நிதிச் சீரமைப்புக்கு 2 ஆண்டுகள் தேவை – பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை குறித்துப் பேசிய அவர், தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.10.98 லட்சம் கோடியாக உள்ளது என்றும், அரசின் சொந்த வரி வருவாய் ரூ.2,54,575 கோடியாக மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், 2026–27 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.55,775 கோடியாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும்மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து அமைச்சர் பேசுகையில்,”குறைந்தபட்ச வருவாயும், கசியும் ஓட்டைகளும் கொண்ட கருவூலப் பெட்டியே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிதி நிர்வாகத்தை மீண்டும் சரியான ஒருங்கிணைப்புப் பாதைக்குக் கொண்டு வரக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்.

முதலமைச்சரின் தலைமையின் கீழ் அரசியல் களத்தில் நாம் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கண்டுள்ளோம்; இந்த நிதிச் சீரமைப்பு முயற்சியிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ஐந்தாண்டு பதவிக் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு குறுகிய கால அரசியல் ஆதாயங்களில் கவனம் செலுத்திய முந்தைய அரசைப் போல் அல்லாமல், நிலையான கொள்கைகள் மற்றும் தூய்மையான, திறமையான நல்லாட்சியை வழங்குவதே இந்த அரசின் நோக்கம் என்றார். இதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியான வளர்ச்சியை நோக்கி மாநிலத்தைக் கொண்டு செல்ல முடியும் என்று அரசு நம்புவதாகவும், சமச்சீரான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share