2026-27-ம் ஆண்டில் ரூ.1,73,445 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளாக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 5-ந் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையின் இறுதியில் “பொதுக் கடன் – பொறுப்புகள்” பற்றி கூறப்பட்டுள்ளதாவது: கடன்களைப் பெறுதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான மதிப்பீடுகள், இந்திய அரசு நிர்ணயித்த ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில் இறுதிசெய்யப்பட்டுள்ளன.
பொதுக்கடன்களைப் பொறுத்தமட்டில் இவ்வரசு
- 2026-27ல் மொத்தம் 1,73,445 கோடி ரூபாய் கடன் பெறவும்
- 51,971 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது.
பொது கணக்கின் கீழுள்ள பொறுப்புகளும் பொதுக் கடனுடன் சேர்த்து கணக்கிடப்படுகின்றன.
2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருந்த நிகர பொதுக்கடன் மற்றும் பொது கணக்கு பொறுப்புகள் 1,21,653 கோடி ரூபாய்.
2026-27 ஆம் ஆண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 1,20,964 கோடி ரூபாயாக உள்ளது.
இதன் விளைவாக, 31 மார்ச் 2027ஆம் நாளில் நிலுவைப் பொறுப்புகள் 10,98,768 கோடி ரூபாயாக இருக்கும்.
இது 2026-27ல் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்த நிலுவைப் பொறுப்புகளின் விகிதம் 27.01 சதவீதமாகும்.
எனினும், இந்தத் தொகையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்ட பணிகளுக்காக பெறப்பட்ட 9,523 கோடியே ரூபாயும் அடங்கும்.
இது மத்தியப் பிரிவுத் திட்டமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒன்றிய அரசின் கணக்குகளில் தேவையான புத்தகச் சரிகட்டல்கள் மேற்கொள்ளப்படும்போது, பொதுக் கடன் 9,523 கோடி ரூபாய் குறையும்.
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்த நிலுவைப் பொறுப்புகளின் விகிதமானது 2027-28ல் 26.57 சதவீதமாகவும், 2028-29ல் 26.10 சதவீதமாகவும், மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், தனது நிதி ஒருங்கிணைப்பு வழித்திட்டத்தின் ஒரு பகுதியாக மாநிலம் கடன் நிலைத்தன்மையை பேண இலக்கு கொண்டுள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
