கூட்டாட்சித் தத்துவமே ”இந்தியா கூட்டணி”யின் ஒட்டும் பசை!

Published On:

| By டி.ரவிக்குமார்

Federalism is the Glue Binding the INDIA Alliance

ரவிக்குமார்

இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பேசிய ஒமர் அப்துல்லா காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது. மற்ற கட்சிகள் ஒரு மாநிலம், அல்லது ஓரிரு மாநிலங்களில் இருக்கலாம். எனவே, காங்கிரஸ் கட்சி தான் இந்தக் கூட்டணியை இணைத்து ஒட்டும் பசையாக ( glue) இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதற்கு காங்கிரசின் பங்கு முக்கியமானது என்பதை அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள எல்லோருமே ஒப்புக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இந்தக் கருத்தில் இடதுசாரிக் கட்சிகளுக்கும்கூட உடன்பாடு இருக்கிறது. இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் காங்கிரஸ்மீது வைக்கப்பட்ட விமர்சனம் அது கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு உதவியாக இல்லை என்பதும், கூட்டணிக் கட்சிகளின் அடிப்படையையே நிராகரிப்பதுபோல அது பிரச்சாரம் செயததும்தான்.

இந்தியா கூட்டணி 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுடைய ஒரு இறுக்கமற்றக் கூட்டணியாக இது உருவானது. இதில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்றினாலும் அக்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்குவதையோ, இந்தியா கூட்டணிக்கென்று தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதையோ சில கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை . அவ்வப்போது இக்கூட்டணிக்கான செயல் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன; தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, என்றாலும் இது ஒரு திடமான அமைப்பு வடிவத்தை எடுக்கவில்லை.

ADVERTISEMENT

ஒமர் அப்துல்லா கூறியதைப் போல காங்கிரஸ் கட்சி இந்தக் கூட்டணியின் ஒட்டும் பசை அல்ல, மாறாக பாஜக குறித்த அச்சமே இந்தக் கூட்டணிக்கான புறவயமான அழுத்தத்தைத் தருகிறது . பாஜகவின் சட்டவிரோதமான, அதிகாரத்துவ அரசியல் பாஜக அல்லாத கட்சிகள் எல்லாவற்றையும் அச்சமடையச் செய்திருக்கிறது. அந்த அச்சமே எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் இணைத்து ஒட்டும் பசையாக செயல்படுகிறது. அடுத்து வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்காவிட்டால் தமக்கு எந்த அரசியல் எதிர்காலமும் இல்லை என்று உணரும் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் அதனால்தான் ஏற்பட்டுள்ளது.

பாஜகவைத் தோற்கடிப்பது என்பது மட்டுமே ஒரு கூட்டணிக்கான ஒற்றை நோக்கமாக இருக்க முடியாது. இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன மாநிலக் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பாஜகவின் அதிகாரத்துவ அரசியல் எதிர்க்கட்சிகளின் இருப்பை அச்சுறுத்துவது என்பது உண்மைதான். அதைவிடவும் முக்கியமானது அது அரசமைப்புச் சட்டத்தை அச்சுறுத்துகிறது; நாடாளுமன்ற ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறது; மதச்சார்பின்மையையும், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தையும் அச்சுறுத்துகிறது. எனவே, பாஜக எதிர்ப்பு என்பது எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரளச் செய்திருக்கிறது. இதைத் தவறு எனக் கூற முடியாது.

ADVERTISEMENT

ஆனால், அச்சத்தின் அடிப்படையில் சேர்ந்து உருவாகும் கூட்டணி நீண்டகாலம் இருக்க முடியாது. இந்தக் கூட்டணிக்கு ஒரு அமைப்பு வடிவம் கொடுப்பதற்கான ஒட்டுப் பசையாக ( glue) கூட்டாட்சித் தத்துவம் என்பது இருக்க வேண்டும். மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மட்டுமின்றி மாநில உரிமைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத வட இந்தியாவைச் சேர்ந்த மாநிலக் கட்சிகளும் பெற வேண்டும். அப்படிப் பெறுவதன் மூலமே இந்தக் கூட்டணியை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சி உணர்ந்திருந்தாலும், மாநில உரிமைகளை முழுமையாக அங்கீகரித்து முன்னெடுப்பதில் அது தயக்கம் காட்டி வருகிறது. கூட்டாட்சி என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்பதையும், மதச்சார்பின்மை மட்டுமே பாஜகவிடமிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டப் போதுமானதல்ல என்பதையும் அது உணரும்போதுதான், மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவத்தை அது உண்மையாகப் புரிந்துகொள்ளும். கூட்டாட்சிக் கோட்பாட்டை ஏற்பதில் காங்கிரஸ் தொடர்ந்து தயக்கம் காட்டினால், அது பாஜகவுக்கான மாற்று அரசியல் சக்தியாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, பாஜகவின் பதிலியாக ( substitute) மட்டுமே மாநிலக் கட்சிகளால் கருதப்படும் அபாயம் உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
டி.ரவிக்குமார்

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share