TN Agri Budget 2026-27 : பட்ஜெட்டை மட்டும் படிங்க.. அமைச்சர் வினோத்துக்கு சபாநாயகர் அட்வைஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். முன்னதாகச் சட்டப்பேரவைக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி ஆகியோருக்குச் சபாநாயகர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் அமைச்சர் வினோத் வேளாண் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

ADVERTISEMENT

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

என்ற திருக்குறளுடன் அமைச்சர் வினோத் பட்ஜெட்டை வாசிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தைத் தரணி போற்றச் செய்து வெற்றித் தமிழகமாக மாற்றம் செய்ய வேண்டும் என்பதையே மனமெங்கும் கொண்டுள்ள மாண்புமிகு முதல்வருக்கும், வெற்றிப் பாதையில் உள்ள முட்களை எல்லாம் மலர்களாகவும் கற்களை எல்லாம் கனிகளாகவும் மாற்றித் தமிழ்நாட்டை முன்னே அழைத்துச் செல்லும் விவசாயிகளுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

பண நாயகத்தைத் தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள். திரைமன்றங்களில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் நாயகன் நீங்கள்தான்! உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழல் ஒவ்வொன்றையும் களை எடுத்து, சமத்துவம் எனும் செடி வளர்த்து, மக்களாட்சி எனும் பெரும் மரத்தைப் பிடித்து நிற்கும் ‘கோட் சூட்’ அணிந்த விவசாயி நீங்கள்!

விசில் என்பது வெறும் ஒலியல்ல, அது பாமரர்களின் மொழி, அது உலகின் பொதுமொழி! விசில் காற்று இசைத்த முதல் ராகம், மனிதன் பயன்படுத்திய முதல் தொலைபேசி! காது கொடுத்துக் கேளுங்கள், விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது, அணியோடு சேரும்போது அகம்பாவம் இருக்காது. ஊரெல்லாம் மாற்றம் ஏற்படுத்தி, ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் ஒருவரும் இல்லை” என்று பேசத் தொடங்கினார்.

ADVERTISEMENT

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து பேச ஆரம்பித்த அமைச்சர் வினோத், “இனி எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி உங்களைப் பற்றியதாக இருக்கும் அல்லது நீங்கள் பேசியதாக இருக்கும்” என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சபாநாயகர், தலையிட்டு வேளாண் நிதிநிலை அறிக்கை என அவை முன் வைத்துள்ள அறிக்கையை மட்டும் விரிவாகப் படிக்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share