–யோகேந்திர யாதவ்
தமிழாக்கம்: ரவிக்குமார்
எதிர்ப்பு (Resistance) இந்த ஒரு சொல்லே, ஜூன் 8 அன்று இந்தியா (INDIA) கூட்டணித் தலைவர்களிடம் ராகுல் காந்தி ஆற்றிய உரையைச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அண்மைக் காலத்தில் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் ஆற்றிய மிக முக்கியமான அரசியல் உரை இது.
இது பொதுக் கவனத்தை ஈர்த்திருக்கிறது என்றாலும் அது சரியான காரணத்துக்காக அல்ல. சிபிஐ – எம், திமுக ஆகியவை பற்றிய அவரது குறிப்புகள் எதிர்வினைகளை ஏற்படுத்தின. தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகள் வெளியில் வந்தபோது அத்தகைய எதிர்வினைகள் எழுவது இயல்பானதே. இருப்பினும், அந்தக் கருத்து வேறுபாடுகளின் வெளிப்பாடு, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் அடிப்படையான நோக்கத்தை வலியுறுத்துவதாகவே பார்க்கப்பட வேண்டும். சிபிஐ எம்.எல் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா அதைப்பற்றி எழுதிய கட்டுரை, இந்தக் கருத்தை இன்னும் விரிவான மற்றும் உள்ளடக்கிய பார்வையில் முன்வைக்கிறது. அதைப் போலவே, “காங்கிரஸ் கட்சி என்பது ஒரு எதிர்ப்பு இயக்கம்” என்ற ராகுல் காந்தியின் கூற்றையும் தற்போதைய நிலைமையை விவரிக்கும் ஒன்றாக அல்லாமல், ஒரு உயரிய அரசியல் இலட்சியத்தை மீட்டெடுக்கும் அறிவிப்பாகவே புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த உரையின் உண்மையான முக்கியத்துவம் அதன் நோய் கண்டறிதல் (diagnosis), முறையிலும் அதற்கான மருந்தைப் பரிந்துரைப்பதிலுமே (prescription) இருக்கிறது. இந்திய அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை நிகழ்ந்துவிட்டதை எதிர்க்கட்சிகள் முதன்முறையாகத் தெளிவாக உணர்ந்துள்ளன.
போட்டிமிக்க சர்வாதிகாரத்திலிருந்து தேர்தல் வழியிலான சர்வாதிகாரத்திற்கு இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல், எதிர்க்கட்சியின் அரசியல் உத்தியில் ஒரு முக்கியமான மாற்றத்தையும் இந்த உரை முதன்முறையாகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
ஆர் எஸ் எஸ் கையில் இந்திய அரசின் கருவி
தேர்தல் போட்டி அரசியலிலிருந்து எதிர்ப்பு அரசியலுக்கான மாற்றம். இந்த இரண்டு மையக் கருத்துகளும் விரிவாகப் புரிந்துகொள்ளப்பட்டு, பரவலாக எடுத்துச் செல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டு, மேலும் செம்மைப்படுத்தப்பட வேண்டியவை.
ராகுல் காந்தியின் நோய் கண்டறிதல் முறை வெற்றுப் புலம்பலைத் தாண்டிச் செல்கிறது. அவர் பிரச்சினையின் மையத்தைத் தொட்டுக் காட்டுகிறார்: “இந்திய அரசின் கருவிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்ஸால் (RSS) கைப்பற்றப்பட்டிருப்பதே பிரச்சினை… ஊடகங்கள், சமூக ஊடகங்கள், நீதித்துறை, நிர்வாக இயந்திரம், உளவுத்துறைகள் என அரசின் முழுக் கட்டமைப்பும் இந்த அரசை அதிகாரத்தில் தக்கவைத்திருக்க ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.”

மேலும், இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்பதையும் அவர் தெளிவாகச் சொல்கிறார்: “எதிர்காலத்தில் இதுவரை எப்படியோ செயல்பட்டுக் கொண்டிருந்த அந்தச் சில அமைப்புகளும் செயலிழந்து விடும். ஏனெனில், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்சும் இந்திய அரசின் மீது தங்கள் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன.”
அவர் உரையாற்றிய பின்வந்த இரு வாரங்களிலேயே அவர் குறிப்பிட்ட ‘நிறுவனக் கைப்பற்றல்’ ( institutional capture ) மேலும் ஆழமடைந்துள்ளது. மீனாட்சி நடராஜனின் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்ததும், அரசின் அதிகாரத்தையும் பணபலத்தையும் வெளிப்படையாகப் பயன்படுத்தி திரிணமூல் காங்கிரஸ் மற்றும் சிவசேனாவை உடைக்கும் முயற்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்ட நிறுவனங்களின் கைப்பற்றலுக்கான கூடுதல் சான்றுகளாக அமைந்துள்ளன.
