உதயநிதி ஸ்டாலின் காரில் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்ற சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலக வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது காரை நிறுத்தியிருந்தார். அதன் அருகே அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டமன்ற நிகழ்வுகள் முடிவடைந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்குச் செல்வதற்காக கார் நிறுத்தும் இடத்திற்குச் சென்றார். அப்போது தவறுதலாக உதயநிதியின் காரைத் தனது கார் என எண்ணி ஏற முயன்றபோது, “நமது கார் முன்னால் இருக்கிறது” எனப் பாதுகாவலர்கள் சுட்டிக்காட்டினர். உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து விலகித் தனது காரில் ஏறி வீட்டிற்குப் புறப்பட்டார். இந்தச் சம்பவம் சட்டப்பேரவை வளாகத்தில் கவனத்தை ஈர்த்தது.
ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோதும், இதேபோல உதயநிதியின் காரில் எடப்பாடி பழனிசாமி ஏற முயன்றது குறிப்பிடத்தக்கது.
