தீபான்ஷு மோகன், அமான் செயின், நஜாம் உஸ் சாகிப் Legal Implications of Delimitation
சமீபத்தில், மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பான சர்ச்சைக்குரிய பிரச்சினை மீண்டும் அரசியல் பதற்றங்களைத் தூண்டியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இது மாநிலத்தின் சுயமரியாதைக்கும் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட கூட்டாட்சி உரிமைகளுக்கும் “நேரடி அச்சுறுத்தல்” என்று கூறியுள்ளார்.
மறுசீரமைப்புக்கான 2026 என்னும் காலக்கெடு நெருங்கி வருவதால், தேர்தல் எல்லைகளை மறுவரையறை செய்வது, இந்திய மாநிலங்களிடையே அதிகாரச் சமநிலையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

மறுசீரமைப்பு ஆணையத்தால் நடத்தப்படும் மறுசீரமைப்பு, நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி கொண்ட மாநிலங்கள் இதனால் அரசியல் ரீதியான செல்வாக்கை இழப்பதைத் தடுக்க 1976 முதல் இந்தச் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.
84-ஆவது சட்டத்திருத்தம் (2001) இந்த முடக்கத்தை நீட்டித்தது. எனவே, இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்துவரும் நிலையிலும், நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் வரையறைகளும் 1971 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையிலேயே இப்போதும் உள்ளன. இந்த முடக்கம் நீக்கப்பட உள்ள நிலையில், 2026க்குப் பிறகு நடைபெறும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு நடக்கும். Legal Implications of Delimitation
கோவிட்-19 காரணமாகவும் பின்னர் நிர்வாகத் தடைகள் காரணமாகவும் 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஏற்பட்ட தாமதங்கள், இந்தச் செயல்முறையில் நிச்சயமற்ற தன்மையைச் சேர்த்துள்ளன. அதன் விளைவுகள் குறித்த விவாதங்கள் மீண்டும் எழுகின்றன. தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வதற்கு அப்பால், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டையும் இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை தீர்மானிக்கும். Legal Implications of Delimitation
106ஆவது அரசியலமைப்புத் திருத்தம் (2023) (பெண்கள் இடஒதுக்கீடு மசோதா) நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், மக்களவையிலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இடங்களை ஒதுக்குவதும் மறுசீரமைப்புச் செயல்முறையில் அடங்கும்.
கூட்டாட்சி மீறலும் அரசியல் கவலைகளும்
கடந்த ஐந்து தசாப்தங்களாக, இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சி சீரற்றதாகவே இருந்துவருகிறது. உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக உள்ளது. கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி குறைவாக உள்ளது.
சமீபத்திய விதி (சட்டக் கொள்கைகளுக்கான மையம்) அறிக்கையின்படி, (https://vidhilegalpolicy.in/research/the-states-in-parliament/) மக்களவை இடங்களை மறு ஒதுக்கீடு செய்ய 2026 மக்கள்தொகை கணிப்புகளை எடுத்துக்கொள்வது குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு வழிவகுக்கும். தமிழ்நாடு, கேரளம், ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசம் ஆகியவை தலா எட்டு இடங்களை இழக்கும். உத்தரப் பிரதேசம், பிகார் ஆகியவை முறையே 11, 10 இடங்களைப் பெறும். மேற்கு வங்கம் நான்கு, ஒடிஷா மூன்று இடங்களை இழக்கக்கூடும். ராஜஸ்தானுக்கு ஆறும் மத்தியப் பிரதேசத்திற்கு நான்கும் கூடுதலாகக் கிடைக்கக்கூடும். Legal Implications of Delimitation

இந்த மாற்றத்தின் விளைவுகள் இந்த எண்களைக் காட்டிலும் ஆழமானவை. இதுபோன்ற மாற்றம் “அரசியல் அதிகாரம் மையத்தில் குவிவதை” துரிதப்படுத்தும். மக்கள்தொகை மெதுவாக வளரும் மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து, வேகமாக வளரும் மாநிலங்களின் அதிகாரத்தை அதிகரிக்கும். இது ஒன்றிய – மாநில உறவுகளை மேலும் சீர்குலைக்கும். ஏற்கனவே சில மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டிலும் அரசு கொள்கையின் மீதான தங்கள் செல்வாக்கிலும் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக உணருகின்றன.
அஸ்ஸாம் அனுபவம், தொகுதிகளை மறுவரையறை செய்வது அரசியல் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு மாற்றும் என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக ஆளும் கட்சிகளுக்கு சாதகமாகவும் குறிப்பிட்ட சமூகங்களுக்கு பாதகமாகவும் இருக்கும். முஸ்லிம் பெரும்பான்மைத் தொகுதிகள் 34இலிருந்து 24ஆகக் குறைவதும், எஸ்சி, எஸ்டி குழுக்களுக்குச் சாதகமாகப் புதிய இடஒதுக்கீடுகளை அறிமுகப்படுத்துவதும் மாநிலத்தில் குறிப்பிட்ட வாக்காளர்களுக்கு இருக்கும் தேர்தல் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாகப் பரவலாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. Legal Implications of Delimitation
தென்மாநிலங்கள் எழுப்பும் உரிமைக்குரல் Legal Implications of Delimitation
“கூட்டாட்சி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல் அதிகாரம்” ஆகியவற்றிற்கான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டித் தென் மாநிலங்கள் இந்த நடவடிக்கையை 25 ஆண்டுகள் முடக்கிவைக்க வேண்டும் என்று கோரியுள்ளன. தேசிய மக்கள்தொகைக் கொள்கைகளைப் பின்பற்றிய தென் மாநிலங்களின் பேரம் பேசும் சக்தியைக் குறைக்கும் வகையில் அரசியல் செல்வாக்கு வட மாநிலங்களை நோக்கி நகரும் என்ற அச்சம் இம்மாநிலங்களுக்கு உள்ளது. Legal Implications of Delimitation
தென்மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31%க்கும் அதிகமான பங்களிப்பை அளித்துவருகின்றன. மக்கள்தொகையில் 21% மட்டுமே உள்ளன. எனவே பொருளாதார ரீதியாக வலுவாக இருந்தாலும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடக்கூடிய அபாயத்தை இம்மாநிலங்கள் எதிர்கொள்கின்றன.

