தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டப்பேரவை! வழக்கத்துக்கு மாறாக முதலிலேயே தேசிய கீதம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான புதிய கூட்டணி அரசு கடந்த மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. புதிய அரசின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் உரையுடன் கூட்டத்தொடர் ஆரம்பமானது.

கோட்டை நுழைவாயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு

சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, கோட்டை பிரதான கட்டிடத்தின் இரண்டாவது நுழைவு வாயிலில் காவல்துறை வாத்தியங்கள் முழங்க, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் சபை செயலாளர் ஆகியோர் ஆளுநருக்குப் பூங்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்றனர்.

ADVERTISEMENT

தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம்

ஆளுநர் பேரவை மண்டபத்திற்குள் வருகை தந்ததைத் தொடர்ந்து, கூட்டத்தொடரின் தொடக்கமாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது. பின்னர் கூட்டத்தொடரின் தேசிய கீதமும் பாடப்பட்டது.

“வணக்கம்” கூறி உரையைத் தொடங்கிய ஆளுநர்

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தமிழில் “வணக்கம்” என்று கூறித் தனது முதல் உரையை வாசிக்கத் தொடங்கினார். தனது உரையில், “மக்களே ஜனநாயகத்தில் உயர்ந்தவர்கள்” என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை அவர் மேற்கோள் காட்டினார்.

ADVERTISEMENT

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆளுநர், “சாதி, மதம் கடந்து, பணம் கொடுக்காமல் தவெக-வை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் மக்கள் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது” என்று பாராட்டிப் பேசினார். பொதுமக்களின் நலனுக்கான விவாதங்கள் இந்தச் சட்டப்பேரவையில் ஆரோக்கியமாக நடைபெறும் என்றும் ஆளுநர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார். தற்போது ஆளுநர் புதிய அரசின் திட்டங்கள் குறித்த உரையைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share