DELIMITATION: மோடியும் அமித்ஷாவும் பாதி உண்மை சொல்கிறார்கள்- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

Published On:

| By Pandeeswari Gurusamy

P.chidambaram

மத்திய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதா மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் மோடியும் அமித்ஷாவும் பாதி உண்மை சொல்கிறார்கள் என ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் சாசன திருத்த மசோதா நேற்று நாடாளுமன்ற மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திருத்த மசோதாவுடன், மறுசீரமைப்பு மசோதா (Delimitation Bill) எனப்படும் மற்றொரு மசோதாவும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பெண்களுக்கு ஒதுக்கீடு என்று ஒரு போலியான செய்தியைப் பரப்புகிறார்கள். உண்மையில், பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது 2023 செப்டம்பர் மாதத்திலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

ADVERTISEMENT

543 இடங்கள் கொண்ட மக்களவையில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அரசியல் சாசன திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அது அரசியல் சாசன 106வது திருத்தம் அமலுக்கு வந்துவிட்டது.

நாடாளுமன்றம் இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, சுமார் 30 மாதங்கள் கழித்து நேற்று அதை அமல்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். எனவே, பெண்களுக்கு ஒதுக்கீடு என்பது எந்தப் பிரச்சினையும் இல்லை.

ADVERTISEMENT

இப்போது சொல்லப்படும் “பெண்களுக்கு ஒதுக்கீடு” என்பது வெறும் மாயை மட்டுமே. மக்களவை இடங்களை 543-இலிருந்து 850-ஆக உயர்த்தி, அதில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்குவதாகக் கூறுகிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால், எல்லா மாநிலங்களுக்கும் இடங்கள் கூடும் என்ற ஒரு புதுக் கரடியை உருவாக்குவதுதான்.

உதாரணமாக, தமிழ்நாட்டுக்கு 39 இடங்களிலிருந்து 58 ஆக உயரும் என்று சொல்கிறார்கள். அரசியல் சாசன திருத்த மசோதாவை மட்டும் பார்த்தால் இது உண்மைதான். ஆனால் இது ஒரு மாயை. அடுத்து வரும் Delimitation Bill (மறுசீரமைப்பு மசோதா) என்ன சொல்கிறது? மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடங்களை ஒதுக்க வேண்டும் என்பதுதான். தற்போது 543 இடங்களில் தமிழ்நாட்டுக்கு 39 இடங்கள் உள்ளன. இப்போது எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (Census) அடிப்படையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் என்பது தெளிவாக இல்லை.

ADVERTISEMENT

அரசு 2011 Census அல்லது அதற்குப் பிறகான தரவுகளைப் பயன்படுத்தலாம். மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால், தமிழ்நாடு போன்ற மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு இடங்கள் குறையும் என்பது பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

உதாரணமாக:தமிழ்நாடு: 39-இலிருந்து முதலில் 58 ஆக உயரும் என்று சொன்னாலும், மறுசீரமைப்புக்குப் பிறகு 46 அல்லது 47 ஆகக் குறையும்.
ஆந்திரா: 25-இலிருந்து முதலில் 38 ஆக உயரும், பின்னர் 30 ஆகக் குறையும்.
உத்தரப் பிரதேசம்: 80-இலிருந்து 120 ஆக உயரும், மறுசீரமைப்புக்குப் பிறகு 137 முதல் 140 ஆக மேலும் உயரும்.

பிரதமரும் உள்துறை அமைச்சரும் “எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவீதம் இடங்கள் கூடும்” என்று மட்டுமே சொல்கிறார்கள். மறுசீரமைப்புக்குப் பிறகு தென் மாநிலங்களின் பங்கு குறையும் என்பதை மறைக்கிறார்கள். இதைத்தான் நான் பல நாட்களாகச் சொல்லி வருகிறேன்.

ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். பாதி உண்மையை மட்டுமே அவர்கள் சொல்கிறார்கள். 50 சதவீதம் எல்லா மாநிலங்களுக்கும் கூட்டினாலும், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும்போது தென் மாநிலங்களின் ஒப்பீட்டு பலம் குறையும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் அனைத்தும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், சமாஜ்வாதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்துப் பேசியுள்ளன.

நேற்று எதிர்த்த உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 180-190 ஆக இருக்கும் என்று தெரிகிறது. இது 190-க்கு மேல் செல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, முக ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மசோதாவை தோற்கடிக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே, இந்த மசோதா தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share