இந்தியாவைப் பற்றிய இந்தக் கணிப்புகள், அரசியல் அறிவியலாளர்கள் உலக அளவில் சுட்டிக்காட்டி வரும் ஒரு பரந்த போக்குடன் ஒத்திசைகின்றன. 1978-இல் வெளியான ஜுவான் லின்ஸின் புகழ்பெற்ற The Breakdown of Democratic Regimes என்ற நூலைத் தொடக்கமாகக் கொண்டு, ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்திற்கான மாற்றம் குறித்த ஆய்வுகள் இன்று ஏராளமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்த மாற்றம் ஒரே இரவில் நிகழ்வதில்லை என்பதை நாம் அறிவோம். ஆடம் ப்ரஸ்வோர்ஸ்கி ஜனநாயகத்தை “நிறுவனமயமாக்கப்பட்ட நிச்சயமின்மை” (institutionalised uncertainty) என்று வரையறுத்தார். அதாவது, ஆட்சியாளர்கள் தாங்கள் அதிகாரத்தை இழக்கும் அபாயத்தை ஏற்றுக்கொள்ளும் அரசியல் அமைப்பே ஜனநாயகம். ஜனநாயகத்தின் பின்னடைவு என்பது, ஆட்சியாளர்கள் அந்த அபாயத்தை முதலில் குறைத்து, பின்னர் முற்றிலும் அகற்றுவதற்காக ஜனநாயக நிறுவனங்களை மெல்லமெல்ல மாற்றியமைப்பதிலேயே இருக்கிறது.
இரண்டு சர்வாதிகாரம்
ஜனநாயகத்தின் இந்தச் சரிவில் இரண்டு இடைநிலைக் கட்டங்கள் உள்ளன. “போட்டிமிக்க சர்வாதிகாரம்” என்பது அரசியல் போட்டி முற்றிலும் இல்லாமல் போகாத ஒரு அமைப்பு. ஆனால் அந்தப் போட்டி தேர்தல் நடைபெறும் குறுகிய காலத்திற்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்படுகிறது. தேர்தல்கள் நியாயமானதாக இல்லாவிட்டாலும், ஆளும் கட்சி தோல்வியடையும் அபாயம் இன்னும் ஓரளவுக்கு இருக்கும். அடுத்த கட்டம் “தேர்தல் வழியிலான சர்வாதிகாரம்.” இதில், தேவையானபட்சத்தில் தேர்தல் முறைகேடுகளையும் உள்ளடக்கி, அனைத்து நிறுவனங்களையும் நடைமுறைகளையும் சமரசப்படுத்தி, ஆட்சியை இழக்கும் அபாயத்தை மிகக் குறைந்த அளவுக்குக் கொண்டு வருவதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெறுகின்றனர்.
இந்தியா தற்போது இந்த இரண்டு நிலைகளுக்கிடையே உள்ளது. 2019 முதல் இந்திய அரசு போட்டிமிக்க சர்வாதிகார அரசாக இருந்து வருகிறது. 2024 தேர்தலில் மக்கள் அளித்தத் தீர்ப்பு, இந்தியா தேர்தல் வழியிலான சர்வாதிகாரமாக முழுமையாகச் சரிவதைக் தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியது. அதன் பின்னர், எந்தத் தேர்தலிலும் தோல்வியடையும் அரசியல் அபாயத்தை குறைப்பதற்காக ஆளும் கட்சி எல்லாவிதமான தந்திரங்களையும் பயன்படுத்திவருகிறது.

ஜனநாயக ஆட்சி மாற்றம் குறைந்துவிடும்
இதற்காக மூவகை ஏகபோகத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது: சூசனா (தகவல் — ஊடகங்களின் மூலம் தகவல் கட்டுப்பாடு), சன்சாதன் (பண வளங்கள்), மற்றும் சன்ஸ்தா (நிறுவனங்களின் கைப்பற்றல்). இதனுடன் சேர்த்து, தேர்தல்களின் தேஷ்–கால்–பாத்ரா (நேரம்–இடம்–நடிகர்கள்) என்பவற்றையும் மறுவடிவமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் தொகுதிகளை மறுபங்கீடு செய்து மறுவரையறை செய்தல், ஒரே நாடு–ஒரே தேர்தல் திட்டத்தின் மூலம் தேர்தல் கால அட்டவணையை மாற்றியமைத்தல், மேலும் எஸ்.ஐ.ஆர் (SIR ) மூலம் வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் ஆகியவை அதில் அடங்கும். இந்தச் செயல்முறை முழுமையாக நிறைவடைந்துவிட்டால், தேர்தல்களின் மூலம் இயல்பான ஜனநாயக ஆட்சி மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைந்துவிடும். அதன்பின் தேர்தல் வழியிலான சர்வாதிகாரமாக இந்தியா உறுதியாக மாறிவிடும்.
