தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 6) வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், “பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாதபோது பட்ஜெட் தாக்கல் செய்து என்ன பயன்?” எனக் கேள்வி எழுப்பி ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீர் மூலம் கீழ்பவானி பாசனப் பகுதிகள், காலிங்கராயன், தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய பாசனப் பகுதிகளில் சுமார் 2,47,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 16-ஆம் தேதி பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வரும் சூழலில் உரிய காலத்தில் நீர் திறக்கப்படவில்லை. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மிகக் குறைந்த அளவே நீர் திறக்கப்பட்டதால், அது கடைமடைப் பகுதிகளைச் சென்றடையவில்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் பயிர்களைக் காப்பாற்ற முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டும் சூழலில் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்துவிடக் கோரி, கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பாய், தலையணை மற்றும் கட்டில்களுடன் வந்து தனித்தனியாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வேளையில், தங்களது வாழ்வாதாரப் பிரச்சினையான தண்ணீர் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காணக் கோரி விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
