ரவிக்குமார்
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கும், தொகுதிகளையும் மறுசீரமைப்பு செய்வதற்கும் வகை செய்யக்கூடிய அரசியலமைப்புச் சட்ட 131 ஆவது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் 16 .4 .2026 அன்று அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் மேல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு ஆதரவாக 251 வாக்குகளும், எதிராக 187 வாக்குகளும் பதிவாயின. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் தான் மசோதா நிறைவேறும் என்ற நிலையில் நாடாளுமன்ற மக்களவையில் மொத்தம் உள்ள 540 பேரில் மூன்றில் இரண்டு பங்கு எனில் 360 வாக்குகளை அரசு பெற வேண்டும்.
அதற்கு எதிராக 180 வாக்குகளுக்கு மேல் பதிவானால் மசோதா தோற்றுவிடும். அறிமுக நிலையில் 187 வாக்குகள் எதிராகப் பதிவாகி விட்டதால் மசோதா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
17.4 .2026 அன்று பிற்பகல் 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அந்த வாக்கெடுப்பில் மசோதா தோற்கடிக்கப்படும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் ஒன்றிய பாஜக அரசு வாக்கெடுப்பை நடத்தி அவமானப்படுமா அல்லது மசோதாவை திரும்பப் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு சட்டத்தை 16.4.2026 இரவு ஒன்றிய அரசு திடீரென அரசிதழில் வெளியிட்டிருப்பதால் மசோதா திரும்பப்பெறப்படலாம் என்ற ஐயம் அதிகரித்துள்ளது.
மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா 2023 ஆம் ஆண்டு அவையில் இருந்த இரண்டு உறுப்பினர்களைத் தவிர மற்ற எல்லோரது ஏக மனதான ஆதரவைப் பெற்று சட்டமாக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கே அதை நடைமுறைப்படுத்தி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபோது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பைச் செய்து, அதன் பின்னர் தொகுதி மறுசீரமைப்பை முடித்து அதற்குப் பிறகுதான் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அந்தச் சட்டத்தில் பாஜக அரசு கூறிவிட்டது. அவ்வாறு உள்ள நிலையில் இப்போது திடீரென இட ஒதுக்கீடு வழங்கப் போகிறோம் என்று சொல்வதன் காரணம் என்ன?
2001 ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட தொகுதி மறு சீரமைப்புச் சட்டம் 2026 க்கு பிறகு மேற்கொள்ளப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும் எனக் கூறியுள்ள நிலையில் ஒன்றிய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
2029 பொதுத் தேர்தலுக்கு முன்பு தொகுதியை மறுசீரமைப்பு செய்ய பாஜக அரசு விரும்புகிறது. அடுத்த சென்சஸ் சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் அதில் ஓபிசி மக்களின் எண்ணிக்கை தெரிவதற்குமுன்பே தொகுதி மறுசீரமைப்பையும் மகளிர் இட ஒதுக்கீட்டையும் செய்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். இது நடந்துவிட்டால் சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படாத விதத்தில் இடங்களை உயர்த்துவோம் என பிரதமரும் உள்துறை அமைச்சரும் அப்பட்டமாகப் பொய் சொல்கின்றனர். அதற்கான எந்தத் தடயமும் மசோதாக்களில் இல்லை.
இந்த மசோதாக்கள் சட்டமானால் எழும் அரசியல் சிக்கல்கள் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்படுகிறது. எனவே அதைத் தவிர்த்துவிட்டு நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவதால் எழும் சில நடைமுறை சார்ந்த சிக்கல்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
மக்களவை செயல்படும் நாட்கள்
தற்போது மக்களவையில் 543 உறுப்பினர்கள் உள்ள நிலையில் நாடாளுமன்ற விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கு 3 முதல் 5 நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. கடந்த 17 ஆவது நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 55 நாட்கள் மட்டும்தான் செயல்பட்டது. 850 உறுப்பினர்களாகும்போது ஒரு உறுப்பினர் இதே 3 நிமிடங்கள் பேசவேண்டுமெனில் நாடாளுமன்றம் செயல்படும் நாட்கள் 100 நாட்களைத்தாண்டி உயர்த்தப்பட வேண்டும். அதற்கு பாஜகவிடமிருந்து எந்த உத்தரவாதமும் இல்லை.

வினாக்கள் எழுப்புவதிலும் இதே சிக்கல்தான். இப்போதுள்ள லாட்டரி முறையில் ஒரு உறுப்பினருக்கு உடுக்குறியிட்ட வினா ( starred question) கிடைப்பது அவரது அதிர்ஷ்டம் சார்ந்ததுதான். 850 உறுப்பினர்கள் என்னும்போது அது மேலும் அரிதாகிவிடும்.
அமைச்சர்களின் எண்ணிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15% அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என 2003 இல் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனடிப்படையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 72 ஆக இருக்கிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயரும்போது அதற்கேற்ப அமைச்சர்களின் எண்ணிக்கை 128 ஆக உயரும். அது வீண் செலவுக்கே வழிவகுக்கும்.
மாநிலங்களவை மக்களவை விகிதம்
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படும்போது மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் மக்களவை உறுப்பினர்களுக்குமிடையே இருக்கும் விகிதம் மாறும்.
நாடாளுமன்ற நிலைக்குழுக்களிலும் ( standing committees) , கூட்டு நாடாளுமன்ற குழுக்களிலும் ( JPC) இடம்பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். அதனால் மாநிலங்களின் குரல் பலவீனமாகும்.
நாடாளுமன்றமானது ஜனநாயகத்தின் முதன்மையான கருவியாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொண்டால் இந்த அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர்

முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
