தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு ஆதரவாக திமுக கூட்டணியில் உள்ள மதிமுக எம்.பி. துரை வைகோ பேசி வருகிறார். இந்தசூழலில், ’நீங்கள் தவெகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தருவீர்களா… இடைத்தேர்தலில் தவெகவுடன் செல்வீர்களா” என்ற கேள்விகளுக்கு பொதுக்குழு கூடி முடிவு செய்வோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும், துரை வைகோ எம்.பியும் கூறி வருகின்றனர்.
இந்தநிலையில் துரை வைகோ எம்.பி இன்று அடுத்தடுத்து 3 அமைச்சர்களை சந்தித்துள்ளார்.
சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோரைச் சந்தித்து துறை ரீதியான கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளார்.
மருத்துவமனைகள் குறித்து கோரிக்கை…
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்தபோது,
”திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனை தற்போது மிகவும் பழுதடைந்து, பயன்படுத்தவே தகுதியற்ற நிலையில் உள்ளதால் புதிய மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்படுவது மிகவும் அவசியமாகிறது.
இந்த அரசு மருத்துவமனையில் நான் இரு முறை ஆய்வு மேற்கொண்டேன்.
கடந்த 04.01.2025 அன்று இம்மருத்துவமனையில் நேரடி முதல் கள ஆய்வு மேற்கொண்டபோது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை, பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டடங்கள், 3-பேஸ் மின்சார இணைப்பில் 2-பேஸ் மட்டுமே செயல்படும் நிலை, கழிவு நீர் வெளியேற்றப் பாதை சரியாக இல்லாததால் பிணவறை மற்றும் கழிவறைகள் செயல்பாட்டுக்கு வராத நிலை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, இதனால் அடிப்படை மருத்துவ சேவைகளைக் கூட திறம்பட செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும், மருத்துவமனையை விரிவுபடுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அன்றைய சுகாதார துறை சார்ந்த அமைச்சரிடம் தெரிவித்தேன்.
அதன் பிறகு நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட DISHA கூட்டத்திலும் விரிவாக விளக்கி கோரிக்கை வைத்தேன்.
இந்நிலையில், இதுவரை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையை எடுத்துரைத்து, இனியும் காலம் தாழ்த்தாமல் ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் இம்மருத்துவமனையைப் புதிய கட்டடங்களுடன் முழுமையாக மறுசீரமைக்க வேண்டும்
அதன் அடிப்படையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், கடந்த 06.06.2026 அன்று மீண்டும் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டேன்.
முன்பை விட மோசமான நிலையில் இருக்கும் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதிகாரிகள் கொண்டு வந்த வரைபடத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், தேவையான மாற்றங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கியதையும் அமைச்சரிடம் விரிவாக எடுத்துரைத்தேன்.
அதே நேரம், தற்போதைய இடத்திலேயே மருத்துவமனை புதிய கட்டடங்கள் கட்டப்பட்டால் மருத்துவ பயனாளிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும் என்பதாலும், இப்போதுள்ள மருத்துவமனைக்கு அருகிலேயே நாங்கள் அடையாளம் காட்டிய அரசு நிலத்தில் புதிய மருத்துவக் கட்டிடங்களை அமைக்க கோரிக்கை விடுத்தேன். இந்த நிலம் இரண்டு ஏக்கருக்கு அதிகமான இடமுள்ள நிலம் என்பதாலும் இதனை தேர்வு செய்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் மற்றும் மாவட்டம் ஆட்சியரிடமும் ஒப்புதல் பெற்றுள்ளதையும் அமைச்சரிடம் எடுத்துரைத்தேன்.
மருத்துவ பயனாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வசதிகள் கிடைக்கவும், மருத்துவ சேவைகள் விரிவடையவும், புதிய கட்டிடங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதேபோல், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை விரிவான வசதிகளுடன் புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க கோரிக்கை மனு வழங்கினேன். தற்போது பழைய கட்டிடங்களில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு போதிய விரிவாக்க வசதி இல்லாததுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களும் மக்களை பாதித்து வருகின்றன. எனவே, எதிர்கால மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடனும் மருத்துவமனையை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு கூடுதல் கழிப்பறை வசதிகள், சுற்றுச்சுவர், கூடுதல் மருத்துவர் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்தேன். கிராமப்புற மக்களுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
மக்களின் மருத்துவ நலனே முதன்மை என்ற அடிப்படையில், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரை அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து விரிவாக விளக்கமளித்தேன்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் எனது கோரிக்கையின் அத்தியாவசியத்தை புரிந்துகொண்டு விரைந்து இதற்கான பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
பொதுமக்களின் நீண்டநாள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தடையற்ற மின்விநியோகம்
அதேபோன்று மின்சாரத் துறை அமைச்சரை சந்தித்தபோது, ”தமிழ்நாடு மின்வாரியத் தேர்வில் வெற்றி பெற்றும் பணி நியமன ஆணை பெறாமல் காத்திருக்கும் 5,493 கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்குவதுடன், நீண்டகாலமாக பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களின் பணியை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள கடலையூர் 33/11 கே.வி. துணை மின் நிலையத் திட்டத்தை விரைவுபடுத்தி, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடையற்ற மின்விநியோகம் கிடைக்க தேவையான பணிகளை உடனடியாக தொடங்குமாறு வலியுறுத்தினேன்.
