தமிழக வெற்றிக் கழகத்தில் நான் இணைய போகிறேனா என்ற கேள்வியே தவறானது. நாங்கள் எப்போதும் அதிமுக தான் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் ஏற்பட்டதாக எஸ்.பி.வேலுமணி தரப்பில் தெரிவித்தனர். அதே சமயம் சி.வி. சண்முகம் சமரசத்துக்கு வராத நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தங்களின் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் மரகதம் குமாரவேல்,சத்தியபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து அதிமுகவில் பறிக்கப்பட்ட பதவிகள் மீண்டும் வழங்கப்படவில்லை என எஸ்.பி வேலுமணி தரப்பினர் மீண்டும் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதேசமயம் சி.வி. சண்முகம் தற்போது வரை சமரசத்திற்கு வராத சூழலே நீடித்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவைக்கூட்டம் நிறைவடைந்ததும் த.வெ.க பொதுச்செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் மற்றும் செங்கோட்டையனை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் அவரைச் சந்தித்த நிலையில், பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது “அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க-வில் இணைவதாகத் தகவல்கள் வருகிறதே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஏன், அதிமுகவில் இருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லையா? இது போன்ற ஒரு தகவலைப் பரப்பிக்கொண்டே இருக்கிறீர்கள். அதிமுக எங்கள் கட்சி. வாட்ஸ்அப்பில் தேவையில்லாத ஒன்றை பரப்பிக்கொண்டே இருக்கிறீர்கள். அந்த மாதிரியான கேள்வியே இல்லை.
நாங்கள் அன்று திமுகவிற்கு ஆதரவு அளிக்க கூடிய சூழல் உருவாகும் என்ற எண்ணத்தில்தான் த.வெ.க-விற்கு ஆதரவு அளித்தோம். அதிமுக எங்கள் கட்சி. இது போன்ற கேள்விகளைக் கேட்பதே தவறுதான். த.வெ.க அரசு இப்போதுதான் வந்துள்ளது; மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைக் கொண்டு வந்துள்ளோம். கடந்த திமுக ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை. மீண்டும் வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும்; அந்த அடிப்படையில் தான் தற்போது திட்டங்களைக் கேட்கும் வகையில் நாங்கள் அமைச்சரைச் சந்தித்தோம்” என்று தெரிவித்தார்
