இந்திய ஊடகங்களில் ஜூன் 25-ந் தேதி அன்று, “இந்திய பாஸ்போர்ட் (Passport) என்பது ஒரு “பயண ஆவணம்” (travel document) மட்டுமே, அது “குடியுரிமை ஆவணம்” (citizenship document) அல்ல என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (MEA) மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (ஜூன் 24, 2026) தெரிவித்தார். இந்திய பாஸ்போர்ட்டின் நோக்கம் இந்தியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவும், அந்நாடுகளின் எல்லைகளுக்குள் செல்லவும் உதவுவதே ஆகும்; இதனை குடியுரிமை உரிமைகளை நிலைநாட்டப் பயன்படுத்தப்படும் மற்ற ஆவணங்களுடன் ஒப்பிடக்கூடாது என்று அந்த அதிகாரி கூறினார்” என்கிற செய்தி வெளியானது.

இதனையடுத்து நாடு முழுவதும் பாஸ்போர்ட்டும் குடியுரிமை ஆவணம் இல்லை என்றால் எதுதான் குடியுரிமைக்கான ஆவணம்? என்கிற விவாதம் அனல் பறக்கிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ கூறுகையில், ”இது ஒரு அந்தஸ்து சார்ந்த விஷயம், எனவே வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு நடைமுறையை விளக்கியது. உங்களிடம் பாஸ்போர்ட் இருக்க வேண்டும், ஆனால் பாஸ்போர்ட் மட்டுமே உங்கள் குடியுரிமையை நிரூபித்துவிடாது” என்றார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், “சாதாரண குடிமக்கள் மத்தியில் பீதியையும் இயலாமையையும் உருவாக்குவதில் இந்த அரசாங்கம் சிறந்து விளங்குகிறது. பாஸ்போர்ட் கூட ஒருவரின் குடியுரிமையை உறுதிப்படுத்தாது என்று அறிவிப்பதன் மூலம், தங்களுக்கு உடன்பாடில்லாத இந்தியர்களின் குடியுரிமை உரிமைகளை தன்னிச்சையாக மறுப்பதற்கான அடித்தளத்தை அவர்கள் அமைத்து வருகின்றனர்.
தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கும் அவர்களின் ரகசிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். அரசியல் பழிவாங்கும் உணர்ச்சியால், பாஸ்போர்ட் அல்லது நீங்கள் இந்தியர் என்பதை நிரூபிக்கும் வேறு ஏதேனும் ஆவணம் வைத்திருந்தாலும், உங்களின் குடியுரிமையைப் பறிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” என அச்சம் தெரிவிக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி – எஸ்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ, “இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இப்போது உங்கள் பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே, அது இந்தியக் குடியுரிமைக்கான சான்று அல்ல என்று கூறுகிறது. ஏற்கனவே, Aadhaar குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும், வாக்காளர் அடையாள அட்டை குடியுரிமைக்கான சான்று அல்ல என்றும், இதுபோன்ற அரசின் பல ஆவணங்கள் இந்தியக் குடியுரிமைக்குச் சான்றாகாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அப்படியானால், எது ஒருவரை இந்தியக் குடிமகன் என்று நிரூபிக்கும் என்பதை அரசு நமக்குச் சொல்ல வேண்டும்.
மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான அரசு, எப்போதும் அவர்களுக்கு வசதியான வகையில் விதிகளைக் கொண்டுவருகிறது. நாளை, நீங்கள் பாஜகவில் உறுப்பினரானால் அதுவே உங்களை இந்தியக் குடிமகன் என்று நிரூபிக்கும் என்று அரசு ஒரு விதியைக் கொண்டுவந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை” என்கிறார்.
அதேபோல சிவசேனா (UBT) எம்எல்ஏ ஆதித்யா தாக்கரே, “குடியுரிமையை நிர்ணயிப்பதற்கான அடிப்படை என்ன? இதை மத்திய அரசு நமக்குச் சொல்ல வேண்டும். முன்னதாக, ஆதார் குடியுரிமைக்கான சான்று அல்ல என்று கூறப்பட்டது. இப்போது பாஸ்போர்ட்டும் குடியுரிமைக்கான சான்று அல்ல என்று கூறப்படுகிறது. இதுவும் இல்லை, அதுவும் இல்லை, வாக்காளர் அடையாள அட்டையும் இல்லை என்றால், பிறகு எந்த அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படும்?” என கேள்வி எழுப்பினார்.
மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “ நாடு சென்று கொண்டிருக்கும் திசை கவலை அளிக்கிறது. வரும் நாட்களில், பாஜக உறுப்பினர் சேர்க்கையே குடியுரிமைக்குச் சமமானதாக மாறிவிடுமோ என்று தோன்றுகிறது. அதுதான் பலருக்கும் ஏற்படும் பிம்பமாக உள்ளது.
பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 6(2)(a)-ஐப் பாருங்கள். இது ஒரு இந்தியக் குடிமகனுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட முடியும் என்று கூறுகிறது. ஒரு நபர் குடிமகன் இல்லை என்றால், அவருக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது. அப்படியிருக்க, இந்தச் சூழலை மக்கள் எப்படிப் புரிந்துகொள்வது? …பிறப்புச் சான்றிதழ் போதுமான சான்று அல்ல.. ஆதார் போதுமான சான்று அல்ல, வாக்காளர் அடையாள அட்டையும் போதுமான சான்று அல்ல என்று நம்மிடம் கூறப்படுகிறது. அப்படியானால், எதுதான் தகுதியான சான்று? இதுதான் குடிமக்கள் எழுப்பும் கேள்விகள், இதற்கு தெளிவான பதில்கள் தேவை” என்கிறார்.
முன்னாள் தூதர் தீபக் வோஹ்ரா, “எனக்கு அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு பேத்திகள் உள்ளனர். அவர்கள் அங்கு பிறந்ததால், அவர்களிடம் அமெரிக்க பாஸ்போர்ட் உள்ளது. அவர்களின் தந்தை பிரிட்டிஷ் குடிமகன், எனவே அவர்கள் பிரிட்டிஷ் நாட்டினர். அவர்களின் தாய் இந்தியர், எனவே அவர்கள் [Overseas Citizen of India – OCI] அந்தஸ்து கொண்டுள்ளனர். மூன்று பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ள அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்? இது மிக முக்கியமான கேள்வி. அவர்களின் குடியுரிமை என்ன? அவர்கள் அங்கு பிறந்ததால், அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள் என்று நான் நம்புகிறேன்” என பதில் சொல்கிறார்.
வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே அளித்த பேட்டியில், “பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் (Travel Document) மட்டுமே. இது ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்பதற்கான இறுதிச் சான்று (Conclusive proof) அல்ல. ஒரு நபருக்குப் பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால், அவர் இந்தியக் குடிமகனாக இருக்க வாய்ப்புள்ளது என்ற ‘ஊகத்தை’ (Presumption of citizenship) மட்டுமே அது வழங்குகிறது.
இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் அதன் திருத்தங்கள் குடியுரிமையைத் தீர்மானிக்கின்றன. 1987-க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்களுக்குக் குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் இல்லை.
ஒருவரின் பெற்றோர் சட்டவிரோதக் குடியேறியவராக (Illegal immigrant) இருந்தால், அந்த நபருக்குக் குடியுரிமை தானாகக் கிடைக்காது என்று 2002-ம் ஆண்டுத் திருத்தம் கூறுகிறது.
குடியுரிமை தொடர்பான சர்ச்சைகள் எழுந்தால், நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் (Tribunals) தீர்ப்பே இறுதியானது. எந்த ஒரு அரசு அமைப்பும் ஒருவருக்குக் குடியுரிமை இருப்பதாக ‘இறுதிச் சான்றிதழை’ வழங்கவில்லை” என்கிறார்.
பாஸ்போர்ட்- சில கேள்வி- பதில்களும் வாதங்களும்
வெளிநாட்டு குடியுரிமை பெற்ற பிறகு ஏன் இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்?
- இந்தியச் சட்டப்படி, ஒரு நபர் தானாக முன்வந்து வேறு நாட்டு குடியுரிமையைப் பெற்றால், அவரது இந்தியக் குடியுரிமை உடனடியாக ரத்தாகிவிடும். இரட்டைக் குடியுரிமைக்கு இந்தியாவில் இடமில்லை என்பதால், அந்த நபரிடம் இருக்கும் இந்திய பாஸ்போர்ட்டைத் தொடர்ந்து வைத்திருப்பது சட்டப்படி குற்றம். எனவே, அதிகாரப்பூர்வ பதிவுகளைப் புதுப்பிக்கவும், ‘ஒப்படைப்புச் சான்றிதழ்’ (Surrender Certificate) பெறவும் இது கட்டாயமாகும்.
பாஸ்போர்ட் வழங்கும் முன் ஏன் காவல் துறை விசாரணை (Police Verification) அவசியம்?
