தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும் – உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

காவிரி விவகாரம், பயிர்கடன் உள்ளிட்ட விவகாரங்களில் நாளை நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பும் கேள்விகளுக்கு தைரியம் இருந்தால் முதல்வர் வாய் திறந்து பதில் சொல்லட்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 6) தாக்கல் செய்யப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது பேசிய அவர் கூறுகையில், “இன்றைக்கு த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதை பட்ஜெட் என்று சொல்வதை விட, முதலமைச்சருக்கு முழுக்க முழுக்க ஜால்ரா அடித்து, ஒரு மிகப்பெரிய புகழுரையை அமைச்சர் அவர்கள் சபை மரபுகளை மீறி, இந்தச் செயலைச் செய்துள்ளார்.

எந்தப் புது திட்டமும் இல்லை

வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்றால், அதில் எதுவும் கிடையாது. இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்று பார்த்தால், வேளாண் பட்ஜெட்டில் எந்தப் புது திட்டத்தையும் இந்த ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை.

ADVERTISEMENT

எத்தனையே பிரச்சினைகள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு, கடந்த மூன்று மாதங்களாக, `மேகதாது அணை பிரச்சினை’, பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை. இந்த ஆட்சி அமைந்த கடந்த மூன்று மாதங்களாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான். எனவே, அவர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் விதமாக, இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் இன்றைக்கு எங்கள் தலைவரின் உத்தரவின் பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்புச் சட்டை அணிந்து, எங்கள் எதிர்ப்பை இந்த அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்.

இந்த பட்ஜெட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நேற்றைய தினம் போலத்தான் இன்றைக்கும், திராவிட முன்னேற்றக் கழக அரசின், திட்டங்களையெல்லாம் பெயரை மாற்றி, அதற்கு முன்பு ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து, அவர்கள் கட்சியின் பெயருடைய வார்த்தையை மட்டும் சேர்த்து, புதுத் திட்டம் போல சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். எனவே, இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது.

ADVERTISEMENT

வாக்குறுதி – மக்கள் ஏமாற்றம்!

குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியின் போது முதலமைச்சர் சொன்ன முக்கியமான ஒரு வாக்குறுதி, 5 ஏக்கர் வரைக்கும் நிலம் வைத்திருக்கக்கூடிய எல்லோருக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று எல்லா இடத்திலும், இந்த வாக்குறுதியைச் சொல்லித்தான் மக்களை ஏமாற்றினார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதுவுமே செய்யவில்லை. முதலில் என்ன சொன்னார்? 50,000 ரூபாய் வரைக்கும் கடன் தள்ளுபடி என்றார். பிறகு எங்களுடைய கோரிக்கை, விவசாயிகளுடைய கோரிக்கைகளையெல்லாம் ஏற்று, அதை 75,000-ஆக மாற்றினார். ஆனால், இன்றைக்கு விவசாயிகள் நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழுக்கடன் தள்ளுபடி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான பதிலையும் வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாயைத் திறந்து சொல்லவில்லை.

மேகதாது அணை விவகாரம் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு சீரியஸாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய நீரை, கர்நாடகா அரசு திறக்கவில்லை. `திறக்க முடியாது, கொடுக்க முடியாது’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள்.

கர்நாடகாவுக்கு வராதீர்கள்

முதலமைச்சர் நான் போய் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன்’’ என்றார். ஆனால்,தயவுசெய்து கர்நாடகாவுக்கு வராதீர்கள், நாங்கள் தண்ணீரெல்லாம் கொடுக்க முடியாது’’ என்று அங்கு இருக்கக்கூடிய முதலமைச்சரும் சொல்லிவிட்டார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.. காவிரி விஷயத்தில், மேகதாது அணை விஷயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம் என்று தொடர்ந்து முதலமைச்சருக்கும், இந்த அரசுக்கும் நமது தி.மு.க சார்பாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கும் வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்.

தி.மு.க. என்றும் துணை நிற்கும்

விவசாயிகளுக்கான பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று நாளைக்கு, கேள்வி நேரம் முடிந்தவுடனே ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும், காவிரிப் பிரச்சினை பற்றிப் பேச வேண்டும், விவசாயிகளின் பாதிப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் எங்களுடைய கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.

அப்போது, இது தொடர்பாக இன்னும் விரிவாகப் பல்வேறு கேள்விகளை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் போல, விவசாயப் பெருங்குடி மக்கள் போல நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே விவசாயிகளுக்குத் துணையாக நிற்கும்.

கேள்வி: நீங்கள் என்ன நாடகம் நடத்தினீர்களோ, அதே நாடகத்தைத்தான் த.வெ.க-வும் போடுகிறது என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்: நாடகமா? என்ன நாடகம்?

கேள்வி: நீங்களும் வேளாண் பட்ஜெட் என்று ஒரு நாடகத்தைப் போட்டீர்கள், அவர்களும் அதே நாடகத்தைப் போடுகிறார்கள் என்பது அவருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.

பதில்: நாங்களா தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம்? பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்தோமா? சொல்லுங்கள்.

நாளைக்கு, இவை அனைத்தையும் சட்டமன்றத்தில் பேச இருக்கிறோம். தைரியம் இருந்தால், முதலமைச்சர் எழுந்து இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். நாங்கள் அவையில் பதில் சொல்கிறோம்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share