மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில்: “எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்: “வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், அரசியலமைப்புக்கு நாம் அளித்த உறுதிமொழியிலும் தொடர்ந்து உறுதியாக இருப்போம். தமிழ்நாட்டு மக்களின் நலன், கண்ணியம் மற்றும் கனவுகளை நனவாக்க நாம் இணைந்து பாடுபடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
