தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ”கடந்த 10 நாட்களாக முதலமைச்சர் எல்லா அதிகாரியையும் கூப்பிட்டு ஆலோசனை செய்வது மாதிரி ஒரு போட்டோஷூட் எல்லாம் நடத்தினார். அந்த புகைப்படங்கள் எல்லாம் வந்தது. பெயர் மாற்றம் செய்வதற்கு எதற்கு ஒரு ஆய்வு கூட்டம் நடந்துச்சு? அதிகாரிகளோட என்ன டிஸ்கஸ் பண்ணாரு அப்படின்னு எங்களுக்கு தெரியல.
இந்த ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அறிவிச்சிருக்காரு. அதையும் தேர்தல் வாக்குறுதியில சொன்ன மாதிரி அறிவிக்கல. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் வாக்குறுதியில என்ன சொன்னாருன்னா, ‘தமிழ்நாட்டில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ அப்படின்னு சொன்னாரு. ஆனா இன்னைக்கு பட்ஜெட்ல அரசு மருத்துவமனையில பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு மட்டும்தான் இந்த திட்டம் அப்படின்னு அறிவிச்சிருக்காங்க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேத்துற மாதிரி பட்ஜெட்ல எந்த திட்டமும் எந்த அறிவிப்பும் இல்லை.
அனைத்து திட்டங்களும் திராவிட மாடல் ஆட்சியில் எங்களுடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அறிவிச்சு செயல்படுத்திய திட்டங்களைதான் இன்னைக்கு பேரை மாத்தி இருக்காங்க.
இதுல இன்னொரு சிறப்பு… இந்த அரசுக்கு நன்றி சொல்லணும். என்னன்னா, ஒவ்வொரு துறையை பத்தி பேசும்போதும் நிதி அமைச்சர் பட்ஜெட்ல இடம் பெற்றிருக்குன்னு சொல்லி, ‘இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கு’ அப்படின்னு ரொம்ப மகிழ்ச்சியா, பெருமையோட சொல்றாரு.
திராவிட முன்னேற்றக் கழகத்துடைய சாதனைகளை எல்லாம் இப்பவாச்சும் ஒத்துக்கிட்டார் அப்படிங்கறதுக்கு நாங்க எங்களுடைய நன்றியை இந்த அரசுக்கும், நிதி அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் தெரிவிச்சுக்கிறோம்!
அதேமாதிரி…
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் – அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டம், அயோத்திதாசர் ஆதிதிராவிடர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம், ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்ன்னு எல்லாமே எங்களுடைய திராவிட மாடல் அரசுல செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்தான். வெறும் பேரை மட்டும் அவங்களுடைய கட்சி பேரை ‘வெற்றி வெற்றி’ன்னு எல்லா திட்டத்துக்கும் மேலயும் ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க.
நாங்க ‘அன்புச் சோலை’ன்னு கொண்டு வந்த திட்டத்துக்கு பேரை மாத்தி இன்னைக்கு ‘முதியோர் பொழுதுபோக்கு மையங்கள்’ன்னு பேரை மாத்தி இருக்காங்க.
நாங்க எங்களுடைய தலைவர் ஆட்சியில கொடுத்த லேப்டாப் திட்டம்… உங்களுக்கு தெரியும் ‘உலகம் உங்கள் கையில்’ அப்படின்னு தலைவர் பேர் வச்சு, கடந்த ஆண்டு 20 லட்சம் அறிவிச்சோம், 10 லட்சம் மாணவர்களுக்கு கொடுத்தோம். அதை இன்னைக்கு பேரை மாத்தி ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ அப்படின்னு பேர் வச்சிருக்காங்க.
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தோட பேரை மாத்தி ‘வெற்றி வீடு திட்டம்’ அப்படின்னு பேரை மாத்தி வச்சிருக்காங்க.
அதே மாதிரி மாடல் ஸ்கூல்ஸ்… அதாவது ‘தகைசால் பள்ளிகள்’ அதோட பெயரை மாத்தி இருக்காங்க.
எங்களுடைய ஆட்சியில் கொண்டு வந்த ‘முதல்வர் படைப்பகங்கள்’ திட்டத்தை இன்னைக்கு ‘டிஜிட்டல் நூலகம்’ அப்படின்னு பேர் மாத்தி இருக்காங்க. அதுக்கு வெறும் 10 கோடி ரூபாய் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கு.
எங்களுடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நன்னிலம்’ திட்டத்திற்கு பேரை மாத்தி இன்னைக்கு ‘மண்ணின் மகள்’ திட்டம்’னு பேரை மாத்தி இருக்காங்க.
தேர்தலுக்கு முன்னாடி எங்களுடைய தலைவர் தலைமையிலான அரசு தாக்கல் செஞ்ச பட்ஜெட்ல கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சி அப்படின்னு பல்வேறு சமூக நலத் திட்டங்கள் இருந்துச்சு.
ஒவ்வொரு ஆண்டும் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு எங்களுடைய திராவிட மாடல் ஆட்சியில் பார்த்தீங்கன்னா, கடைசியா தாக்கல் செய்த பட்ஜெட்ல 48,000 கோடி ரூபாய் கல்விக்கு எங்களுடைய தலைவர் ஒதுக்கி இருந்தாங்க. இப்போ அதை குறைச்சு, முதன்முறையாக குறைச்சு 44,500 கோடி ரூபாய் தான் இந்த முறை ஒதுக்கி இருக்காங்க.
