பட்ஜெட்டில் என்ன இருக்கு? ஜீரோ மார்க்தான்.. ஒரு தேர்தல் வாக்குறுதியைகூட நிறைவேற்றலையே.. இபிஎஸ் விளாசல்

Published On:

| By Mathi

EPS Budget 2026 27

தேர்தலின் போது தவெக அளித்த எந்த தேர்தல் வாக்குறுதியையும் பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இந்த நிதி நிலை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை; தவெக ஆட்சியின் 85 நாட்களில் எந்த புதிய திட்டமும் அறிவிக்கவில்லை. வெறும் வசனத்தை பேசியே காலத்தை ஓட்டுகின்றனர். ரீல்ஸ், மீம்ஸ்தான் சாதனையாக பேசுகின்றனர்.

ADVERTISEMENT

தேர்தல் நேரத்தின் போது பெண்களுக்கு மாதம் ரூ2,500 தருவோம்; வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ4,000 வழங்குவோம் என விஜய் வாக்குறுதி அளித்தார். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ20,000 வழங்குவோம்; பெண்களுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம்; குடும்பங்களுக்கு ரூ25 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற தேர்தல் கால வாக்குறுதிகள் எதனையுமே இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றவில்லை.

தவெக ஆட்சிக் காலத்தில் ரூ20,000 கோடி கடன் வாங்கி உள்ளனர். தமிழக அரசின் கடனை எப்படி திருப்பி செலுத்தப் போகிறது தவெக அரசு? ஒரு குழுவை அமைத்துவிட்டால் அந்த குழு எப்படி வருவாயைப் பெருக்கும்? நிதி ஆதாரத்தை பெருக்கும்?

ADVERTISEMENT

கடன் வாங்கித்தான் தவெக அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்த முடியும் என்கிற நிலைதான். அதிமுக, திமுக ஆட்சிக் கால திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது விஜய் அரசு. பட்ஜெட் என்ற பெயரில் பழைய திட்டங்களின் பெயர்களில் “வெற்றி” என்ற பெயரை சேர்த்துவிட்டனர் அவ்வளவுதான்.

அதிமுக ஆட்சிக் கால தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா ஆடு மாடுகள் திட்டம் ஆகியவற்றைதான் செயல்படுத்துகின்றனர். நடந்தாய் வாழி காவேரி திட்டத்துக்கு எங்கே போனது நிதி?

விஜய் அரசின் இந்த பட்ஜெட்டுக்கு ஜீரோ மார்க்தான் கொடுக்க முடியும். இந்த பட்ஜெட்டில் என்னதான் இருக்கிறது? இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share