தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக முதல்வரின் தனி செயலாளர் உமாநாத் ஐஏஎஸுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது.
இந்தநிலையில் முதல்வரின் தனி செயலாளரான உமாநாத் ஐஏஎஸ்-ஐ பணியிட மாற்றம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞரான ஏ.மோகன்தாஸ் மனு தாக்கல் செய்தார்.
அதில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத் தனக்கு கீழ் பணி செய்யும் அதிகாரிகளுக்கு நிர்வாக ரீதியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு கடந்த ஏப்ரல் 10ம் தேதி தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று மனுதாரர் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் விரிவான வாதங்களை ஏப்ரல் 17ஆம் தேதி முன் வைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது தேர்தல் ஆணைய வழக்கறிஞர், இந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தேர்தல் பணியுடன் தொடர்பில்லாத ஒரு அதிகாரிக்கு எதிரானது என்று வாய்மொழியாக கூறினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஏப்ரல் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிரான தனது புகாரை நிரூபிக்க மனுதாரர் எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பான விவகாரங்களில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது’ என்று கூறி எழுத்துப்பூர்வமான பதிலை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என்று வாதம் முன் வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள் கூடுதல் கால அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
