100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை அதிகப்படுத்தப் போவதாக தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இதுபற்றி கூறியுள்ளதாவது: தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டம். தமிழ்நாடு திட்டத்தின் புதிய நிதிப் பங்கீட்டு முறையால் மாநிலத்தின் நிதிநிலைக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மொத்த திட்ட நிதியில் மாநில அரசின் பங்களிப்பாக, இதுவரை இல்லாத வகையில் 40 சதவீத நிதியினை ஏற்க வேண்டிய கட்டாயம் மாநில அரசிற்கு ஏற்பட்டுள்ளது.
மாநில அரசு இந்த நிதிப் பங்கீட்டு முறையை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது.

எனினும், ஊரக ஏழை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பெரிதும் சார்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் இதுவரை இல்லாத அளவிலான 5,057 கோடி ரூபாய் பங்களிப்புடன் மொத்தம் 12,642 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
மேலும், கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 150 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் அரசின் கொள்கையை நிறைவேற்றும் நோக்கில், ‘வெற்றி 150’ என்ற முன்முயற்சியை அரசு செயல்படுத்தும்.
இதன் கீழ், 125 நாட்கள் (மத்திய அரசின் திட்டப்படி 125 நாட்கள்) வேலைவாய்ப்பை நிறைவு செய்துள்ள, நலிவுற்ற மற்றும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலைவாய்ப்பை அரசு வழங்கும். இதன் மூலம், அந்தக் குடும்பங்களுக்கு மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கு திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அரசு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
