பட்ஜெட்டில் இடம் பிடித்த ”வெற்றி திட்டங்கள்”!

Published On:

| By Mathi

Vetri Schemes Featured in TN Budget 2026-2027

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல திட்டங்களின் பெயரில் “வெற்றி” என சேர்க்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் “வெற்றி” திட்டங்கள்:

ADVERTISEMENT

வெற்றித் தமிழகம்- தொலைநோக்குத் திட்டங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது, ஒரு கட்சியின் தனிப்பட்ட வெற்றி அல்ல. ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெற்றி அது. மக்களுக்கான பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும் நோக்கத்தில், நமது அரசு, அறம், பொருள் மற்றும் இன்பத்தை நோக்கமாக வைத்து பத்து தூண்களைக் கொண்ட வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்கள் ஆவணத்தினை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், திட்டங்களை, அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தி, அவற்றுக்கான செயல் வடிவம் கொடுத்து வருகின்றது.

ADVERTISEMENT

தேசிய அளவில் பல சமூக-பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணியில் விளங்கும் மாநிலமாக தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தமிழ்நாட்டை வறுமையில்லாத, செழிப்பு மிகுந்த, அனைவருக்கு சமவாய்ப்பினை வழங்கி அதன் மூலம் சமூக நீதியை நிலை நாட்டும் மாநிலமாகவும், 2036ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் உயர்த்தத் தேவையான சமூக-பொருளாதார மற்றும் மனிதவள முதலீடுகளை மேற்கொள்வதற்கு நமது அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்தத் தொலை நோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், அரசு, ” வெற்றித் தமிழகம்- தொலைநோக்குத் திட்டங்கள்” கொள்கை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்தும்.

ADVERTISEMENT

இதில்

  • பெண்களுக்கு அதிகாரமளித்தல்
  • நிர்வாகத்தை மேம்படுத்துதல்
  • அனைவருக்கும் வீடு
  • பாதுகாப்பான குடிநீர் வழங்குதல்
  • வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல்
  • சமூக நீதியைக் காத்தல்
  • பசுமைப் பரப்பை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த முன்னுரிமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த அரசின் முதல் நிதிநிலை அறிக்கை, உண்மையான தொலைநோக்குத் திட்டங்களை அடைவதற்கான பாதையை வழிவகுத்துக் காட்டும்.

வெற்றி மடிக் கணினி திட்டம்

கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி என்பது ஒரு இன்றியமையாத தகவல் தொழில்நுட்பச் சாதனமாக உள்ளது. நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் தங்கள் தொழில்நுட்ப அறிவைப் வளர்த்துக்கொள்ளவும், திறன் மேம்பாட்டுப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளவும், சிறப்பான வழியில் தங்கள் நேரத்தைப் பயன்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு மடிக்கணினி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை உணர்ந்த நமது அரசு, கல்லூரி மாணவர்களுக்காை ‘வெற்றி மடிக்கணினித் திட்டத்தைச்’ செயல்படுத்தும். 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலான இத்திட்டம் கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ஒரு கருவியாக அமையும்.

வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்

தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிநவீன திறன்களைப் பெறுவதை உறுதிசெய்து, அவர்களை வேலைவாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாக உருவாக்குவதுடன், அவர்களிடையே தொழில்முறை ஆர்வத்தையும் வளர்க்கும் நோக்கில், இந்த அரசு ‘வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தை’ அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் 12 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் தொழிற்துறை தேவைக்கேற்ப திறன் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்குப் பணியிடப் பயிற்சி வழங்கப்படும். இப்பணியிடப் பயிற்சிக் காலத்தில், பட்டதாரிகளுக்கும் தொழிற்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கும் மாத உதவித்தொகை வழங்கப்படும். நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்ய ‘வெற்றி தொழில் முறைபவார் திட்டம்’ செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம், பயனாளிகள் மொத்த திட்டச் செலவில் மூலதன மானியமும், வட்டி மானியமும் பெற ஏதுவாக, நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்கு 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்

கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத்துறை விளங்குகிறது. நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்’ கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர். இதற்காக, திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 110 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது

வெற்றி வீடு திட்டம்

இந்த அரசு எதிர்கொண்டுள்ள இடர்பாடுகளில் முதன்மையானது மற்றும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது, ஊரகப் பகுதிகளில் வாழும் வீடற்ற ஏழை குடும்பங்களுக்கு நிலையான வீட்டு வசதியை உறுதி செய்வதாகும். கடந்த முப்பது ஆண்டுகளாக மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், தமிழ்நாடு இன்னும் குடிசைகள் அற்ற மாநிலமாக மாறவில்லை. போதுமான நிதி இல்லாமை, பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் ஏற்படும் சேர்த்தல் மற்றும் நீக்கல் பிழைகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலப் பாக்குறை ஆகியவை இதில் நிலவும் முக்கிய இடர்பாடுகளாக உள்ளன. எனவே, இப்பிரச்சினைக்கு படிப்படியாகத் தீர்வு காணும் விதமாக புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான ‘வெற்றி வீடு திட்டம்’ அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது

வீட்டிற்கான அலகுத் தொகை குறைவாக நிர்ணயிக்கப்படுவதால், உண்மையில் மிகவும் தகுதிவாய்ந்த ஏழை குடும்பங்கள் வீடு வழங்கும் திட்டங்களிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றனர். கூடுதல் செலவை ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்ட குடும்பங்கள்தான் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இதைத் தவிர்க்கும் வகையில், இப்புதிய வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கூரைகளில் வசிப்பவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக வீடு ஒன்றிற்கான அலகுத் தொகையை 3.10 இலட்சத்திலிருந்து 5 இலட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. முதல் ஆண்டிலேயே, 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். தகுதியான குடும்பங்களை அடையாளம் காண்பதற்கு, ஊரக வளர்ச்சித் துறையால் புதிதாக வீடுதோறும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

வெற்றி 150

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம், தமிழ்நாடு திட்டத்தின் புதிய நிதிப் பங்கீட்டு முறையால் மாநிலத்தின் நிதிநிலைக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மொத்த திட்ட நிதியில் மாநில அரசின் பங்களிப்பாக, இதுவரை இல்லாத வகையில் 40 சதவீத நிதியினை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநில அரசிற்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. எனினும், ஊரக ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பெரிதும் சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் இதுவரை இல்லாத அளவிலான 5,057 கோடி ரூபாய் பங்களிப்புடன் மொத்தம் 12,642 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

மேலும், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் அரசின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில், ‘வெற்றி 150’ என்ற முன்முயற்சியை அரசு செயல்படுத்தும். இதன் கீழ், 125 நாட்கள் வேலைவாய்ப்பை நிறைவு செய்துள்ள, நலிவுற்ற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை அரசு வழங்கும். இதன் மூலம், அந்தக் குடும்பங்களுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share