அரசு உதவி பெறும் கல்லூரிகள் என்ற அடிப்படை நோக்கம் தூர்ந்து விட்டது: இனி என்ன செய்யலாம்?

Published On:

| By நா.மணி

நா.மணி

தமிழ் நாட்டில் 161 அரசு உதவிபெறும் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகள் உயர் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்கு ஆற்றின. இன்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு அதன் பங்களிப்பு கணிசமானது. இந்த அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரி போன்றவற்றில் பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இன்றுவரை நிரப்பப்படவில்லை.

மதுரை யாதவர் கல்லூரி ஒரே சமயத்தில் 50க்கும் அதிகமான ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள உத்தரவைப் பெற்று அனைத்துப் பணியிடங்களையும் நிரப்பிக் கொண்டது. அதேசமயம், பல கல்லூரிகள் ஒரேயொரு காலிப்பணியிடம் கூட பாக்கி இல்லாமல் ஆசிரியர் அலுவலர் பணியிடங்களை முற்றிலும் நிரப்பிக் கொண்டன.

ADVERTISEMENT

ஒரேவிதமான கல்லூரிகள் மூன்று வகையாக பிரிப்பு

ஒரே அமைப்பு முறை. ஒரே விதிமுறைகள், ஒரே சட்டத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் இவை. ஒரு சில கல்லூரிகளில் இன்றுவரை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. ஒரு சில கல்லூரிகளில் எல்லாப் பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. சிலவற்றில் நிரப்பியும் நிரப்பாமலும் உள்ளது இந்த முரண் எப்படி அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உருவானது? அரசு ஏன் இப்படி ஒரே விதமான கல்லூரிகளை மூன்று விதமாக பிரித்து கையாள்கிறது?

உயர் கல்வி அமைச்சரின் அறிவிப்பும் எதிர்பார்ப்பும்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்து வரும் முறைகேடுகளின் விளைவுகள் இவை. ஜெயலலிதா அரசு 2011ல் பொறுப்பு ஏற்ற காலம் முதல் இந்த பிரச்சினை தொடங்கி, கடந்த திமுக ஆட்சி வரை நீடிக்கிறது. இந்த ஆட்சியில் அது என்ன ஆகும் என்று தெரியவில்லை. தற்போது “அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் நியமனம் தகுதி வெளிப்படைத் தன்மையோடு நிரப்பப்படும்” என்ற உயர் கல்வி அமைச்சரின் நம்பிக்கை வார்த்தைகள் பலனளிக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறையில் உள்ள அனைவரும் வேண்டிக் கிடக்கின்றனர். அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் தகுதி மற்றும் வெளிப்படை தன்மையுடனும் ஊழல் இன்றியும் நியமனங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

ADVERTISEMENT
பிரச்சினையின் தோற்றுவாய்

2011ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உருவாகும் காலிப் பணியிடங்கள் கணக்கிடக்கப்பட்டு ஒவ்வொரு கல்வியாண்டிலும் அக்டோபர் மாதம் கல்லூரிகளிலிருந்து பணிப்பளு அறிக்கை மற்றும் காலிப்பணியிட விபரங்கள் பெறப்படும். பின்னர் அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தேவையான உத்தேச செலவு மதிப்பீட்டை உயர்கல்வி மானிய அறிக்கையில் உள்ளடக்கி ஒப்புதல் பெற்று பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அரசால் அனுமதி அளிக்கப்பட்டது. சில ஆண்டுகள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. ஆனால், அதுவரை அரசு உதவி பெறும் கல்லூரி பணி நியமனத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெறவில்லை.

2011ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கையில் உயர்கல்வி மானிய கோரிக்கையில் வைப்பதை தவிர்த்து ஒவ்வொரு அரசு உதவி பெறும் கல்லூரியிலும் உருவாகும் காலிப் பணியிடங்களுக்கு தனித்தனியாக நிதித் துறையில் ஒப்புதல் பெற்று நிரப்பிக் கொள்ள ஒப்புதல் அளித்தனர். அவ்வாறு தனித்தனியாக நிரப்பிக் கொள்ள ஒப்புதல் அளிக்கும் போது, யார் அணுக வேண்டியவர்களை அணுகி செய்ய வேண்டியதை செய்கிறார்களோ அந்தக் கல்லூரிகளுக்கு மட்டும் பணியிடங்கள் நிரப்பிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்வதற்கு முந்தைய நிலை

பணம் பெற்றுக் கொண்டு பணி இட அனுமதி கொடுப்பதற்கு முன்பே அரசுக்கு தெரியாமல் பணம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்த கல்லூரிகள், பணத்தை கொடுத்து பணியிடத்தை வாங்கிவரும் நடை முறை வந்த பின்னர் கல்லூரிகள் அதனை ஒரு கோடி வரை விற்பனை செய்தன. எவ்வளவு பணம் கொடுத்து பெற்று வந்தார்களோ அதைவிட பத்து மடங்கு வரை விற்பனை செய்து வருகின்றனர். இது உயர் கல்வித் துறையில் தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