சமீபத்திய தில்லி தேர்தலும் அதற்கு முந்தைய அரசியல் அமைதியின்மையும் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. அளவு அல்லது மக்கள்தொகையைப் பொருட்படுத்தாமல் அனைத்து மாநிலங்களும் கணிசமான பிரதிநிதித்துவம் கொண்டிருப்பதை உறுதி செய்யும் சீர்திருத்தங்களின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதால், மறுசீரமைப்பு பிரச்சினை கவனத்தை ஈர்க்கிறது. கூட்டாட்சியை வலுப்படுத்துவதன் மூலம்தான் மத்திய அரசாங்கத்திலும் அதன் பரந்த முடிவெடுக்கும் செயல்முறைகளிலும் மாநிலங்களின் கவலைகள் கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும்.
சட்டச் சிக்கல்கள் Legal Implications of Delimitation
தொகுதி மறுசீரமைப்பின் சட்ட அம்சங்கள், இதில் நீதித்துறை அதிகம் தலையிட முடியாது என்பதைக் காட்டுகின்றன. அரசியலமைப்பின் பிரிவு 329(a) நீதிமன்றங்கள் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சட்டங்களைக் கேள்விக்குட்படுத்துவதைத் தடுக்கிறது. மறுசீரமைப்புச் செயல்முறை முடிந்த பிறகும் சட்ட ரீதியாக அதை எதிர்க்க முடியாது. ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி எதிர் இந்திய ஒன்றியம் (2011) போன்ற பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இந்தக் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பை ஒத்திவைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல என்றும் அது கூறியது.
தொகுதி மறுசீரமைப்பை மேலும் தாமதப்படுத்துவது, மாநிலங்களவையில் மாநிலப் பிரதிநிதிகளுக்கு இருக்கும் வாக்கின் மதிப்பை மாற்றியமைப்பதன் மூலம் மாநிலங்களின் பிரதிநிதித்துவ அம்சம் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது என எந்த மாற்றமாக இருந்தாலும் அதற்கு அரசியலமைப்புத் திருத்தம் தேவை. தற்போதுள்ள சட்டப்படி நீதிமன்றங்களால் இதில் பெரிதாகத் தலையிட முடியாது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு என்பது தீவிரமான அரசியல் பிரச்சினையாகவும் கூட்டாட்சி தொடர்பான கவலைக்குரிய விஷயமாகவும் இருந்தாலும், அதை எதிர்த்து நிற்பதற்கான சட்டப்பூர்வமான உதவி குறைவாகவே உள்ளது.

உலக நிலவரம் Legal Implications of Delimitation
மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்திற்கான கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. மக்கள்தொகை அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தைக் கூட்டாட்சிக்கான நியாயத்துடன் செயல்படுத்தும் உலகளாவிய மாதிரிகளைப் பார்க்கையில் இந்தியாவிற்கான தீர்வு கிடைக்கக்கூடும்.
ஜெர்மனியிலும் பிரான்சிலும் உள்ள நடைமுறை பெரிய மாநிலங்கள் அதிக இடங்களைப் பெற்றாலும், சிறிய மாநிலங்கள் அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. கனடாவில் அடிப்படை இடங்களுக்கான எண்ணிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மக்கள்தொகை அடிப்படையிலான சீரமைப்புகள் பின்பற்றப்படுகின்றன. இங்கிலாந்து கடுமையான சமன்பாடுகளை நாடாமல் அரசியல் பேச்சுவார்த்தை மூலம் ஒருமித்த கருத்தை எட்டுகிறது.
இத்தகைய மாற்றங்களுக்கு அரசியல் சட்டத் திருத்தங்கள் தேவைப்படும். இதுவரை, பிரச்சினையைக் கையாள மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி, பிரச்சினையைத் தணிப்பதற்குப் பதிலாக அரசியல் ரீதியான கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது. எந்த மாநிலமும் அதிகாரப்பகிர்வில் ஓரங்கட்டப்படாத நிலையை உறுதிசெய்வதே கூட்டாட்சித் தத்துவத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நன்மை புரியும்.
*
கட்டுரையாளர்கள் பற்றிய குறிப்புகள்:
தீபான்ஷு மோகன் – பொருளாதாரப் பேராசிரியர், IDEAS அமைப்பின் டீன், புதிய பொருளாதார ஆய்வுகள் மையத்தின் இயக்குநர். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் வருகைப் பேராசிரியராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் AMES பிரிவின் வருகைப் பேராசிரியராகவும் உள்ளார்.
அமான் செயின் – புதிய பொருளாதார ஆய்வுகள் மையத்தில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர்.
நஜாம் உஸ் சாகிப் – காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். OP ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தின் புதிய பொருளாதார ஆய்வுகள் மையத்தில் (CNES) மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராக உள்ளார்.
தமிழில்: தேவா