தமிகத்தில் எந்த ஆட்சி அமைந்தாலும் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை எப்போதும் குறைத்தது இல்லை. ஆனால் முதன்முறையாக இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் 2026–2027ஆம் ஆண்டுக்கான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) தாக்கல் செய்தார். தவெக அரசின் பட்ஜெட்டில் பெரும்பாலும் திமுக அரசின் திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “நிதித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியுள்ளார் திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக பட்ஜெட்டில் தந்துள்ளது. “மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்குவது குறித்து பட்ஜெட்டில் குறிப்பிடவே இல்லை. தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.
ரூ.48,000 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை ரூ.55,000 கோடியாக உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2.29 லட்சம் கோடி. தற்போது வரி வருவாய் ரூ.2.26 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.” என்பதை சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கெல்லாம் முலாம் பூசி, வேறு பெயரிலே செயல்படுத்தப் பார்க்கிறார்களே ஒழிய, திட்டங்களுக்கான உரிய நிதியைக்கூடப் பெருமளவில் விடுவிக்கவில்லை. உதாரணமாக, ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்’ வேறு பெயரில் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தேர்தல் வாக்குறுதிகளாக அளித்த மகளிர் உரிமைத் தொகை 2500 மற்றும் 6 சமையல் எரிவாயு உருளைகள் போன்ற திட்டங்கள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.
தமிழ் வளர்ச்சித்துறைக்கு இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் கூட அரசாங்கம் அறிவிக்கத் தயாராக இல்லை. தொல்லியல் துறைக்கு வெறும் ரூ.1 கோடி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். இதைக் கொண்டு ‘ அருங்காட்சியகப் பராமரிப்பையோ அகழ்வாராய்ச்சிகளையோ எவ்வாறு செய்ய முடியும்? குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்வது மட்டுமே போதுமானதல்ல.
முக்கியமாக, பொதுவாக எந்த ஆட்சிகள் வந்தாலும் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை எப்போதும் குறைத்தது இல்லை. ஆனால் முதன்முறையாக இந்த ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என இதற்குக் காரணம் கூறுகிறார்கள்.
நிதி பயன்பாட்டில் தாமதம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கலாம். உதாரணமாக, டி.ஆர்.பி போன்ற நியமன முகமைகள் மூலமாக ஆசிரியர்களைத் தேர்வு செய்யும்போது நீதிமன்ற வழக்குகள் குறுக்கிட்டிருக்கலாம் அல்லது இடைக்கால பட்ஜெட்டுக்கு வர வேண்டிய சூழல் இருந்திருக்கலாம். ஆனால், அதைக் காரணம் காட்டி கல்வித்துறைக்கான நிதியைக் குறைப்பது சரியானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
