மேகதாது அணைக்கு எதிர்ப்பு.. உதயநிதி கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் “திருத்திய தீர்மானத்தை” ஏற்க முடியாது.. எடப்பாடி பழனிசாமி திடீர் அறிவிப்பு!

Published On:

| By Mathi

EPS rejects CM Vijay's revised resolution on Mekedatu dam

”மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபை நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்ச்சி நிரல் நாள் 19.6.2026-ன், வ.எண் 5ல், தெரிவிக்கப்பட்ட அரசினர் தனி தீர்மானம் மூலம் கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நான் ஆதரித்து பேசினேன்.

ADVERTISEMENT

எனக்கு அடுத்து உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் தன்னுடைய உரையில் ஏற்கனவே திருத்தம் ஒன்று அளித்திருப்பதாகவும், அது பற்றிய கருத்தை தெரிவித்தார்கள். உடனடியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து, ‘நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பான ஒரு பத்தியை’ இணைக்கலாம் என தெரிவித்தார்கள்.

பொதுவாக தீர்மானத்திற்கான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு, பேரவையில் பின்னர்தான் சேர்க்கப்பட வேண்டும். வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு

ADVERTISEMENT

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவர் கொண்டுவந்த திருத்தத்துடன் கூடிய தீர்மானத்தை முன்மொழியப்படாமல், வழிமொழியப்படாமல், விவாதிக்கப்படாமல், வாக்கெடுப்பிற்கும் விடப்படாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது சட்டமன்ற விதிகளுக்கு முற்றிலும் முரணானது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 19.6.2026 சட்டமன்ற நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, முதலமைச்சர் கடைசியாக மொழிந்த இடைச் செருகல் தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.

ADVERTISEMENT

திருத்திய தீர்மானம் அரசினர் தனித் தீர்மானம் ஆகாது. இத்தீர்மானம் யாரை மகிழ்விக்க ? யாரை வஞ்சிக்க ?. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தீர்மான திருத்தம்- நடந்தது என்ன?

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “ மேகதாது பிரச்சனையில் தனி நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய் தமது பதில் உரையில், “எதிர்க்கட்சித் தலைவரால் அளிக்கப்பட்ட கருத்தை 4-வது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என பேரவைத் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து அரசினர் தனித் தீர்மானத்தில், “ தமிழ்நாடு அரசின் 4.03.2026 தேதியிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டம், 1956 பிரிவு 4-ன் கீழ் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது” என்பது சேர்க்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்திருத்திய தீர்மானத்தை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share