“அந்த ரீலே போதுமேங்க..” முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆவேசமாக பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா

Published On:

| By Pandeeswari Gurusamy

keerthana

கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் பக்கத்து மாநிலங்களுக்கு மொத்தம் 25 பெரிய முதலீடுகள் விட்டுக் கொடுக்கப்பட்டன என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். .

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், ஆளும் தவெக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குத் தொழில் முதலீடுகள் செல்வதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்களுடன் அவர் விரிவான விளக்கமளித்தார்.

ADVERTISEMENT

அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில், “இன்று சட்டசபையில எதிர்க்கட்சித் தலைவர், போகிற போக்கில் ஒரே ஒரு வரியில் ஒரு குற்றச்சாட்டைச் சொல்லிவிட்டு உடனே கிளம்பி ஓடிவிட்டார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்பதும், எங்களிடம் இருக்கும் உண்மையான ஆதாரங்கள் வெளியே தெரிந்துவிடும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான், நாங்கள் ஆதாரங்களைக் காண்பித்துப் பேசுவதற்கு முன்பாகவே அவையிலிருந்து அனைவரும் எழுந்து சென்றுவிட்டார்கள். இதனால் எங்களால் அவையில் முழுமையாகப் பேச முடியாமல் போனது.

இன்று நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்கிறேன். தொழில் முதலீடுகள் அனைத்தும் ஆந்திராவுக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் போய்விட்டது என்று தவறான செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த நிறுவனங்கள், என்ன காரணங்களுக்காக அங்குச் சென்றன என்ற முழுப் பட்டியலையும் நான் விளக்குகிறேன்.

ADVERTISEMENT

கடந்த ஆட்சியில் இழந்த முதலீடுகள்

அவர்கள் எங்களைக் கேள்வி கேட்பதற்கு முன்னால், அவர்கள் மீது நான் குற்றச்சாட்டை முன் வைக்கிறேன். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பக்கத்து மாநிலங்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை தெரியுமா? மொத்தம் 25 பெரிய முதலீடுகள் தமிழகத்தை விட்டு வெளியேறின.

அந்த 25 முதலீடுகளின் மொத்த மதிப்பு 3.3 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்தத் தவறான நிர்வாகத்தால் மட்டும் நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் சுமார் 2 லட்சத்து 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். இவர்களின் இந்த இழப்பால் குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் பெரும் பயனடைந்துள்ளன.

ADVERTISEMENT

கடந்த 2024-இல் தமிழகம் இழந்த முக்கிய திட்டங்கள்:

  • டாடா எலக்ட்ரானிக்ஸ் செமிகண்டக்டர் ஃபேப் (Tata Electronics Semiconductor Fab): இந்தத் திட்டம் 2024-இல் குஜராத் மாநிலத்திற்குச் சென்றது.
  • ஜே.எஸ்.டபிள்யூ குரூப் (JSW Group): இவர்களின் ஒடிசாவுக்குச் சென்றது.
  • ஈவி பேட்டரி மற்றும் ஸ்மெல்டிங் (EV Battery and Smelting) திட்டம் 2024-இல் சென்றது.
  • சுசூகி மோட்டார் (Suzuki Motor): இவர்களின் ஆட்டோமொபைல் திட்டம் 2024-இல் குஜராத்திற்குச் சென்றது.
  • மைக்ரான் டெக்னாலஜி (Micron Technology ATMP): இத்திட்டமும் குஜராத் வசமானது.
  • டொயோட்டா மோட்டார் (Toyota Motor): இவர்களின் 2024 முதலீடு மகாராஷ்டிர மாநிலத்திற்குச் சென்றது.

கடந்த 2024-ஆம் ஆண்டு வரைபடத்தைப் (Graph) பார்த்தாலே, ஒவ்வொரு முறையும் மற்ற மாநிலங்களிடம் எவ்வளவு சதவீத புராஜெக்ட்டுகளை இவர்கள் இழந்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியும். 2024-இல் மட்டுமே 2.3 சதவீதம் அளவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இப்படிச் செய்தவர்கள், நாங்கள் பொறுப்பேற்ற இந்த 30 நாட்களிலேயே ஆந்திராவுக்கு முதலீடுகளை வழியனுப்பி வைப்பதாகக் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்கள் கேட்ட ஒவ்வொரு நிறுவனத்தைப் பற்றியும் என்னிடம் தெளிவான பதில் இருக்கிறது.

முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் குறித்த உண்மை நிலை:

அப்பல்லோ டயர்ஸ் (Apollo Tyres):
ரகுநாதன் அவர்கள் ஒரு காணொளியில் பேசும்போது, அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்று சொல்லியிருந்தார். அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் 2 புதிய திட்டங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு திட்டம் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டிக்கு அருகில், அவர்களின் சொந்த நிலத்தில் அமையவுள்ளது. இந்தத் திட்டம் கடந்த பிப்ரவரி 2026-லேயே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. எனவே இது புதிய திட்டம் அல்ல. இரண்டாவதாக, அவர்கள் அமைக்கவுள்ள ‘கிரீன் ஃபீல்ட் அல்ட்ரா மெகா’ (Green field ultra mega) திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தென் தமிழகத்தில் நிலம் தேர்வு செய்யும் பணியை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆந்திராவில் செய்யப்பது அவர்களின் தனிப்பட்ட முதலீட்டுத் திட்டம் என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கிரீன் ஃபீல்ட் திட்ட பேச்சுவார்த்தைகளைப் பாதிக்காது என்றும் அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு (Royal Enfield):
ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகளையும், ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) ஆலையையும் இயக்கி வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெளியே ஒரு மாற்று உற்பத்தித் தளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவர்களின் நிறுவன இடர் குறைப்பு உத்தியின் (Risk Mitigation Strategy) ஒரு பகுதியாகவே, ஆந்திராவில் தங்களின் 5-ஆவது ஆலையை அமைக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திர அரசுடன் அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை குறித்துக் கடந்த அக்டோபர் 2025-லேயே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்துதான், ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 4-ஆவது பெரிய உற்பத்தி ஆலையைத் தமிழ்நாட்டின் செய்யாறில் தொடங்கி வைத்துள்ளது.

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy Limited):
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-இல் கையெழுத்திடப்பட்ட ஹைட்ரோ ஸ்டோரேஜ் திட்டத்திற்கான அதானி குழுமத்தின் முதலீடு தற்போதும் தமிழ்நாட்டிலேயேதான் தொடர்கிறது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டம் அல்லேரியில் முதற்கட்ட பணிகளைத் தொடங்குவதற்காக, டான்ஜெட்கோ (Tangedco) நிறுவனம் அந்நிறுவனத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு மற்றும் பொறியியல் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த முதற்கட்ட பணிகளைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. எனவே, ஆந்திர பிரதேசத்தில் அதானி குழுமம் செய்யும் புதிய அறிவிப்புகள் அனைத்தும், தமிழ்நாட்டில் அவர்கள் மேற்கொண்டு வரும் முதலீடுகளுக்குக் கூடுதலாக ஒரு தனி முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பானவையாகும்.

ரிலையன்ஸ் சோலார் அண்ட் பேட்டரி ஸ்டோரேஜ் மேனுஃபேக்சரிங் (Reliance Solar & Battery Storage Manufacturing):
இத்திட்டம் தொடர்பாகத் தமிழகத்துடன் எந்தவொரு புரிந்துணர்வு திட்டமும் கையெழுத்திடப்படவில்லை. மேலும், இத்திட்டம் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும், எந்தவொரு மாநில அரசுக்கும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் ரிலையன்ஸ் நிறுவனம் எங்களுக்குத் தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான அறிவிப்பு ஏதேனும் வெளியிடப்பட்டால், அந்நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்குப் பிறகு நேரடியாக வெளியிடப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் டேட்டா சென்டர் (Google Data Center):
இத்தரவு மையத்திற்கு கூகுளின் மதிப்பீடு ஆந்திர பிரதேசத்தில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குத் தொடர்ச்சியாக அமைந்துள்ள பரந்த அளவிலான வறண்ட நிலங்களின் இருப்பு, அம்மாநில அரசால் வழங்கப்பட்ட ஊக்கத்தொகை தொகுப்பு, தரவு மைய செயல்பாடுகளுக்குத் தேவையான நீர் பயன்பாடு சம்பந்தமான அம்சங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக அமைந்தன. என பிறமாநிலங்களுக்கு சென்ற முதலீட்டிற்கான பல்வேறு காரணங்களை பட்டியலிட்டார்.

    அமைச்சர் ஆவேசம்

    தமிழகத்தில் இருந்து வெளியில் சென்ற எத்தனை நிறுவனங்களிடம் தவெக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது, அதற்கு என்ன ஆதாரம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு , “அந்த ரீலே போதுமே…” என்று ஆவேசமாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, “ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நீங்கக் கொஞ்சம் போன் பண்ணி பேசுறீங்களா?” என்றார்.

    மேலும், “நான் சொல்றது இதுதான். நாங்க ஏதோ யார்ட்டயுமே பேசாத மாதிரியும் உங்களுடைய கேள்விகள் உள்ளது. அதாவது, ஆதாரம் இல்லாமல் பேசுபவர்களிடம் நீங்கக் கேள்வி கேட்க மாட்டீங்க. ஆனால், ஆதாரத்தோடு பேசுற எங்களிடம் நீங்கக் கேள்வி கேக்குறதை என்னால ஏத்துக்க முடியவில்லை” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

    Photo of author
    Pandeeswari Gurusamy

    ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share