தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாங்கப்பட்ட concu திரமிசுவின் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல்வரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆனால் அவரது தோழியான திரிஷா பிறந்தநாளன்று சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. வழக்கமாக ஏதாவது ஒரு கேப்ஷனோடு த்ரிஷா வெளியிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகும்.
இந்தமுறை 22ஆம் தேதி அவர் எந்த பதிவும் வெளியிடவில்லை. அவர் பதிவு வெளியிட்டால், கண்டிப்பாக சர்ச்சை உருவாகும் என தவெக கட்சியினரும் சற்று பதற்றமாகவே இருந்தனர். அதேசமயத்தில் த்ரிஷா, விஜய்யை அன்ஃபாலோ செய்துவிட்டார் என்ற தகவலும் வைரலானது.
இந்தசூழலில் ஜூன் 23ஆம் தேதி மாலை வாழ்த்துப்பதிவை வெளியிட்டார் த்ரிஷா. அப்போது முதல் இன்று வரை அந்த புகைப்படத்தை வைத்து பல்வேறு கருத்துகளும், யூகங்களும், கமெண்டுகளும் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பதிவு இன்ஸ்டாகிராமில் மிக வேகமாக 50 லட்சம் லைக்குகளையும், 31 லட்சம் ஷேர்களையும், 53.8 ஆயிரம் ரீபோஸ்டுகளையும் பெற்றது.
இது உண்மையான போட்டோவா… இல்லை ஏஐ -ஆ எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
அந்த டேபிளில் ஒரு சொல்போன் உள்ளது. இன்று முதல்வர் விஜய் புதிய பேருந்துகளை தொடங்கி வைத்து பயணிக்கும் போது தனது செல்போனில் செல்பி வீடியோ எடுக்கிறார். இந்தசூழலில் அந்த டேபிளில் இருந்த செல்போன் தான் விஜய்யின் கையில் இருக்கிறது. இது அவருடைய போன்தான்… அப்படியானால் அந்த போட்டோ உண்மைதான் என இன்று வரை அந்த ஒரே ஒரு போட்டவை வைத்து அத்தனை ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
அதிலும் குறிப்பாக போட்டோவில் இடம்பெற்றுள்ள கேக்குகள் மற்றும் திரமிசுவை வைத்து பதிவுகள் போடப்படுகின்றன. இது என்ன ஃப்லேவர்.. எங்கு வாங்கியது எனவும் ஆராய்ந்துள்ளனர்.
அதன்படி, திரமிசுவை ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ‘கான்கு’ பேஸ்ட்ரி கடையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
மாம்பழ வெண்ணிலா கேக், சென்னையைச் சேர்ந்த ‘தி ஸ்டபர்ன் பேக்கர்’ தன்வி பொக்காரியா தயாரித்தது.
ஸ்ட்ராபெரி ஒயிட் சாக்லேட் கேக், சென்னையைச் சேர்ந்த ‘தி செஃப் ஹவுஸ்’ தயாரித்தது என்பது தெரியவந்துள்ளது.
இதில் மாம்பழ வெண்ணிலா கேக்கை தயார் செய்து கொடுத்த தன்வி தி இந்துவிடம் கூறுகையில், ”இந்த ஆர்டருக்கான அழைப்பு தனக்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்தது. ஆனால் அது யாருக்காக என்று தனக்குத் தெரியாது. தற்போது எங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளது. புதன்கிழமை மதியத்திலிருந்து மாம்பழ கேக்கிற்காக மட்டுமே எங்களுக்கு ஆர்டர்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதன் விலை ரூ. 3,500 ஆகும். தற்போது 40க்கும் மேற்பட்ட மாம்பழ வெண்ணிலா கேக் ஆர்டர்கள் குவிந்துள்ளன” என்றார்.
அதுபோன்று ஹைதராபாத்தில் உள்ள கான்கு கடைகளில், குறிப்பாக கொண்டாப்பூர் கிளையில், திரமிசு ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.
மாம்பழ சீசனில் திரமிசுவின் ஆர்டர்கள் திடீரென அதிகரித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த கான்கு குழுவினர், இதுபற்றி விசாரித்த போது அது த்ரிஷாவின் பதிவினால் என்பது தெரியவந்துள்ளது.
அதாவது, இன்ஸ்டாகிராமில் 97 லட்சம் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள த்ரிஷா, தனது பதிவில் இந்த டெசர்ட் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ரசிகர்கள் அதன் பேக்கேஜிங்கை வைத்தே அதை கண்டுபிடித்து, ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்து, கான்கு பேஸ்ட்ரியை டேக் செய்துள்ளனர்.
கான்கு பேஸ்ட்ரி உரிமையாளர் சுவாதி தனேஜா கூறுகையில், ”ஆர்டர்களும், அழைப்புகளும் வந்துகொண்டே இருக்கிறது. எங்கள் குழுவினர் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். ஹைதராபாத்தில் உள்ள எங்களது 11 கிளைகளில் 40% விற்பனை அதிகரித்துள்ளது. திரிஷா பதிவிட்ட திரமிசு ஹைதராபாத் விமான நிலையக் கிளையிலிருந்து வாங்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிராண்டை ஹைதராபாத்தைச் சேர்ந்த கணவன் மனைவியான சாஹுல் மற்றும் சுவாதி தனேஜா ஆகியோர் இணைந்து 2012ஆம் ஆண்டு உருவாக்கியுள்ளனர். ஐடிசி காகத்தியாவுக்கு அருகில் ஒரு சிறிய இடத்தில் இந்த பேஸ்ட்ரி கடையாகத் தொடங்கினர். கேக் செய்வது முதல் சுத்தம் செய்வது வரை அத்தனை வேலைகளையும் இருவரும் மட்டுமே செய்து வந்துள்ளனர். தற்போது இவர்களது கடை மும்பை, பெங்களூருவுக்கு விரிவடைந்திருக்கும் நிலையில், விரைவில் சென்னையிலும் தொடங்க வேண்டுமென உணவு பிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
