எஸ்சி, எஸ்டி மக்கள் பறிகொடுத்த 76 தொகுதிகள்!

Published On:

| By டி.ரவிக்குமார்

டி.ரவிக்குமார்

பாஜக அரசு ஜூலை மாதம் துவங்கவிருக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் கணக்கு

ADVERTISEMENT

திரிணாமுல் காங்கிரஸின் 20 எம்.பிக்கள், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் 6 எம்.பிக்கள் இப்போது பாஜக ஆதரவு நிலை எடுத்திருப்பதாலும்; காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியிருப்பதாலும் இம்முறை மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையை எட்டிவிடலாமென பாஜக கணக்குப் போடுகிறது.

2011 மக்கள் தொகையை அடிப்படையாகக் கொள்ளாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போதுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையில் 50% உயர்த்துவதற்கு பாஜக தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படிச் செய்தால் வடமாநில வாக்குகளை மனதில் வைத்து காங்கிரஸ் கட்சியும்கூடத் தனது எதிர்ப்பைக் கைவிடக்கூடும்.

ADVERTISEMENT

2011 சென்சஸை அடிப்படையாகக்கொண்டு தொகுதி மறுசீரமைப்பைச் செய்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதே இந்த மசோதாவுக்கான முதன்மையான எதிர்ப்பாக இருந்தது. அதற்காக 1971 சென்சஸ் அடிப்படையிலேயே தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்யவேண்டும் என அரசியல் கட்சிகள் வாதாடின.

ஆனால், அவ்வாறு செய்யும்போது எஸ்சி எஸ்டி மக்களுக்காக ரிசர்வ் செய்யப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பாதிக்கப்படுகிறது என்பதைப்பற்றி எவரும் கவலைப்படவில்லை.

ADVERTISEMENT

எஸ்சி எஸ்டி அரசியல் பிரதிநிதித்துவம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர்கள், பட்டியலினச் சாதியினர் (SC) மற்றும் பட்டியலினப் பழங்குடியினருக்கான (ST) அரசியல் பிரதிநிதித்துவம் என்பது வெறும் பாதுகாப்பு ஏற்பாடாக மட்டுமல்லாமல், காலத்துக்குக் காலம் ஏற்படும் மாற்றங்களோடு இயங்கும் உயிருள்ள ஜனநாயகக் கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நுணுக்கமான ஏற்பாடுகளை உருவாக்கி வைத்தனர். அதற்கென மூன்று முக்கியமான அரசமைப்புச் சட்ட உறுப்புகள் சேர்க்கப்பட்டன .

அரசமைப்புச் சட்ட உறுப்பு 330 மற்றும் 332, மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் எஸ்சி, எஸ்டி (SC/ST ) மக்களுக்கான இடஒதுக்கீட்டை அவர்களது மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் நிர்ணயித்தன.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 82, ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பின்னரும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது. இது கருணையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஏற்பாடு அல்ல; சாதி அமைப்பால் இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளையும்; அதனால் இப்போதும் தொடரும் சமூக ஏற்றத்தாழ்வுகளையும் சரி செய்வதற்காக அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் சமூகநீதிசார்ந்த உறுதிப்பாடாகும்.

இதைச் செய்ததில் முக்கியமான பங்கு அம்பேத்கரையே சாரும். எஸ்சி எஸ்டி சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பொருளுள்ளதாய் இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். எஸ்சி, எஸ்டி மக்கள் நியாயமான நிவாரணத்தை கோரக்கூடிய ஒரு சக்தியாக அமையப் போதுமான எண்ணிக்கையில் அவர்களது பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்பதே அவரது பார்வையாகும்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கு இடையிலான உறவு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. SC/ST மக்களின் எண்ணிக்கை அதிகரித்தாலோ, அவர்கள் புலம்பெயர்ந்து புதிய பகுதிகளில் குவிந்தாலோ, அதற்கேற்ப அவர்களது அரசியல் குரலும் வலுப்பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. இது தொடர்பாக அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்கள் அதைக் காட்டுகின்றன.

