முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாத அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்பி வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது கோவை மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்த பணிகளுக்கு 654 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 440 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரி பார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
இறுதியாக 54 பேர் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்..
இந்த சூழலில் இந்த நியமனங்களை ரத்து செய்யக் கோரியும் தனக்கு முன்னுரிமை வழங்க கோரியும் கருணை அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்காத நிலையில் பணி நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஈஸ்வரி உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், ’உரிய தகுதி இருந்தும் முறையாக விளம்பரங்கள் செய்யப்படாததால் இளநிலை உதவியாளர் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் தங்களால் கலந்து கொள்ள முடியவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் செல்வாக்கு காரணமாக உரிய விதிகளையும் இட ஒதுக்கீட்டு நடைமுறையையும் பின்பற்றாமல் ஒரே நாளில் 54 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து இன்று (ஜூன் 19) உத்தரவு பிறப்பித்த பதி எஸ் .ம்.சுப்பிரமணியம் நீதிபதி செந்தில்குமார் அமர்வு, ’தமிழக அரசு தேர்வாணையம் மூலமாகவோ அல்லது மற்ற தேர்வு நடைமுறைகளோ பின்பற்றப்படாமல் 54 பணியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புறவாசல் வழியாக இந்த பணி நியமனங்கள் நடந்துள்ளன. எனவே 54 இளநிலை உரிமையாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
முறைகேடான பணி நியமனங்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். காலியான பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறினர்.
