தமிழக சட்டசபை வளாகத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை திமுக எம்.எல்.ஏ.க்களே ஓரம் கட்டிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும் போது அவருக்கு பக்கத்தில் திமுக மூத்த அமைச்சர்களுடன் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு நிற்பது வழக்கம்.
சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் குறித்து உதயநிதி செய்தியாளர்களை சந்தித்து தமது விமர்சனங்களை முன்வைத்தார்.
உதயநிதி செய்தியாளர்களை சந்திக்க வரும் முன்னதாக அங்கே நடந்த ‘சம்பவ’ வீடியோதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உதயநிதி, செய்தியாளர்களை சந்திக்க வரும் முன்னரே திமுக எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் ‘மைக்’ முன்பாக நின்று கொண்டனர். அப்போது துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, “எவ்வளவு நாளைக்குதான் சேகர்பாபுவே?” என சப்தமாக பேசியது செய்தியாளர் மைக்குகளில் பதிவானது. உடனே சுதாரித்து கொண்ட மற்றொரு திமுக எம்.எல்.ஏ, “மைக் ஆன் ஆகி இருக்கிறது” என எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து, சில நிமிடங்கள் அங்கே நின்றிருந்த சேகர்பாபு திடீரென அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த வீடியோதான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
