மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, உண்மையில் மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா அல்ல. நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றும் முயற்சி என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு ஒரு மணி வரை நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் வகையில் தாக்கல் செய்த இந்த மசோதா மூலம் மக்களவை தொகுதிகளை 850ஆக அதிகரிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
இந்தநிலையில் இன்று (ஏப்ரல் 17) மக்களவையில் ராகுல் காந்தி பேசினார்.
நேற்று மக்களவையில் பிரியங்கா காந்தி பேசும் போது இந்த திட்டத்தை முழுவதுமாக அமித்ஷா தான் தீட்டியிருக்கிறார் என்று கூறியிருந்தார். இதைக் கேட்ட அமித்ஷா சிரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அமித்ஷா என்னுடைய பதிலுக்கு உடன்படுகிறார் என்று பிரியங்கா காந்தி மக்களவையில் குறிப்பிட்டிருந்தார்.
இதை சுட்டிக்காட்டி தனது உரையை தொடங்கிய ராகுல் காந்தி, ‘கடந்த 20 ஆண்டுகளாக என்னால் செய்ய முடியாத ஒரு காரியத்தை என் சகோதரி செய்து முடித்து விட்டார். அதாவது அவர் அமித்ஷாவை சிரிக்க வைத்து விட்டார்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கும் பெண்களின் அதிகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த மசோதா இந்தியாவின் தேர்தல் வரைபடத்தை மாற்றுவதற்கான ஒரு முயற்சி.
இது சாதிவாரி கணக்கெடுப்பை தவிர்க்கும் செயல். ஓபிசி மற்றும் தலித்துகள் உள்ளிட்ட நாட்டின் சிறுபான்மையினருக்கு எந்த இடமும் அளிக்கக்கூடாது என்பதற்கான முயற்சி.
தேசத்தின் மீது தாக்குதல் நடத்தி சமூகத்தில் தலித்துகள் மற்றும் ஓபிசி மக்களுக்கான உரிய இடத்தை பறிக்கும் உங்கள் முயற்சியை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இணைந்து தோற்கடிக்கும்.
தென்னிந்திய மாநிலங்கள் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களுக்கு நான் ஒன்றை உறுதியளிக்க விரும்புகிறேன். இந்திய ஒன்றியத்தில் உங்களுக்கான பிரதிநிதித்துவத்தை குறைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
2023 ஆம் ஆண்டு கொண்டு வந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தோம். இப்போது மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வாருங்கள். நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிறைவேறாது என்று தெரிந்தும் பாஜக அரசு அதை தாக்கல் செய்திருக்கிறது. இதுவொரு பேனிக் ரியாக்சன்” என்று குறிப்பிட்டார்
மேலும் அவர், “பால்கோட் தாக்குதல், பணமதிப்பழிப்பு, ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் மந்திரவாதி பிரதமர் மோடி” என்று ராகுல் காந்தி விமர்சித்த போது, அவருக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ மற்றும் பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கிரண் ரிஜூ ஜூ பேசுகையில், “பிரதமர் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி பொருத்தமற்ற மொழியைப் பயன்படுத்துவதாகவும், பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசியதன் மூலம் அவர் ஆயுதப்படையினரை அவமதித்துவிட்டார்” என்றும் குற்றம்சாட்டினார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராகுல் காந்தியின் அந்த கருத்துக்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவை வலியுறுத்தினார். பிரதமர் மோடியைக் குறிக்க “மந்திரவாதி”என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்றும் ராஜ்நாத் சிங் காட்டமாக கூறினார்.
இந்த காரசாரமான விவாதத்தின் போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம்.பிர்லா, “இது போன்ற மொழியை அவையில் அனுமதிக்க முடியாது என்று கூறியதோடு, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்பில் மட்டும் கவனம் செலுத்துமாறு ராகுல் காந்திக்கு உத்தரவிட்டார்.
அப்போது ராகுல் காந்தி பாஜக எம்.பி.க்கள் குழப்பத்தில் இருக்கின்றனர் என்று கூறி, மந்திரவாதி என்ற வார்த்தையை தனது பேச்சில் தவிர்க்க ஒப்புக்கொண்டார்.
எனினும் தொடர்ந்து பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “நீங்கள் (பாஜக) இந்திய மக்கள் அல்ல, நீங்கள் ஆயுதப்படைகளும் அல்ல. நீங்கள் ஒரு அரசியல் அமைப்பு மட்டுமே. நாங்கள் இந்திய மக்கள் மீதோ அல்லது ஆயுதப்படைகள் மீதோ தாக்குதல் நடத்தவில்லை, நாங்கள் உங்களைத் தான் தாக்குகிறோம். நீங்கள் ஆயுதப்படைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்கள்,” என்று பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து மக்களவையில் கலகலப்பான சூழலை உருவாக்கினார் ராகுல். அதாவது, “இங்குள்ள நாம் அனைவருமே பெண்கள் – நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மனைவிகளால் செதுக்கப்பட்டவர்கள். சரி… நிச்சயமாக, எனக்கும், பிரதமர் மோடிக்கும் “மனைவி தொடர்பான சிக்கல்கள்” எதுவும் இல்லை ” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