கோரிக்கைகளும் திருத்தங்களும்

அரசமைப்புச் சட்டத்தின் இப்போதைய உறுப்பு 330 அரசியல் நிர்ணய சபையில் விவாதத்துக்கு வந்த போது ஐக்கிய மாகாணத்தைச் சார்ந்த ஜஸ்பட் ராய் கபூர் எந்தெந்த தொகுதிகளிலெல்லாம் எஸ்சி எஸ்டி மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனரோ அந்தத் தொகுதிகளை ரிசர்வ் தொகுதிகளாக ஆக்க வேண்டும் என்ற ஆலோசனையைத் தெரிவித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சென்னை மாகாணத்தைச் சார்ந்த வி.ஐ.முனிஸ்வாமி பிள்ளை சென்சஸ் கணக்கெடுப்பில் எஸ்சி மக்களுடைய மக்கள் தொகைக் குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டு அதை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தக் கருத்துகள் சென்சஸ் கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை, பிரதிநிதித்துவம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவை நமக்கு உணர்த்துகின்றன.

1952, 1962, 1972 ஆகிய முதல் மூன்று தொகுதி மறுவரையறை நடவடிக்கைகளில் எஸ்சி எஸ்டி மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் படிப்படியாக உயர்ந்தன. 1951 இல் எஸ்சி மக்கள் தொகை 3.52 கோடியாக இருந்தது. அதற்கேற்ப 1952 மறுசீரமைப்பில் எஸ்சிகளுக்கான தொகுதி 72 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 1961 சென்சஸில் அது 4.47 கோடியாக உயர்ந்தது. எனவே 1962 மறுசீரமைப்பில் அது 76 ஆக உயர்த்தப்பட்டது. அப்போது எஸ்டி ரிசர்வ் தொகுதி எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டது.

1971 சென்சஸில் எஸ்சி மக்கள்தொகை 6.09 கோடி ஆனது. ஆனால் அப்போது நாடாளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை உயர்த்தப்படாததால் எஸ்சி தொகுதிகளும் உயர்த்தப்படாமல் அப்படியே 76 ஆக இருந்தது. ஆனால் எஸ்டி தொகுதிகளின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. 1977 முதல் எஸ்சி தொகுதி எண்ணிக்கை 79 ஆகவும் எஸ்டி தொகுதி எண்ணிக்கை 41 ஆகவும் ஆனது. 1976 இல் மேற்கொள்ளப்பட்ட 42-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தால் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை 25 ஆண்டுகளுக்கு முடக்கப்பட்டது. அதனால் 1981, 1991 சென்சஸ் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் எஸ்சி, எஸ்டி தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

மாநிலங்களுக்கு இடையிலான சமநீதியைப் பற்றிய கவலைகளை முன்னிறுத்திய இந்த நடவடிக்கை, மாநிலங்களுக்குள் நிலவும் சமமின்மையையும் எஸ்சி, எஸ்டி மக்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளையும் புறக்கணித்தது. இதனால், விகிதாசார பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த ஜனநாயக நிலைப்பாடு மாற்றமடைந்து, வரலாற்று ஏற்றத்தாழ்வை உறுதிப்படுத்தும் நிலை ஏற்பட்டது.

தற்காலிகமாகக் கருதப்பட்ட இந்த முடக்கம், பின்னர் நிரந்தர அரசியல் கொள்கையாக மாற்றப்பட்டது. 2001 ஆம் ஆண்டின் 84-ஆவது அரசமைப்புத் திருத்தம் இதை 2026 வரை நீட்டித்தது. 2001 சென்சஸ் அடிப்படையில் அப்போது எஸ்சி தொகுதிகள் ஐந்தும், எஸ்டி தொகுதிகள் ஆறும் அதிகரித்தன. 2026 வரை தொகுதி மறுசீரமைப்பு உறையவைக்கப்பட்டதால் 2011 சென்சஸ் அடிப்படையில் எஸ்சி எஸ்டி தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படாமல் தடுக்கப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த முடக்கத்தின் விளைவாக, மக்களவையின் பிரதிநிதித்துவம் இன்னமும் 1971 ஆம் ஆண்டின் மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இதனால், அரசமைப்புச் சட்டத்தின் இலட்சியத்திற்கும் அரசியல் யதார்த்தத்திற்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு வாக்கு, எல்லா வாக்குக்கும் ஒரே மதிப்பு என்ற கோட்பாட்டை இது சிதைக்கிறது.

