தமிழக முதல்வர் விஜய், அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு நாளை ஆகஸ்ட் 7-ந் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய்- சங்கீதா திருமணம் 1999-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
சங்கீதா, கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 26-ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதனையடுத்து ஏப்ரல் 20-ந் தேதி முதல் கட்ட விசாரணை நடந்தது. அப்போது இரு தரப்பினரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சுஜாதா உத்தரவிட்டிருந்தார். ஆனால் இரு தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, பதில் மனுத் தாக்கல் செய்யக் கூடுதல் அவகாசம் வேண்டும் என விஜய் தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து ஜூன் 15-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 15-ந் தேதி நடந்த விசாரணையில், சங்கீதா தரப்பில் வக்காலத்து தாக்கல் செய்யப்படாதது குறித்தும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கான மனுவில் மின்னஞ்சல் முகவரி குறிப்பிடப்படாதது குறித்தும் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. அத்துடன் விவாகரத்து கோரியுள்ள இரு தரப்பினரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீதிபதி சுஜாதா கருத்து தெரிவித்தார்.
அப்போது விஜய்- சங்கீதா இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் நேரில் ஆஜராவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கல்களைக் கருத்தில் கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்று வழக்கை ஆகஸ்ட் 7-ந் தேதிக்கு நீதிபதி சுஜாதா ஒத்திவைத்தார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் விசாரணையின் போது முதல்வர் விஜய், மனைவி சங்கீதா இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக வாய்ப்புள்ளது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் விஜய் நாளை ஆஜராகக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
