முதல்வர் விஜய் ‘ஷாக்’ உத்தரவு- திமுக கடும் எதிர்ப்பு!

Published On:

| By Mathi

Student Caste Identity Cards: CM Vijay's Order Sparks DMK Protest

தமிழக மாணவர்களுக்கு “ஜாதி அடையாள அட்டை” (Caste Identity Card) வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஜாதி அடையாள அட்டை தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: ஆண்டுதோறும் மாணவர்கள் ஜாதி சான்றிதழை வாங்குவதற்கு மாற்றான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.

ADVERTISEMENT

மாணவர்களுக்கு ஐடெண்டிட்டி கார்டு என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். அதற்கான பணிகளையும் மேற்கொள்ள முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

அந்த அடையாள அட்டையில்,

ADVERTISEMENT
  • மாணவர் பெயர்
  • முகவரி
  • மாணவரின் ஜாதி சான்றிதழ் விவரம்
  • பிளட் குரூப்
  • ஆதார அட்டை
  • தொலைபேசி எண் அனைத்தும் இணைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு ஐடெண்டிட்டி கார்டு நீங்கள் வைத்திருப்பதைப்போல ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10, 12-லேயே படிக்கின்ற மாணவர்களுக்கும் முதல் கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திமுக கடும் எதிர்ப்பு

இதற்கு திமுகவின் முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சரின் இந்தப் பேச்சின் உண்மையான நோக்கம் என்ன? இது அரசின் நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்தக் கருத்துக் குறித்து, தமிழ்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு அமைச்சர் அவர்கள் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம், “பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகளில் சாதி அடையாளப்படுத்தப்படும் எனும் அறிவிப்பு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தென் மாவட்டங்களில் மாணவர்களிடையே “சாதீய”மோதல்கள் அவ்வப்போது அரங்கேறி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மாணவர்களின் அடிப்படை தகவல்கள் அடங்கிய ஒரு கார்டு வழங்கப் போகிறீர்களா? அப்படியென்றால் அதில் சாதி குறித்த தகவல்களும் இருக்குமென்றால் அது தேவையில்லாதது!

மாணவர்களின் இரத்த வகை, ஆதார் எண் போன்றவற்றை மட்டும் அறிய வேண்டிய இடத்தில், சாதி குறித்த அடையாளமும் தேவைதானா? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூகநீதி பயன்களை பெற வேண்டிய இடத்தில் மட்டும் சாதிச் சான்றிதழ் விவரங்களை வெளிப்படுத்திக் கொள்ளலாம். மாண்புமிகு அமைச்சர் இதுகுறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share