தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று கூடியது.
இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 19) சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது.
இந்தசூழலில் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், “ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பேசுகின்ற வாய்ப்பை எங்கள் கழக தலைவர் முக ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதினும் வழங்கி இன்றைக்கு சட்டமன்றத்திலே என்னுடைய கருத்துக்களை பதிவு செய்தேன்.
அந்த கருத்துக்கள் நேரலையில் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் நேரலை வழங்கப்படாத காரணத்தினால் அந்த கருத்துக்களை உங்களிடத்திலே பகிர்ந்து கொள்வதற்காக தான் இப்போது உங்களை சந்திக்க வேண்டிய சூழல்.
ஆளுநர் உரை மாத்திரமல்ல, அந்த உரை நிகழ்த்துகின்ற நேரத்தில் முன்னும் பின்னும் நடைபெற்ற சம்பவங்களையும் அது ஏற்படுத்தி இருக்கின்ற தாக்கத்தையும் குறித்து சட்டப்பேரவையில் நான் பதிவு செய்தேன். பேரவையிலே ஆளுநர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், பேரவை தலைவருடைய உரைக்கு பின்பாக தேசிய கீதம் பாடுவதும் ஒரு மரபாக தமிழ்நாட்டு சட்டமன்றத்திலே கடைபிடிக்கப்பட்டு வருவதை மீறி, நேற்றைக்கு தேசிய கீதத்தை இரண்டு முறை பாட வேண்டிய அவசியம் என்ன என்ற வினாவை நான் எழுப்பினேன்.
நேற்றைக்கு எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டதை போல தவெகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு இணக்கமான உறவு வருகிறதோ என்கின்ற அந்த ஐயம் தான் வலுபட்டிருக்கிறது. காரணம் ஆளுநர் நேற்றைக்கு நடந்த நிகழ்வை ஒரு சரித்திர நிகழ்வு என்று பதிவு செய்கிறார். ஆளுநர் உரை நிகழ்த்தியதற்கு ஒரு இணக்கமான முறையிலே உரை நிகழ்த்தி சென்றிருக்கிறார் என்று சட்டப்பேரவை தலைவர் நன்றி தெரிவிக்கிறார். இப்படி ஒருவருக்கொருவர் அவர்கள் நன்றி தெரிவிப்பதும் பாராட்டிக் கொள்வதும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது என்கின்ற கருத்தைதான் நாங்கள் பதிவு செய்தோம். இது மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று எதிர்பார்த்தோம், நேரலையில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேபோல ஆளுநர் உரையிலே இடம்பெற்றிருக்கின்ற கருத்துக்கள் ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்ற நேரத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளாக பறைசாற்றப்பட்டவை. அது மும்மொழி கொள்கைக்கு எதிரான கருத்தாக இருந்தாலும், நீட் தேர்வு எதிர்ப்பாக இருந்தாலும், மீனவர் நலன்களை பாதுகாப்பதாக இருந்தாலும், எல்லா விஷயங்களிலும் திராவிட முன்னேற்றக் கழக கருத்துக்களையே அவர்கள் மீண்டும் இங்கே வேறு வார்த்தைகளை கொண்டு வேறு வண்ணம் பூசி வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அவர்கள் புதிதாக சொன்னது என்றால் ‘சிங்கப்பெண்’ திட்டம் மாத்திரம் தான். அதுவும் ஏற்கனவே இருக்கின்ற காவல்துறையிலே பணியாற்றுகின்றவர்களுக்கு வேறு ஒரு சீருடைய அணிவித்து, அது ஏதோ புதிய திட்டம் போல சொல்கிறார்கள் என்கின்ற கருத்தை எல்லாம் இன்றைக்கு பதிவு செய்தோம். அதற்கு பதிலளித்த அமைச்சர் பெருமக்கள் மழுப்பலாக திசை திருப்புகின்ற வகையில் தான் பதிலளித்தார்கள்.
இப்பொழுது நாங்கள் மீண்டும் குறிப்பிடுவது திங்கட்கிழமை, எதிர்கட்சி தலைவர் உரையாற்ற இருக்கிறார். அப்படி உரையாற்றுகின்ற பொழுது அவர் உரையாற்றுவதை நேரலை செய்ய வேண்டும். காரணம் இந்த ஆட்சி மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வருகின்ற பொழுது அதிலே உரையாற்றிய அனைவருடைய உரையும் நேரலையில் சென்று சேர்ந்தது. அப்படி சென்று சேர்ந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவருடைய உரை நேரலையில் சென்று ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் எழுப்பிய கேள்விகள் எல்லாம் நியாயமானவை, தங்கள் மனதிலே இருக்கின்றவைதான் என்று தமிழ்நாட்டு மக்கள் எண்ணுகின்ற அளவிற்கு அமைந்திருக்கிறது. ஆனால் அன்றைக்கு அதற்கு முதலமைச்சர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். வீட்டிற்கு போய் மாலை வொர்க் அவுட் செய்து ட்விட்டரிலே அதற்கு ஒரு பதில் அளித்தார்.
அங்கே சட்டமன்றத்திலே கேட்கின்ற கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க முடியாமல் இருக்கின்ற காட்சியை மக்கள் பார்த்துவிட்டார்கள் என்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நேரலையை செய்யாமல் தவிர்த்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்திருக்கிறது. எனவே சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகின்ற நேரத்திலும் மற்ற சட்டமன்ற கட்சித் தலைவர்கள் உரையாற்றுகின்ற நேரத்திலும் அவற்றை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்கின்ற அந்த கருத்தை இந்த நேரத்தில் நான் வலியுறுத்துகிறேன்” என்றார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“நீங்கள் கடந்த காலங்களில், இதே போன்று நேரலை செய்யவில்லை. அது பல பிரச்சனைகளை எழுப்பியது. இப்போது அதையே நீங்களும் சொல்கிறீர்கள்?”
“நல்ல கேள்வி, அதான் நல்ல கேள்வி.நாங்கள் முதலில் வினா விடை பகுதிகளை ஒளிபரப்பினோம். ஆனால் அதெல்லாம் நாங்கள் செய்யவில்லை என்று சொல்லி, ஒரு மாற்றம் வேண்டும்’ என்று கூறி அந்த மாற்றத்தை பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். சொன்ன மாற்றத்தை அவர்கள் செயல்படுத்தவில்லை என்பது தான் எங்களுடைய கருத்து.
கேள்வி கேட்டா சட்னியப் பத்தி பேசுறாங்க, ஆனால் கிட்னியப் பத்தி பேச மாட்டாங்கன்னு வைகைச்செல்வன் சொல்லிருக்காரே?
“வைகைச்செல்வன் சொன்னது என்னன்னு தெரியல. அவர் அவைக்கு வெளியில இருந்து என்ன வேணும்னாலும் பேசலாம். அவைக்கு உள்ளே நான் பேசியது, ‘இன்றைக்கு வெளியிடப்பட்ட ஆளுநர் உரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிட்டு இருக்கீங்க. முதலமைச்சருக்கு திரைப்படம் இயக்குனராக இருந்த அட்லி படம் போல இது எல்லாவற்றையும் ஒரு கூட்டுக் கலவையா இருக்கு’ன்னு தான் நான் சொன்னேன். அது அந்த மொழி தான் அங்க போய் சேரும். எந்த மொழியை வைத்து வந்தார்களோ அந்த மொழிக்கு செல்ல வேண்டும் என்றுதான் சொன்னேன். அது வைகைச்செல்வன் தலைமுறைக்கு புரியாமல் இருக்கலாம்.”
