முதல்வர் விஜய் அரசை விளாசிய உதயநிதி ஸ்டாலின்- சரமாரி கேள்விகள்!

Published On:

| By Mathi

Udhayanidhi Stalin's Questions to the CM Vijay Govt.

தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), சரமாரியான கேள்விகளையும் எழுப்பினார்.

விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

சட்டசபையில் இன்று ஜூன் 22-ந்தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பெருமை வாய்ந்த இந்த அவையில ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கின்ற தீர்மானத்திலே பேசுகின்ற வாய்ப்பை தந்த பேரவை தலைவருக்கும் முதலினுடைய நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு திராவிட முன்னேற்ற கழகத்திலைய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் சார்பாகவும் எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் நான் தெரிவிக்கிறேன்.

ADVERTISEMENT

ஆளுநர் உரையில் என்னதான் இருக்கிறது?

இந்த புதிய ஆட்சி அமைந்து சரியாக 40 நாட்கள் கடந்துவிட்டன. ஆளுநர் உரையின் போது நானும் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த 40 நாட்களில் இந்த அரசு என்னென்ன பணிகள் செய்துள்ளது? ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறதா? ஏதாவது சாதனைகள் செய்திருக்கிறதா? என ஆவலோடு காத்திருந்தோம். ஆனால் எங்களுக்கு வெறும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆளுநர் உரையில் எங்களுடைய கண்களுக்கு எதுவுமே படவில்லை. எங்களுடைய காதுகளுக்கு எதுவும் கேட்கவில்லை.

தமிழ்த் தாய் வாழ்த்து

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நான் பேசும்போது குறிப்பிட்டது, “ஆளுநர் வருவார்.. அப்போது தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்க” என்றேன்.

ADVERTISEMENT

அதேபோல தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டுள்ளது. ஆனால் உடனடியாக தேசிய கீதமும் பாடப்பட்டது.

மரபை மீறி 2 முறை தேசிய கீதம்

தமிழ்த் தாய் வாழ்த்து 1 முறையும் தேசிய கீதம் 2 முறையும் பாடப்பட்டுள்ளது. இதில் மரபு மீறல் நிகழ்ந்துள்ளது. இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த மரபை மீறி 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதே கோரிக்கையை இதற்கு முன்பு இருந்த ஆளுநர் எங்களுடைய ஆட்சி காலத்திலேயும் வைத்தார். ஆனால் எங்களுடைய தலைவர் அப்பொழுது மிக உறுதியாக இருந்து இந்த அவையின் இறையாண்மையை நாங்கள் பாதுகாத்துள்ளோம்.

பதவி ஏற்புதான் ஆளுநர் மாளிகையில அமைந்தது. அங்கு அவர் கேட்டு கொண்டபடி தேசிய கீதம், வந்தே மாதரம் பாடினார்கள்.

ஆனா ஆளுநர் உரை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாம் பணி செய்கின்ற இந்த சட்டமன்றத்தில்தான் வாசிக்கப்பட்டது.

”இது நமது டெரிட்டரி. இந்த டெரிட்டரிய ஏன் ஆளுநர்கிட்ட கொடுக்கிற அளவுக்கு இங்க என்ன காம்ப்ரமைஸ் நடந்துச்சு?” அப்படின்னு மக்கள் கேட்க ஆரம்பிச்சிருக்காங்க… ” என கேள்வி எழுப்பினார்.

சபாநாயகர் தந்த விளக்கம்

இதனையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “ஆளுநர் உரையாற்ற வந்தபோது தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பது இந்த அரசின் உறுதியான கொள்கை. அதில் நாங்கள் நின்றோமா இல்லையா? இந்த அவை நின்றதா இல்லையா? என்பதை நீங்கள் முதல்ல பார்க்க வேண்டும். நாட்டுப்பண் 2 முறை பாடியதில் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை. நாட்டுப்பண் 2 முறை பாடியது தவறு என்று நீங்கள் சொல்ல வருகின்றீர்களா? அப்படி தவறு என்றால் அது எந்த அடிப்படையில் தவறு என்று சொல்கிறீர்கள். நமக்கு வேண்டியது நம்முடைய தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதுதான். அதில் உறுதியாக நிற்க வேண்டும் என்பதுதான். இந்த அரசு எந்த சர்ச்சையும் ஏற்படுத்தாமல் நிதானமாக, உறுதியாக தாய் தமிழ்தான் எங்களுக்கு அடிப்படை என்பதை வைத்து தமிழ்த் தாய் வாழ்த்தை பாட வைத்தார்களா இல்லையா? அந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாட முடியாமல் வேறு விதமாக இந்த அவை திசைதிருப்பப்பட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளான காரணங்களை எல்லாம் 2022, 2023, 2023, 2025, 2026-ம் ஆண்டுகளில் பார்த்தோம். இந்த ஆண்டு தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட வைத்து தேசிய கீதத்தை இருமுறை பாடியதில எந்த தவறும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அப்படி பாடியது தவறு என்று நீங்களும் கருதிட கூடாது என்று நான் சொல்ல விரும்புகின்றேன்.