தொடர் முறையீடும் திமுக அரசின் அசைந்து கொடுக்காத போக்கும்

30/05/2021 அன்று, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த முறைகேட்டை தடுக்க வேண்டும் என்று கட்டுரையாளரே முறையான முறையிட்டை உயர் கல்வித் துறைக்கு மின்னஞ்சல் வழி சமரப்பித்தார். பொன்முடி அமைச்சர் பதவி விலகி கோவி செழியன் அமைச்சரான பிறகும் விரிவான முறையீட்டை (10/10/2024) உயர் கல்வித் துறை செயலாளர் அமைச்சர் ஆகியோருக்கு சமர்ப்பித்தார். இந்து தமிழ் திசை நாளிதழிலில்”புதிய உயர் கல்வி அமைச்சர் முன்னுள்ள சவால்கள்” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இதன் ஆழத்தை சுட்டிக் காட்டினார். இது போன்ற எத்தனை முறையீடுகள் வந்ததோ தெரியவில்லை. எதற்கும் திமுக அரசு அசைந்து கொடுக்கவில்லை.

காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமைக்கு காரணம்

பணம் கொடுக்க விரும்பாத கல்வி நிறுவனங்கள், அமைச்சரை சென்று பார்க்காத நிறுவனங்கள் இன்றுவரை பணியிடங்களை நிரப்பிக் கொள்ள முடியவில்லை. ஒரு கல்லூரிக்கு கடந்த ஆண்டு வரை பணி இடங்களை நிரப்ப அனுமதி. ஒரு கல்லூரிக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஒரு பணியிடம் கூட நிரப்பிக் கொள்ள அனுமதியில்லை. எவ்வளவு தைரியம்? எவ்வளவு அழுத்தம்? யாரேனும் ஒருவர் இது எப்படி நடந்தது என்று நீதி மன்றம் சென்று வழக்கு தொடுத்து உயர் கல்வித் துறையை கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வார்கள்? இந்த தவறுகளுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? இதுவரை நடந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட படித்த இளைஞர்களுக்கு என்ன நிவாரணம்?

பணம் பெற கற்பித்த காரணம்

அமைச்சர்கள் பணம் வாங்கவில்லை என்று வாதிட்டாலும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் பணம் வாங்கத்தானே செய்கிறது? இதை மறுக்க முடியுமா? சம்பளம் கொடுப்பது அரசு. காசு பார்ப்பது தனியார் கல்லூரி நிர்வாகங்களா? என்ற கேள்வியில் இருந்து தான் அமைச்சர்கள் இதில் காசு பார்க்கும் எண்ணத்திற்கு உருவம் கொடுத்த கிறித்துவ மற்றும் இந்து முஸ்லிம் மத நிறுவனங்கள், உயர் கல்வி சேவையை தருகிறோம் என்று அரசு உதவி பெறும் கல்லூரிகளாக உருப்பெற்றது. சாதி அறக்கட்டளைகள் தனிநபர் அறக்கட்டளைகள் கல்விச் சேவை செய்கிறோம் என்று களத்திற்கு வந்தார்கள். இவற்றை தொடங்கிய உயர்ந்த நோக்கம் கொண்டவர்களின் காலம் முற்றுப் பெற்ற பிறகு அவர்களின் வாரிசுகள் இதனைப் பணம் காய்ச்சி மரமாக பாவித்தனர்.

உயர் கல்வி துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன்
உதவி பெறும் கல்லூரிகள் என்ற கருத்தாக்க சிதைப்பு

உயர் கல்வி வழங்க அரசிடம் பணமில்லை. கொடையாளர்கள் நிலம் கொடுத்து கட்டிடங்கள் கட்டிக் கொடுத்து கல்விச் சேவை வழங்க பின்புலமாக இருந்தனர். இதுவே அரசு உதவி பெறும் கல்லூரிகளின் உருவான வரலாறு. இந்த நோக்கம் முற்றிலும் சிதைந்து விட்டதை நாம் அனைவரும் அறிவோம். இதில் ஓரு சில கல்லூரிகள் விதிவிலக்காக பழைய சேவையை தொடரலாம். அவற்றிற்காக அரசின் கோடிக்கான ஊதிய மானியத்தை பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியிட நியமனங்கள் அமைச்சர்கள் பணம் வாங்கவில்லை என்றாலும் தனியார் கல்வி நிறுவனங்கள் வாங்காமல் இருக்காது. இதனைக் கட்டுப்படுத்துவது எளிதன்று. அல்லது சாத்தியம் இல்லை.

அரசு உதவி பெறும் கல்லூரி நியமன‌ முறைகேட்டைத் தடுக்க ஒரே வழி

அரசு உதவி பெறும் கல்லூரி நியமன முறைகேடுகளை சரிசெய்ய அரசிடம் உள்ள ஒரே வாய்ப்பு, அரசு உதவி பெறும் கல்லூரி நியமனங்களை தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தோடும் அலுவலர்கள் பணி நியமனத்தை தமிழ் நாடு தேர்வாணையத்தோடும் இணைப்பது. அதுவரை தற்காலிக ஏற்பாடாக உயர் கல்வித் துறை நினைத்தால் தற்போதைய தேர்வு முறையை தனது நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்து முறைகேடுகளை குறைக்கலாம்.

கட்டுரையாளர்

Professor N Mani - College Teacher Recruitment Scam
Photo of author
நா.மணி

நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share