சட்டசபையில் கோயில்கள் நிதியிலிருந்து கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இடையே கடுமையான விவாதம் நடந்தது.
தவெக அரசின் குரல் யாருடையது?

சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருவாய், அதன் புனிதமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்தைக் கவனிக்கும்போது, அறநிலையத்துறை இயங்கக்கூடாது என்று வலியுறுத்தும் பாஜகவின் குரலைத்தான் தவெக அரசும் எதிரொலிக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
உதயநிதி ஸ்டாலின் கேள்வி (Udhayanidhi Stalin)
பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களை நடத்தக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளையும் தொடர்ந்துள்ளன. எனவே, தற்போதைய இந்த நிலைப்பாடு திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களுடன் நின்றுவிடுமா? அல்லது இந்த நிபந்தனைகள் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையில் நீட்டிக்கப்படுமா?” என்றார்.
அமைச்சர் ரமேஷ் அளித்த பதில்

இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பதிலளிக்கையில், “அறநிலையத்துறையைப் பொறுத்தவரை, கோவில்களின் வருமானம் கோவில்களுக்கும், அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கும் செலவிடப்பட வேண்டும் என்பதே ஆளுநர் உரையின் சாராம்சம்.
மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத நிலையில் நிறுத்தப்பட்டன. இந்தப் பணிகளைப் பற்றி ஆராய்ந்தபோது, கோவில்களில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், தங்கும் இட வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதை விட, வணிக ரீதியாக வருவாய் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இத்திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவை நீதிமன்ற வழக்குகளிலும், இடைக்காலத் தடை உத்தரவுகளிலும் (stay order) இருந்ததால், இத்திட்டங்களை ரத்து செய்து அரசு அறிவித்தது.
இதற்கு ஒரு உதாரணமாக, குன்னூரில் உள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவிலைக் குறிப்பிடலாம். கோவிலுக்கு மாதம் சராசரியாக 500 பக்தர்கள் மட்டுமே வரும் நிலையில், கோவில் நிதியைப் பயன்படுத்தி 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கும் திட்டத்திற்கு முந்தைய ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்தக் கோவிலில் அடிப்படை கழிப்பறை வசதி கூட இல்லாத சூழலில், குன்னூர் மற்றும் உதகையைச் சுற்றியுள்ள 50 கோவில்களிலும் அடிப்படை டாய்லெட் வசதிகள் இல்லை. எனவே, கோவில் நிதியை வணிக ரீதியாகப் பயன்படுத்தாமல், பக்தர்கள் பயன்பெறும் வகையில் மாற்றுத் திட்டங்களை உருவாக்குவோம் என்று அரசாணையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
மக்கள் பயன்படக்கூடிய கல்வி நிலையங்களையோ அல்லது மருத்துவ வசதிகளையோ நாங்கள் செய்ய மாட்டோம் என்று கூறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் பழனியில் சித்த மருத்துவமனை கட்டுவதற்கான வாய்ப்பு இருந்தும், அதை முந்தைய அரசு கிடப்பில் போட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆகவே, மக்கள் பயன்படும் திட்டங்களை அரசு தடுக்கவில்லை; மாறாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், கோவில் நிதியை வணிக ரீதியாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை” என்றார்.
அமைச்சர் ரமேஷுக்கு சேகர் பாபு பதில் (Minister Ramesh VS Sekar Babu)

அமைச்சர் ரமேஷின் இந்த பதிலுக்கு விளக்கம் தந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலையத்துறை கொடைகள் என்ற ஒரு சட்டம் இருக்கிறது. அந்தச் சட்டத்தில் விதி 69 என்ற குறிப்பிடப்பட்டிருக்கின்ற அந்தப் பணிகள், சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்டத்தின் 36 பிரிவில் இருந்து தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஏதோ அமைச்சரே முடிவு செய்து திருமண மண்டபங்களையும் வணிக வளாகங்களையும் ஏற்படுத்துவதற்கு உத்தரவிட்டதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அவைக்கு உண்மைக்கு புறம்பான தகவலைத் தந்து கொண்டிருக்கின்றார்.
ஒவ்வொரு திட்டங்களும் அன்றைய காலகட்டத்தில் இருந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில்தான் அனைத்து திட்டங்களும் அந்தக் கால கட்டங்களில் கொண்டு வரப்பட்டது.
அதோடு மட்டுமல்ல, உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டு கூறினார். குன்னூரிலே மல்டி லெவல் கார் பார்க்கிங் கொண்டு வரப்பட்டது என்றார்.. அங்கே இருக்கின்ற 56 கோவில்களையும் நான் குன்னூரிலே ஐந்து நாட்கள் ஊட்டியில் முகாமிட்டு, அனைத்து கோவில்களுக்கும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் அடிப்படையில் அந்தத் திருக்கோவில்களுக்கு வருகின்ற பக்தர்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கு வருமானத்தை உயர்த்துவதற்காக குன்னூருக்கு சுற்றுலாவிற்கு வருகின்ற மக்களுடைய வாகனங்கள் போதிய அளவிற்கு பார்க்கிங்கிற்கு இடமில்லாமல் தவிக்கின்ற சூழ்நிலையில் அங்கே மல்டி லெவல் கார் பார்க்கிங் கொண்டு வந்தால், நகராட்சி பரிந்துரையின் அடிப்படையில் வருமானம் பெருகும் அந்த வருமானம் திருக்கோயில்களுடைய மேம்படுத்துகின்ற பணிகளுக்கு உதவும் என்பதற்காகத்தான் அந்தப் பணிகளை மேற்கொண்டோம். யார் அறிவுறுத்தி திட்டங்கள் ரத்து அரசாணையை வெளியிட்டிருக்கின்றாரோ அவர் தான் அப்பொழுது ஆணையாளராக இருந்த பொழுது இதே அறிவுறுத்தலின் பேரில் அரசாணையை வெளியிட்டிருக்கின்றார்” என்றார்.
சேகர் பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் பதில்
முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதில் தந்த அமைச்சர் ரமேஷ், “குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பதற்காக ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் முன்மொழிவு வழங்கியிருந்தது. அந்த நகராட்சி நிர்வாகத்திடம் நம்முடைய நிலத்தைக் குத்தகைக்குக் கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு நம்மால் முடிந்தவரை கோவிலுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கலாம். ஆனால், கோவில் நிதியிலிருந்து 10 கோடி ரூபாயை எடுத்து அங்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைப்பதை எந்தப் பொதுமக்களோ அல்லது பக்தர்களோ கேட்கவில்லை. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவதெல்லாம் கோவிலுக்கு உள்ளே சென்று மனநிறைவுடன் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதுதான்; அதைச் செய்தாலே போதுமானது” என்றார்.
