“மாற்றம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு “ஏமாற்றம்” கொடுத்திருக்கிறார்கள் என்று திமுக முன்னாள் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வினோத் தாக்கல் செய்த இந்த பட்ஜெட் குறித்து முன்னாள் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், இலவச மின்சாரம் என எந்தவொரு அறிவிப்பும் இல்லாத வெற்று பட்ஜெட்
புதிய திட்டங்கள் எதுவுமில்லை, ஏற்கனவே ஒதுக்கிய நிதியும் குறைப்பு
தவெக அரசின் இன்றைய வேளாண் பட்ஜெட்டை சட்டமன்றத்தில் உட்கார்ந்து கேட்டபோது, நாங்கள் எழுதிய புத்தகத்தைப் படிக்கிற மாதிரி ஒரு உணர்வு ஏற்பட்டது. மாற்றம் வேண்டும், மாற்றம் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர். மாற்றம் என்றால் என்ன?
நாங்கள் ரூ.4,000 கொடுத்திருந்தால், நீங்கள் ரூ.10,000 கொடுக்க வேண்டும். நாங்கள் 50 சதவீத மானியம் கொடுத்திருந்தால், நீங்கள் 100 சதவீத மானியம் கொடுக்க வேண்டும். அதுதான் மாற்றம். ஆனால், இந்த பட்ஜெட்டில் அப்படிப்பட்ட புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. அதே திட்டங்கள், அதே அறிவிப்புகள், அதே நடைமுறைகள்தான் தொடர்கின்றன.
தேர்தலுக்கு முன்பு திருவாரூரில் பேசும்போது, “அடுத்த ஜென்மம் இருந்தால், நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டும்” என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் கூறினார். அப்படி வசனம் பேசி, மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள். அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில்தான் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இன்று அவர்கள் முதலமைச்சராக இருந்து முதல் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த பட்ஜெட்டை பார்த்தால், நாங்கள் கடந்த காலத்தில் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களே இதில் மீண்டும் இடம்பெற்றிருக்கின்றன.

உதாரணமாக, ஆதிதிராவிடர் விவசாயக் குடும்பங்களுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்கும் திட்டத்தை நாங்கள் அறிவித்து செயல்படுத்தினோம். ஆண் விவசாயி என்றாலும், பெண் விவசாயி என்றாலும், 70 சதவீத மானியத்தில் கருவிகள் வழங்கினோம். 2,125 கருவிகள் அந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. இப்போது அதே திட்டத்திற்குப் பெயரை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். திட்டத்தின் உள்ளடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. இதுதான் இந்த பட்ஜெட்டின் நிலை. நாங்கள் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இருந்த திட்டங்களையே, வரி கூட மாறாமல் இந்த பட்ஜெட்டில் சேர்த்திருக்கிறார்கள். இதற்கு இதுவே ஒரு உதாரணம்.
அதேபோல, உணவுத் தானிய உற்பத்தி பற்றி இந்த அரசு 125 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு என்று அறிவித்திருக்கிறது. ஆனால், எங்களுடைய ஆட்சியில் 130 லட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானிய உற்பத்தியை எட்டியிருக்கிறோம்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார மானியத்தை எடுத்துப் பார்த்தால், எங்களுடைய ஆட்சியில் ரூ.8,180 கோடி ஒதுக்கீடு செய்திருந்தோம். இப்போது இந்த அரசு ரூ.7,432 கோடி என்று அறிவித்திருக்கிறது.
இதுவே ஒதுக்கீடு குறைந்திருக்கிறது என்பதற்குச் சான்று.
எங்களுடைய தலைவர், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், 5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவித்து, அந்த இலக்கை நிறைவேற்றினார். ஆனால், அந்தத் திட்டம் இந்த வேளாண் பட்ஜெட்டில் எங்கும் இடம்பெறவில்லை.
டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.160 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு வழங்கப்படும் என்று நாங்கள் அறிவித்திருந்தோம். ஆனால், இந்த அரசு ரூ.134 கோடி மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.
அதேபோல, மானாவாரி நில விவசாயிகள் கோடை உழவு செய்து சாகுபடியை அதிகரிக்க மானியத் திட்டம் எங்களுடைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அதற்காக ரூ.246 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அந்தத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
இப்போது “மண் காப்போம், மண்வளம் காப்போம்” என்ற பெயரில் ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். ஆனால், எங்களுடைய ஆட்சியில் அதற்காக ரூ.142 கோடி ஒதுக்கீடு செய்திருந்தோம். இப்போது ரூ.122 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.20 கோடி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீட்டு திட்டத்தை எடுத்துப் பார்த்தாலும் அதே நிலைதான். மாநில அரசின் பங்களிப்பாக எங்களுடைய ஆட்சியில் ரூ.841 கோடி ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால், இப்போது அறிவிக்கப்பட்டிருப்பது அதைவிடக் குறைவாக உள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டிய முக்கியமான திட்டத்தில்கூட ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோள சாகுபடிக்காக எங்களுடைய ஆட்சியில் ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்திருந்தோம். இப்போது ரூ.36 கோடி மட்டுமே அறிவித்திருக்கிறார்கள். இதிலும் ஒதுக்கீடு குறைந்திருக்கிறது.