நாங்கள் தொடர்ந்து சொல்லிட்டு இருக்கிற மாதிரி காவேரியில தண்ணி வரல, ஆடி 18-க்கு கூட தண்ணி வராத ஒரு சூழலை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கு.
நேற்று ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகையில ஒரு செய்தி வந்திருக்கு; ‘கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஜூலை மாதத்தில் காவிரி நீர்வரத்து குறைவாக இருக்கு’ன்னு அந்த பத்திரிகையில செய்தி வெளியிட்டு இருக்காங்க.
மேகதாது அணை கட்டும் கர்நாடகாவை தடுத்து நிறுத்த இந்த ஆட்சிக்கு வக்கு இல்லை, தைரியம் இல்லை, வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க.
விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. இந்த ஆட்சி அமைஞ்சதில் இருந்து இந்த மூணு மாசமா யார் அதிகமா பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு பார்த்தீங்கன்னா விவசாயிகள் தான் பாதிக்கப்பட்டிருக்காங்க.
‘முழு பயிர்க்கடன் தள்ளுபடி’ன்னு தேர்தல் வாக்குறுதி சொன்னாங்க, ஆனா இப்போ அதுக்கு ஒரு கண்டிஷன் போட்டு, முதல்ல 50,000 சொன்னாங்க, எதிர்ப்பு தெரிவிச்ச உடனே 75,000-ஆ மாத்துனாங்க, அதையும் முழுமையா செயல்படுத்தல.
தஞ்சாவூர்ல நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்துச்சு, அதுல நாங்க எல்லாம் கலந்துகிட்டு விவசாயிகள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை பேசினேன். அதற்காக நேற்று என்னை வீடு புகுந்து கைது செஞ்சாங்க. கைது செஞ்சு எப்படி எல்லாம் அலக்கழிச்சாங்கன்னு ஒட்டுமொத்த தமிழ்நாடும் பார்த்துச்சு.
குறிப்பா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த பட்ஜெட் பத்தி நாங்க எதுவும் கேள்வி கேட்டுறக் கூடாது, அதே மாதிரி விவசாயிகளுடைய பிரச்சனையை டைவர்ட் பண்ணனும்னு நேற்று அந்த நாடகத்தை நடத்துனாங்க. என்னை மட்டும் இல்ல, தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடைய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருத்தரையும் கைது செஞ்சுட்டு இருக்காங்க, பர்சேஸ் பண்ணிட்டு இருக்காங்க.
3.5 லட்சம் குடும்பங்களுக்கு வழக்கத்தை விட பல மடங்கு அதிகமா இன்னைக்கு கரண்ட் பில் (EB Bill) வந்திருக்கு. அமைச்சர்கள் அரசு பள்ளிகளுக்கு போய் அங்க இருக்கக்கூடிய மாணவர்களை எல்லாம் வெளியே வரச் சொல்லி, இந்த கட்சியினுடைய பெயரை எல்லாம் கோஷம் போடச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தி, அதை ரீல்ஸ் எடுத்து வீடியோ போட்டு இந்த அரசு அமைச்சர்கள் பணிகளை செஞ்சுட்டு இருக்காங்க.
அதுமட்டுமில்ல, இன்னைக்கு இந்தியாவே நீட்டை எதிர்த்து போராடிட்டு இருக்கு, அதை எதிர்த்து இந்த அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அதற்கு மாறா போராடுன மாணவர்கள் மீது தடியடி இந்த அரசு நடத்தி இருக்கு. விலைவாசியும் உயர்ந்துட்டே போகுது, அரிசி விலை பல மடங்கு அதிகமாயிருக்கு.
ஆனா இதையெல்லாம் கேட்டா முதலமைச்சர் பதில் சொல்ல மாட்டாரு! முதலமைச்சருக்கு பதிலா பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் சொல்லணும் அப்படின்னு முதலமைச்சருக்கு ஒரு முன்ஜாமீன் வாங்குறாங்க. இந்த மாதிரி ஒரு நகைச்சுவையை இந்திய ஜனநாயகம் எந்த மாநிலத்திலயும், எந்த சட்டமன்றத்திலயும் பார்த்திருக்காது!
நேத்தே பொதுப்பணித்துறை அமைச்சர் பேசி இருக்காரு, ‘அவை முன்னவர் வந்து தீர்மானம் கொண்டு வரணும், எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டுச்சுன்னா அதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ன்னு. இவங்கதான் பதில் சொல்லுவாங்களாம்! இதற்கு எதற்கு முதலமைச்சர் அவைக்கு வரணும்? இதுக்கு எதுக்கு நாங்க எல்லாம் அவைக்கு வரணும் அப்படின்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் நீங்க இந்த அரசை பார்த்து கேட்கணும்னு கேட்டுக்கொள்கிறேன்.
‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற டைம் வேணும்’னு முதலமைச்சர் கேட்டாரு.
ஆட்சி அமைஞ்ச உடனே இந்த பட்ஜெட்ல அதையாச்சும் சொல்வாங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனா அதை சொல்வதற்கு கூட அவங்களுக்கு டைம் இல்லை, இன்னும் டைம் கேட்குறாங்க! எனவே நடக்கப்போற கூட்டத்தொடர் முழுவதும் ஆணித்தரமாகவும் உறுதியாகவும் மக்கள் பிரச்சனைகளை நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள், எங்களுடைய தலைவருடைய அறிவுறுத்தலின் பேரில் கேள்வி கேட்க ரெடியாக இருக்கிறோம். பதில் சொல்ல இந்த அரசு ரெடியாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