- ஒரு விண்ணப்பதாரரின் அடையாளம், முகவரி மற்றும் பின்னணியை உறுதி செய்யவும், போலியான விண்ணப்பங்களைத் தடுக்கவும், தேசிய பாதுகாப்பு கருதியும் காவல் துறை விசாரணை நடத்தப்படுகிறது.
இந்திய அரசு இந்தியரல்லாதவர்களுக்கும் பாஸ்போர்ட் வழங்குகிறதா?
- ஆம், பாஸ்போர்ட் சட்டத்தின் பிரிவு 20-ன்படி, பொது நலன் கருதி விதிவிலக்கான மற்றும் அரிதான சூழல்களில், இந்தியக் குடிமகன் அல்லாதவர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட் வழங்க அரசுக்கு அதிகாரம் உண்டு. இது பயணத்தை எளிதாக்க மட்டுமே உதவும்; இது அந்த நபரை இந்தியக் குடிமகன் ஆக்கிவிடாது.
பாஸ்போர்ட் ஏன் அரசின் சொத்து?
- பாஸ்போர்ட் என்பது இந்திய நாட்டின் இறையாண்மையைப் பிரதிபலிக்கும் ஆவணம். சட்டத்தின்படி, இது எப்போதும் மத்திய அரசின் சொத்தாகவே கருதப்படுகிறது. இதனால்தான் அரசால் இதனை ரத்து செய்யவும் அல்லது பறிமுதல் செய்யவும் முடிகிறது.
குடியுரிமைக்கான ஒரே ஆவணம் எது?
- இதுவே இப்போதைய மிகப்பெரிய கேள்வி. இந்தியாவில் ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே ஒரு ஆவணம் என்று எதுவுமில்லை. ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு போன்றவை அன்றாடத் தேவைகளுக்கும் பயணத்திற்கும் பயன்படுகின்றன.
இந்த கேள்வி- பதில்கள் நமக்கு சொல்ல வருவது…
பாஸ்போர்ட் வெறும் பயண ஆவணம் மட்டுமே
ஒருவரை இந்தியர் என்று அடையாளம் காட்ட பாஸ்போர்ட் பயன்படுத்தப்பட்டாலும், சட்டரீதியாக அது ஒருவருடைய குடியுரிமையை உறுதிப்படுத்தும் இறுதிச் சான்றிதழ் (Conclusive Proof) அல்ல; அது சர்வதேச எல்லைகளைக் கடந்து பயணம் செய்வதற்கான ஒரு அனுமதிச் சீட்டு மட்டுமே.
குடியுரிமைக்கான சட்டப்பூர்வ வரையறை
இந்தியக் குடியுரிமை என்பது 1955-ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின்படி மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பாஸ்போர்ட் வைத்திருப்பது அந்த நபர் இந்தியக் குடிமகன் என்பதற்கான வலுவான ஆதாரமாக இருக்கலாம், ஆனால் அது குடியுரிமைச் சட்டத்தின் விதிகளுக்கு மேலானதல்ல.
அரசுக்குச் சொந்தமான ஆவணம்
பாஸ்போர்ட் என்பது தனிநபரின் சொத்து அல்ல, அது மத்திய அரசின் சொத்து. எனவே, குடியுரிமை இழப்பு போன்ற சூழல்களில் அதைத் திரும்பப் பெறவும், ரத்து செய்யவும் அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. இது பாஸ்போர்ட்டின் தற்காலிகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது.
குடியுரிமையை நிரூபிக்க ஒற்றை ஆவணம் இல்லை
இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு நபர் இந்தியக் குடிமகன் என்பதை நூறு சதவீதம் உறுதிப்படுத்தும் ஒரே ஒரு பொதுவான ஆவணம் (Universal Proof) என்று எதுவுமில்லை. பாஸ்போர்ட், ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை வெறும் அடையாளங்களே தவிர, அவை குடியுரிமைச் சட்டத்திற்கு ஈடாகாது.
நிர்வாக நடைமுறை Vs. சட்டப்பூர்வ அந்தஸ்து
காவல் துறை விசாரணை மற்றும் பாஸ்போர்ட் ஒப்படைப்பு போன்றவை பயணத் தகுதியை உறுதிப்படுத்தும் நிர்வாக நடைமுறைகளே தவிர, அவை குடியுரிமைக்கான உறுதியான சான்றுகள் அல்ல.
தீர்வுதான் என்ன?
இத்தகைய சர்ச்சைகள் ஏற்படும் போது நீதிமன்றங்கள் அல்லது தீர்ப்பாயங்களின் தீர்ப்பே குடியுரிமையை முடிவு செய்யும் இறுதி அதிகாரமாகும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.
