தமிழக முதல்வர் விஜய்யை “மீனவ நண்பன்” என புகழ்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டால் மீனவர்கள் குமுறுகின்றனர்.
சட்டசபை தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் மீனவர்களுக்கு 2 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

அதில்,
- மீன்பிடி தடைக் கால நிவாரணத் தொகை ரூ20,000 ஆக உயர்த்தப்படும் (மீன்பிடி தடை காலம் என்பது கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை; மேற்கு கடலோர பகுதிகளில் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை என 61 நாட்கள்- இந்த மீன்பிடி தடை காலத்தில் தற்போது ரூ8,000 வழங்கப்படுகிறது)
- பருவமழை காலங்களில் மீன்பிடிக்க செல்ல முடியாத தருணங்களில் வழங்கப்படும் நிவாரண தொகை ரூ7,000 ஆக உயர்த்தப்படும். (எதிர்பாராத மழை, வெள்ளம், புயல் காலங்களில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலையில் மீனவர்களுக்கு தற்போது ரூ6,000 வழங்கப்படுகிறது).
இந்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில் மீனவர் நலன் குறித்து கூறப்பட்டுள்ளதாவது: மீனவர்களுக்காக குரல் கொடுப்பதிலும், மீனவர்கள் மீது பாசம் காட்டுவதிலும் புரட்சித் தலைவருக்குப் பிறகு உண்மையான மீனவ நண்பனாக இருக்கும் ஒரே தலைவர், முதலமைச்சர் விஜய். அந்த உணர்வின் அடிப்படையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு சமூகநலத் திட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மீனவர்களுக்காக, மீன்பிடிப்பு குறைவு மற்றும் தடைக்கால நிவாரணம், மானிய விலையில் டீசல் மற்றும் மண்ணெண்ணெய், மீனவர்களுக்குத் தேவையான நிலையான உட்கட்டமைப்பினை உருவாக்கும் விதமாக மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள், மீன் பண்ணைகள், மீன்பிடி கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்கும் பொருட்டு தூண்டில் வளைவுகள், அலை தடுப்புச் சுவர்கள் என அனைத்து வகையிலும் இத்தொழில் மேம்பட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பணியில்லா கால உதவித் தொகை உயர்வு
பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு, மாநில அரசு ஒரு குடும்பத்திற்கு 6,000 ரூபாய் என்ற அளவில் பணியில்லாக் காலம் மீன்பிடி உதவித்தொகையாக வழங்கி வருகிறது. இந்த அரசு தற்போது பணியில்லாத கால மீன்பிடி உதவித்தொகையை 6,000 ரூபாயிலிருந்து 7,000 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 1.93 இலட்சம் பாரம்பரிய மீனவர் குடும்பங்கள் பயனடையும். இத்திட்டத்தினை நிறைவேற்றுவதற்காக 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
நமது பாரம்பரிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில், நவீன பதப்படுத்தும் வசதிகள் கொண்ட ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை வாங்கும் மீனவர்களுக்கு, வட்டி மானியம் வடிவிலான நிதியுதவி வழங்கப்படும். இதற்கென நடப்பாண்டில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ரூ20,000 எப்போ சார் கிடைக்கும்?

மீனவர்களுக்கு 2024-ம் ஆண்டுக்கு முன்புவரை மீன்பிடி தடை கால நிவாரணத் தொகை ரூ5,000 மட்டும் வழங்கப்பட்டு வந்தது. முந்தைய திமுக ஆட்சியில் 2024-ம் ஆண்டு முதல் முதல்வர் ஸ்டாலின், இந்த ரூ5,000 என்பதை ரூ8,000ஆக உயர்த்தினார். இதனையே தேர்தல் அறிக்கையில் ரூ20,000 ஆக உயர்த்துவோம் என வாக்குறுதியை அள்ளி வீசியது விஜய்யின் தவெக.
ஆனால் தேர்தல் வாக்குறுதியான “மீன்பிடி தடை காலத்தில்” வழங்கப்படும் ரூ8,000 நிவாரணத் தொகையை ரூ20,000 ஆக உயர்த்துவோம் என்ற அந்த மிக முக்கியமான எதிர்பார்ப்புக்குரிய அறிவிப்பை விஜய் அரசு நிறைவேற்றவில்லை என்பதுதான் மீனவர்களின் குமுறல்.