இந்த இருண்ட உண்மையை எதிர்க்கட்சி இறுதியாக இப்போதுதான் நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. ராகுல் காந்தியின் உரை அரசியல் சூழலைப்பற்றி வெறும் பகுப்பாய்வு செய்வதோடு நின்றுவிடவில்லை. அதனை வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாக மாற்றுவது, அடுத்த அரசியல் நடவடிக்கைகளுக்கான திட்டத்தை அவர் மிகத் தெளிவாக வரையறுத்திருப்பதுதான்.
இதுவரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திய அரசியல் கருவிகள், “இந்திய அரசு அவை செயல்படுவதற்கான நியாயமான அரசியல் களத்தை வழங்கியிருந்தபோதுதான் செயல்பட்டன. அந்தக் களம் இனி இல்லை… அரசியல் கட்சிகளால் செயல்பட முடியாதபோது எது செயல்படும்? எதிர்ப்புதான் செயல்படும்.” என அவர் கூறுகிறார்.
தேர்தல் அரசியலின் மீதான அளவுக்கு மீறிய நம்பிக்கையிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் அழைக்கிறார். “எதிர்க்கட்சிக்கு சுதந்திரமான, நியாயமான தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பே இனி இருக்காது என்பதே பிரச்சினை. ஆகவே, நாம் எதிர்ப்பு என்ற நிலைக்கு மாற வேண்டும்.” மேலும், எதிர்ப்பு என்பது ஒரு நிறுவனம் அல்ல; அது ஒரு உள்ளுணர்வு, ஒரு மனப்பாங்கு என்று அவர் வலியுறுத்துகிறார்.

இது எதிர்க்கட்சி அரசியலில் ஒரு தள மாற்றத்தை (paradigm shift) சுட்டிக்காட்டுகிறது — நாடாளுமன்றத்திலிருந்து ஜந்தர் மந்தருக்கு; தேர்தல் போட்டியிலிருந்து தெருவில் இறங்கி மக்களைத் திரட்டுவதற்கு; அதிகாரத்தை மீட்டெடுக்கும் அரசியலிலிருந்து குடியரசை மீட்டெடுக்கும் அரசியலுக்கான தள மாற்றம் அது.
இந்த எதிர்ப்பு ஜனநாயகப் பூர்வமானதாகவும் வன்முறையற்றதாகவும் இருக்க வேண்டும். வன்முறையைப் பயன்படுத்துவது பயனற்றது என்பது மட்டுமல்ல, எதிர்விளைவுகளை உருவாக்குவதாகவும் இருக்கிறது என்பதை வரலாறு நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. வங்கதேசத்திலோ நேபாளத்திலோ நிகழ்ந்தவை, இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டிய அல்லது பின்பற்றக்கூடிய முன்மாதிரிகள் அல்ல.
ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு ஜனநாயகப் பாதையை நாம் உருவாக்க வேண்டும். இந்த வரலாற்றுப் பொறுப்பு இந்தியா (INDIA) கூட்டணிக்கோ அல்லது பொதுவாக அரசியல் கட்சிகளுக்கோ மட்டும் உரியதல்ல. பல்வேறு சக்திகளும் இதில் ஒன்றிணைய வேண்டியது அவசியம். இந்தியா கூட்டணிக்குள் உள்ளேயும் அதற்கு வெளியேயும் உள்ள எதிர்க்கட்சிகள்; கட்சி சாராத ஆனால் அரசியல் நோக்கமுடைய அமைப்புகள், இயக்கங்கள்;தொழிலாளர், விவசாயிகள் அமைப்புகள்; இவற்றுடன் தன்னிச்சையாகவும் அமைப்புசாராமலும் எழும் மக்கள் போராட்டங்களும், குடிமைச் சமூக அமைப்புகளும், குடிமக்களும் இதில் பங்கேற்க வேண்டும். “இந்திய மக்களாகிய நாம்” எதிர்கொள்ளும் பல்வேறு, பல சமயங்களில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட துயரங்களையும் பிரச்சினைகளையும் ஒன்றோடொன்று இணைக்கும் பணியை இது செய்கிறது.
எதிர்ப்பிற்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம், அரசியலமைப்புச் சட்டத்தையோ நாடாளுமன்ற ஜனநாயகத்தையோ கைவிடுமாறு விடுக்கப்படும் பொறுப்பற்ற அழைப்பு அல்ல. மாறாக, அரசியலை மீண்டும் மக்களோடு இணைக்க வேண்டுமென்ற வேண்டுகோளாகும். ராம் மனோஹர் லோகியா சுட்டிக்காட்டியதுபோல்:
“தெருக்கள் வெறிச்சோடும்போது, நாடாளுமன்றம் தறிகெட்டுப் போய்விடுகிறது.”

யோகேந்திர யாதவ்: சுவராஜ் இந்தியா அமைப்பின் உறுப்பினரும், பாரத் ஜோடோ அபியான் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளருமாவார்.
தமிழாக்கம்: டி.ரவிக்குமார்: எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்.

