அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் எம்.எல்.ஏ. தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி கூட்டும் அதிமுகவின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்த அணி பங்கேற்பது இல்லை.
பழனியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். அத்துடன் சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் மறுபடியும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 6) சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆனந்தன், செங்கோட்டையனை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி வேலுமணி, “திட்டங்களுக்காக அமைச்சர்களை சந்தித்தோம்” என்றார்.
அதேபோல சிவி சண்முகத்திடம், “அமைச்சர்களை சந்திக்கும் நீங்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்னமும் சந்திக்கவில்லையே?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த சிவி சண்முகம், “அவரை ஏன் நாங்க சந்திக்கனும்? அவருக்கும் எங்களுக்கும் என்ன இருக்கிறது? அவரை ஏன் நாங்க சந்திக்கனும்?” என்றார்.
இதனைத் தொடர்ந்து, ”அதிமுக பொதுச்செயலாளர்- சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவருடன் சேர்ந்தே பயணிக்க முடியாதா?” என செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது குறுக்கிட்ட சி.வி.சண்முகம், ”தேவையற்ற கேள்விகளுக்கு எல்லாம் நான் இப்ப பதில் சொல்ல முடியாது.. புரியுதுங்களா.. விடுங்க” என்றார். சிவி சண்முகத்தின் இந்த பேட்டி அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