மேலும், திருச்சி மாநகரில் விபத்துகள் அதிகம் நிகழும் G-Corner பகுதியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) செயல்படுத்தவுள்ள உயர்மட்ட சுழற்பாலம் திட்டப் பணிகளை தாமதமின்றி முன்னெடுக்க, TANTRANSCO மின் பரிமாற்றக் கட்டமைப்புகளை இடமாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டு தொகைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தேன்.
இதுகுறித்து அமைச்சரிடம் உரையாடுகையில், திருச்சி மக்களின் 15 ஆண்டுகாலத்திற்கு மேலாக நிலுவையிலேயே காத்திருந்த இந்த திட்டத்தை நிறவேற்ற, நான், தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம், ஒன்றிய நிதி அமைச்சகம், ஒன்றிய ரயில்வே அமைச்சகம், மற்றும் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகிய துறை அமைச்சர்களை, அதிகாரிகளை பல முறை சந்தித்து, இத்திட்டத்திற்கான தேவையை விரிவாக எடுத்துரைத்து, அனைவரையும் மையப் புள்ளிக்கு நகர்த்தி, இந்த திட்டத்தை, பல சிரமங்களுக்கிடையில் இந்நிலைக்கு முன்நகர்த்தி வந்துள்ளேன் என்று, இந்த திட்டத்தின் அவசியத்தையும், எனது முன்னொடுப்பின் தீவிரத்தையும் அமைச்சரிடம் எடுத்துக்கூறி,
திட்டப் பணிகளுக்குத் தேவையான மின் பரிமாற்றக் கட்டமைப்புகளை இடமாற்றம் செய்வதற்கான மதிப்பீடுகளை TANGEDCO விரைவாக வழங்கி, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் இத்திட்டங்கள் தாமதமின்றி செயல்படுத்தப்பட உறுதி செய்ய வேண்டுமெனவும் அமைச்சர் அவர்களிடம் எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை வழங்கினேன்.
அதேநேரத்தில், திருச்சி மாருதி நகர், ஸ்ரீரங்கம் Y-Corner சந்திப்பு மற்றும் சஞ்சீவி நகர் பகுதிகளில் NHAI சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள வாகன சுரங்கப்பாதை (Vehicular Underpass) திட்டத்திற்கும் இதே கோரிக்கையை முன்வைத்தேன்.
அனைத்து மனுக்களையும் பெற்றுக்கொண்டு, எனது விரிவான விளக்கங்களையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள், பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக உறுதியளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்தின் தேவை
போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்தபோது, ”திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருச்சி மாவட்டம் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) கும்பகோணம் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய வணிக மையமாகவும், கல்வி, தொழில், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத் தலமாகவும் வளர்ந்து வரும் திருச்சி மாநகரின் மக்கள் தொகை தற்போது 15 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்தின் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது என்றும்,
தமிழ்நாட்டில் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் தனிப்போக்குவரத்துக் கோட்டத் தலைமையிடம் இல்லாத ஒரே நகரம் திருச்சி மட்டுமே. இதன் காரணமாகப் புதிய பேருந்து வழித்தடங்கள் உருவாக்கம், பேருந்துகள் ஒதுக்கீடு, வாகன மேலாண்மை மற்றும் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட நிர்வாக முடிவுகளில் கணிசமான தாமதங்கள் ஏற்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினேன்.
இக்கோரிக்கையை கடந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. எஸ். எஸ். சிவசங்கர் அவர்களுக்கு 08.10.2025 அன்று சமர்ப்பித்திருந்ததையும், தற்போது 04.06.2026 அன்று முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் கொடுத்து விளக்கியதையும் தெரிவித்தேன்.
நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் இம்முக்கிய கோரிக்கையின் அவசியத்தை உணர்ந்து, தேவையான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தினேன்.
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிப் போக்குவரத்துக் கோட்டத்தை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கித் தரும் என்று உறுதியான நம்புவதாக தெரிவித்து விடைபெற்றேன். அமைச்சர் அவர்களும் எனது கோரிக்கையின் அவசியத்தை புரிந்துகொண்டு உடன் பரிசீலித்து நல்ல முடிவை எட்டுவதாக உறுதியளித்தார்.
மேலும், இன்னொரு கோரிக்கையாக, மறுமலர்ச்சி திமுகவின் தொழிற்சங்கமான, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் (MLF) இணைப்புச் சங்கமான, போக்குவரத்து தொழிற்சங்கத்திற்கு அனைத்து கோட்டடமைய அலுவலகங்களில் சங்கப் பணிகளை மேற்கொள்வதற்கு அலுவலகம் ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை கடிதம் வழங்கி கேட்டுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் துரை வைகோ.