கிராம வளர்ச்சித் திட்டம் பற்றியும் எந்த புதிய அறிவிப்பும் இல்லை. எங்களுடைய ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்தத் திட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் அதைப்பற்றிய எந்தத் திட்டமும் இடம்பெறவில்லை.
விதை கொள்முதல் திட்டத்திலும் அதே நிலைதான். எங்களுடைய ஆட்சியில் 12 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தோம். ஆனால், இந்த அரசு 7,700 மெட்ரிக் டன் என்ற அளவையே நிர்ணயித்திருக்கிறது.
ஆக, “மாற்றம், மாற்றம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த வேளாண் பட்ஜெட்டில் மாற்றத்தை அல்ல; விவசாயிகளுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார்கள். எந்த புதிய திட்டமும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை எடுத்துக்கொண்டாலும் அதே நிலைதான். எங்களுடைய ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் சுமார் 77 ஆயிரம் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. ஆனால், இந்த பட்ஜெட்டில் அதற்கான ஒதுக்கீடும் குறைவாகவே உள்ளது.
அதேபோல, நம்மாழ்வார் அவர்களின் பெயரில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு விருது வழங்கும் திட்டத்தை எங்களுடைய ஆட்சியில் செயல்படுத்தினோம். சிறந்த விளைச்சலைப் பெற்ற விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில்தான் அந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது அதே திட்டத்தை வேறு பெயரில் அறிவித்திருக்கிறார்கள். பெயர் மட்டும் மாறியிருக்கிறது; திட்டத்தின் நோக்கமும், செயல்பாடும் அதேதான். நான் ஏற்கனவே சொன்னது போல, இது “ஸ்டிக்கர்” ஒட்டிய மாற்றம்தான்; உண்மையான மாற்றம் அல்ல.
நெல்லுக்கு திமுக ஆட்சியில் சன்ன ரகத்திற்கு ரூ.2,545 வரை வழங்கினோம். ஆனால், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.3,500 கொடுப்போம்” என்று தேர்தலுக்கு முன்பு சொன்னார்கள். இப்போது அந்த அறிவிப்பு எங்கே? பட்ஜெட்டில் அதைப்பற்றி எதுவும் இல்லை. அதேபோல கரும்பு விவசாயிகளுக்கும் ரூ.4,500 வழங்குவோம் என்று கூறினார்கள். அதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு மீண்டும் ஏமாற்றம்தான் கிடைத்திருக்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தஞ்சாவூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பாதுகாப்பான நெல் கிடங்குகளை எங்களுடைய ஆட்சியில் கட்டினோம். நெல் பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த பட்ஜெட்டில் புதிய கிடங்குகள் அமைப்பது பற்றியோ, நெல் கொள்முதல் மையங்களை வலுப்படுத்துவது பற்றியோ எந்த அறிவிப்பும் இல்லை. அதேபோல டெல்டா விவசாயிகளுக்காக ஏதாவது சிறப்பு நிவாரணம், குறுவை சாகுபடிக்கான உதவித் தொகை அல்லது வறட்சி நிவாரணம் அறிவிப்பார்கள் என்று விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அதுபற்றியும் எந்த அறிவிப்பும் இல்லை.
இன்று டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பல இடங்களில் சாகுபடியே தொடங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் போராட்டமும் நடத்தினோம். பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தோம்.
கலைஞர் அவர்கள் தொடங்கிய வட்டியில்லா கூட்டுறவுக் கடன் திட்டத்தை, எங்களுடைய ஆட்சியில் மேலும் விரிவுபடுத்தினோம். ஒன்பது மாதங்களுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால் வட்டி கிடையாது என்ற சலுகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால், பல விவசாயிகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. காலக்கெடு தாண்டிவிட்டால் முழு வட்டியும் விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது விவசாயிகளுக்கு மேலும் சுமையாக மாறிவிடும்.
இப்போது பல இடங்களில் போர்பாசனத்தையே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான மும்முனை மின்சாரம் கூட முறையாக கிடைப்பதில்லை. எங்களுடைய ஆட்சியில் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இப்போது நிலைமை என்ன? எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று விவசாயிகளுக்கே தெரியாத சூழல். மோட்டார் இயக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளில் இந்தப் பிரச்சினை மிகவும் கடுமையாக இருக்கிறது.
காவிரி என்பது அரசியல் பிரச்சினை அல்ல; தமிழ்நாட்டு விவசாயிகளின் உயிர் பிரச்சினை. கர்நாடகாவில் பாருங்கள். தண்ணீர் பிரச்சினை என்றால், அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாக நிற்கிறார்கள். ஆளும் கட்சியா, எதிர்க்கட்சியா என்று பார்க்க மாட்டார்கள். மாநிலத்தின் உரிமைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் அந்த ஒற்றுமை இருக்கிறதா? அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டாமா? அனைவரின் கருத்தையும் கேட்டு, ஒருமித்த முடிவை எடுக்க வேண்டாமா? ஆனால் அதை கூட செய்ய மறுக்கிறது இந்த அரசு. “மாற்றம்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு “ஏமாற்றம்” கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