காணாமல் போன தொகுதிகள்

ரிசர்வ் தொகுதிகள் உயர்த்தப்படாதது போலவே பொதுத் தொகுதிகளும்தானே உயர்த்தப்படவில்லை எனக் கூறப்படலாம். ஆனால், ஆட்சி அதிகாரம் எஸ்சி, எஸ்டி அல்லாதவர்கள் கையில்தான் உள்ளது. எனவே பிரதிநிதித்துவம் குறைந்தாலும் அவர்கள் பாதிப்புக்கு ஆளாக மாட்டார்கள். அதுமட்டுமின்றி எஸ்சி எஸ்டி மக்களின் பிரதிநிதித்துவம் குறைவதால் அவர்கள் தமது சாதிய மேலாதிக்கத்தை மேலும் உறுதி செய்துகொள்வார்கள்.

வெளிப்படையாகப் பார்த்தால் எல்லோருக்கும்தானே பாதிப்பு எனத் தோன்றும் இந்த நடைமுறை, மேலாதிக்க சாதிகளின் நாடாளுமன்ற செல்வாக்கை நிலைநிறுத்தும் “நிறுவனமயமாக்கப்பட்ட சாதியாதிக்கம்” என்ற வடிவில் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டம் உறுதியளித்திருந்த அரசியல் குரல், அதிகாரமுள்ளோரின் நலன்களைப் பாதுகாக்கும் மறுசீரமைப்பு முடக்கம் என்ற அரசியல் ஏற்பாட்டால் மௌனமாக்கப்படுகிறது.

நமக்குக் கிடைக்கும் கணிப்புகளின்படி, ஒவ்வொரு சென்சஸின் போதும் மறுசீரமைப்புச் செய்யாததால் எஸ்சி மக்களுக்குக் குறைந்தபட்சம் 52 மக்களவை இடங்களும், எஸ்டி மக்களுக்கு 24 இடங்களும் பறிபோயுள்ளன. மொத்தத்தில், அரசமைப்புச் சட்டம் பாதுகாக்க விரும்பிய எஸ்சி எஸ்டி சமூகங்களுக்கு 76 நாடாளுமன்ற இடங்கள் “காணாமல் போயுள்ளன”. இதன் விளைவாக சுமார் 9.5 கோடி மக்களின் அரசியல் குரல் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகமான எண்ணிக்கையாகும்.

இந்த இடப் பற்றாக்குறை குறிப்பாக பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய மாநிலங்களில் அதிகமாகக் குவிந்துள்ளது. சமூகநீதி மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக வலுவான அரசியல் குரல் மிகவும் தேவைப்படும் பகுதிகளே, தொகுதி மறுவரையறை முடக்கத்தால் அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக வறுமையும் அரசியல் புறக்கணிப்பும் ஒன்றை ஒன்று வலுப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

இந்தக் குறைவான பிரதிநிதித்துவம் வெறும் எண்ணிக்கைக் குறைபாடு அல்ல. அது சட்டங்கள் உருவாக்கப்படுவது, நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் கண்காணிப்பு செய்வது, சமூகநீதி சார்ந்த நிதி ஒதுக்கீடுகள் நிர்ணயிக்கப்படுவது ஆகிய அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எஸ்சி எஸ்டி உறுப்பினர்கள் மக்களவையில் அவர்களது மக்கள் தொகைக்குத் தகுந்த விகிதத்தில் இருந்திருந்தால், அவர்கள் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு நிலைக்குழுவிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார்கள். ஆனால் தற்போதைய குறைவான பிரதிநிதித்துவம், அவர்களது செல்வாக்கையும் கண்காணிப்புத் திறனையும் குறைத்துள்ளது.

அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு

ஆகவே, தொகுதி மறுவரையறை முடக்கம் என்பது ஒரு நிர்வாகச் சிக்கல் மட்டும் அல்ல; அது சமூகநீதியின் அடிப்படைத் தத்துவத்தையே பாதிக்கும் அரசியல் பிரச்சினையாகும். அரசமைப்புச் சட்டம் உறுதியளித்த பிரதிநிதித்துவத்தை மீண்டும் உயிர்ப்பிக்காமல், ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க முடியாது. மிக அதிகமாக விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள எஸ்சி எஸ்டி சமூகங்களின் அரசியல் குரலைத் தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு உறைய வைக்கும் உத்தி குறைக்கிறது.

தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன என்ற அபாயக் குரலை எழுப்பும் அரசியல் கட்சிகள் எஸ்சி எஸ்டி மக்களின் பறிபோன தொகுதிகளை மீட்பதற்கும் குரலெழுப்ப வேண்டும். இனிமேல் ஒவ்வொரு சென்சஸின்போதும் தொகுதி மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்த வேண்டும்.

Photo of author
டி.ரவிக்குமார்

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share