வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27 பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.134 கோடியில் குறுவை தொகுப்பு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும். கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 30,000 பயனாளிகள் பயன்பெறுவர். இதற்காக ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கால்நடைகள் காப்போம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய கால்நடை காப்பீட்டுத் திட்டத்தில் எதிர்பாராத இழப்புகளிலிருந்து விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பு வழங்குவதற்காக ரூ. 5.31 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும் பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும். இதற்கு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசுந்தீவன சாகுபடி ஊக்குவிப்புக்கு சமூகப் பங்களிப்பின் வாயிலாக மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுத்தல் நறுக்கிய தீவன பயன்பாட்டை மேம்படுத்துதலுக்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