2 முறை தேசிய கீதம் ஏன்? உதயநிதி கேள்வி (Udhayanidhi Stalin)

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நாங்க கேட்டு கொண்டபடி தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடிவிட்டீர்கள். அது பொதுவாக இந்த அவையில இருக்கக்கூடிய மரபு. கடந்த காலங்களில் கடந்த ஆட்சி காலங்களில் தமிழ்த் தாய் வாழ்த்து ஒருமுறையும், நிகழ்ச்சி முடிந்த பின் உடனே தேசிய கீதம் ஒரு முறையும் தான் பாடப்பட்டது.

ஆனால் இந்த முறை நாங்கள் கேட்பது ஏன் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது? என்கிற கேள்வி மட்டும்தான்.

தேசிய கீதத்தை 2 முறை பாடியது போல தமிழ்த் தாய் வாழ்க்கையும் 2 முறை பாடுவதற்கு ஆளுநரிடம் நீங்கள் கோரிக்கை வைத்திருக்கலாம்.

ஆளுநர்தான் உங்களுக்கு முக்கியமா?

இங்கே பேசிய ஆளும் கட்சி உறுப்பினர்கள், ஆளுநர் ”அவ்வளவு” மகிழ்ச்சியாக இருக்கிறார் என ஆளுநரை விட மகிழ்ச்சியாக பேசினீர்கள். ஆளுநர் முன்னிலையில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடிவிட்டோம் என பெருமையாக பேசுகிறீர்கள்

நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, ”தமிழ்த் தாய் வாழ்த்தை விட ஆளுநர்தான் உங்களுக்கு முக்கியம்” என்கிற எண்ணம் எங்களுக்கும் மக்களுக்கும் ஏற்படுகிறது” என்றார்.

ஆதவ் அர்ஜூனா குறுக்கீடு

அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா குறுக்கிட்டு தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டது பற்றிய விளக்கம் அளித்தார்.

3 முறை தமிழ்த் தாய் வாழ்த்து பாடி இருக்கலாமே?

பின்னர் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நாங்க மீண்டும் கேட்பது.. தமிழ்த் தாய் வாழ்த்து ஒருமுறை பாடினீர்கள்.. அதற்கு எங்களது வாழ்த்துகள். ஆனால் ஏன் தேசிய கீதத்தை 2 முறை பாடினீர்கள்?

தேசிய கீதத்தை 2 முறை பாடும் போது தமிழ்த் தாய் வாழ்த்தையும் 2 முறை அல்லது 3 முறை பாடுகிறோம் என ஆளுநரிடம் சொல்லி அதை செய்து காட்டி இருக்க வேண்டும்.

அதனால்தான், “உங்களுக்கு ஆளுநர் முக்கியமா, தமிழ்த் தாய் வாழ்த்து முக்கியமா?” என கேட்கிறோம்.

தலையில் வைத்து கொண்டாடுகிறீர்கள்

ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா. உங்களது கொள்கை தலைவர் பட்டியலில் அவரும் இருக்கிறார். ஆனால் இன்றைக்கு ஆளுநரை தலையில் வைத்து கொண்டாடுகிறீர்கள்” என்றார்.

உதயநிதி விமர்சனத்துக்கு பதில்

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ”யாரையும் தலையில வைத்து கொண்டாட வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு இல்லை. இந்த அவையை பொருத்தவரைக்கும் ஆளுநர் இங்கே வருகை தருகிற போது உரிய முறையில் மரியாதையும், இந்த அவையினுடைய விருப்பத்திற்கு ஏற்ப அவைத்தலைவரின் விருப்பத்திற்கு ஏற்பத்தான் நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்த் தாய் வாழ்த்தை முதலில் பாட வைத்து தமிழ் தாய்த் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் ஒருமுறை அல்ல, 2 முறை பாடப்பட்டது. அதில் எந்த விதமான தவறும் கிடையாது. அதில் உள்நோக்கம் கற்பிப்பது தவறு என்று நான் கூறுகின்றேன்” என்றார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share