முதல்வர் விஜய்க்காக போக்குவரத்தை நிறுத்தியதற்கு எதிராக போலீசாருடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஜூன் 25-ந் தேதி போக்குவரத்துத் துறை சார்பில் 127 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 300 புதிய பேருந்துகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 29A வழித்தட புதிய பேருந்தில் முதல்வர் விஜய் பயணம் செய்தார்.
இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலை உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடும் வெயிலில் கடற்கரை சாலையில் நிறுத்தப்பட்டதால் கொந்தளித்த பொதுமக்கள், போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, “எங்களுக்கு எந்த வேலையும் இல்லையா..?” எனவும் பொதுமக்கள், போலீசாரிடம் கேள்வி எழுப்பினர். இதனால் சென்னை மெரினா கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் பயணிக்க போலீசார் அனுமதித்தனர்.
