாயினி (Nalayini) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, சீனியாரிட்டி அடிப்படையில்  ஓவிய ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார்.  இதையடுத்து 08.10.1999 அன்று  அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு,  29.10.1999 அன்று வெளியிடப்பட்ட தேர்வுப் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றது 16.06.2000 அன்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு விடுக்கப்பட்டு அவர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டார்.  மதுரை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களாக மொத்தம் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஆசிரியர் நளயாயினிக்கு பணி நியமன ஆணை எதுவும் வழங்கப்படவில்லை. 

ADVERTISEMENT

இதனால் அவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில்,  அவரது கோரிக்கையை பரிசீலிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.  எனினும் அந்த உத்தரவு செயல்படுத்தப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர்ந்தார். 

இந்த வழக்கில் மதுரை மாநகராட்சி, தேர்வு செய்யப்பட்ட 9 பேரில் 6 பேரை மட்டுமே பணி நியமனம் செய்ய முடியும் என்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.  

ADVERTISEMENT

ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்ததுடன், தாமதமின்றி ஒன்பது பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்குமாறு உத்தரவிட்டது. 

இதில் மற்றவர்களுக்கு 12.12.2002 அன்று பணி நியமனம் வழங்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு 31.10.2003 அன்றுதான் தாமதமாகப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி அவர் 03.11.2003 அன்று பணியில் சேர்ந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டார் மற்றும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது ஊதியத்திலிருந்து பொது வருங்கால வைப்பு நிதி (GPF) பிடித்தம் செய்யப்பட்டது.

இந்தசூழலில் 30.07.2025 அன்று தணிக்கை துறையின் ஆட்சேபனையைத் தொடர்ந்து IFHRMS அடையாள எண்ணைப் பெற்று புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாற்றப்பட்டார். 

அதாவது அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம், கடந்த 2003 ஏப்ரல் 1ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பிந்தைய தேதியில் அரசு பணியில் சேர்ந்ததால் சம்பந்தப்பட்ட ஆசிரியர் புதிய ஒய்வூதிய திட்டத்துக்கு மாற்றப்பட்டார். 

இதை எதிர்த்து ஆசிரியை நளயாயினி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.  இந்த வழக்கில் ஆசிரியைக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து மாநகராட்சி சார்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில்,   ’நிதித்துறையின் அரசாணை (G.O.Ms.No.259)-இன் படி, 01.04.2003 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ பணியில் சேரும் அனைத்து அரசு மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் மட்டுமே பொருந்தும். தணிக்கையின் போது, இந்த ஆசிரியைக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கப்பட்டது ‘நிர்வாகத் தவறு’ என்று கண்டறியப்பட்டதால், அதைச் சரிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது’  என்று மாநகராட்சி தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு ஆசிரியை தரப்பில், என்னுடன் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12.12.2002 அன்று பணி நியமன ஆணை வழங்கப்பட்ட நிலையில் எனக்கு மட்டும் தாமதமாக வழங்கப்பட்டது. என்னுடன் தேர்வு செய்யப்பட்டவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரும் நிலையில் நான் மட்டும் எப்படி புதிய ஓய்வூதிய திட்டத்துக்குள் வருவேன் என்று கேள்வி எழுப்பி வாதங்கள் முன் வைக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு 01.06.2026 அன்று உத்தரவு பிறப்பித்தது. 

அந்த உத்தரவில்  ”சம்பந்தப்பட்ட ஆசிரியை  கட்-ஆஃப் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்திருந்தாலும், அவர் 9 பேர் கொண்ட அதே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். எனவே, 12.12.2002 அன்று பணியில் சேர்ந்த மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவருக்கு மட்டும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி பாகுபாடு காட்ட முடியாது.

பணிநியமனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் முற்றிலும் அதிகாரிகளின் செயலற்ற தன்மையாகும்.  இதற்கு ஆசிரியை எந்த வகையிலும் பொறுப்பல்ல. அவர் 20 ஆண்டுகாலமாக அனுபவித்து வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை பறிக்க முடியாது.  இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அவரைப் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்ற முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share