மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக இன்று (ஜூன் 19) கூடியது. அப்போது காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்ட கர்நாடகா அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்.
“விவசாயிகளுக்காக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. கர்நாடக அரசின் செயலுக்கு தமிழக அரசின் சார்பில் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ அணையோ நீர் தேக்கமோ கட்ட மத்திய அரசு அனுமதிக்க கூடாது. இது தொடர்பாக கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
காங்கிரஸ்
இந்த தீர்மானத்தின் மீது பேசிய காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார், ”மேகதாதுவில் அணை கட்டுவது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என்றும் தமிழக அரசு கொண்டுவந்த இந்த தீர்மானத்திற்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கிறது” என்றும் கூறினார்.
விசிக
விசிகவை சேர்ந்த சமூக நீதி அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், ” தமிழகத்தின் தமிழர்களின் உரிமை தொடர்பான முக்கிய தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்துள்ளார். இது வரலாற்று சிறப்புமிக்க முன்மொழிவு. தமிழகத்தின் உரிமைக்காக முதல்வர் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை அனைத்து கட்சியினரும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.
விசிக இந்த தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறது. தமிழ்நாடு இயற்கையான வற்றாத ஜீவ நதிகளை கொண்டிருக்கவில்லை. பாலாறு, காவிரி என நீர் தேவைக்காக பிற மாநிலங்களுடன் நாம் போராட வேண்டி இருக்கிறது. 1942 முதல் 1946 வரை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இந்திய அரசியல் தொழிலாளர் மற்றும் நீர் பாசன துறை அமைச்சராக இருந்த அம்பேத்கர், நீர் ஆணையம் தொடர்பாக முன்னெடுப்புகளை எடுத்தார். நதிகளை தேசிய மயமாக்க வேண்டும் என்று முன்னெடுத்தார். ரயில்வேகளுக்கு மாகாண எல்லைகள் இல்லை என்கிற போது ஆறுகளுக்கும் அதேபோல் மாகாண எல்லைகள் இல்லை. ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலத்திற்கு செல்லும் ஆறுகளுக்கு இது பொருந்தும் என அம்பேத்கர் கூறினார் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட்
அதுபோன்று தமிழ்நாடு அரசு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி கருத்துகளை கேட்டறிந்து, பிரதமர் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறி இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் மேகதாது க்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
கொங்கு மக்கள் தேசிய கட்சி
காவிரி என்பது தமிழகத்தின் சொத்து அல்ல நமது உரிமை என்று கூறி கொங்கு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர் நித்யானந்தம் இந்த தீர்மானத்தை வரவேற்றார்.
மனிதநேய மக்கள் கட்சி
கர்நாடக முதலமைச்சர் சுயலாபத்திற்காக மேகதாது அணை கட்ட முயற்சிக்கிறார். அவரது முயற்சிக்கு காங்கிரஸ் தலைமை எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கூறி மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
தேமுதிக
தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ”தண்ணீர் விவகாரத்தில் தமிழ்நாடு எப்போது தன்னிறைவு பெறும்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ”நமது மக்களின் உரிமைக்காக ஒட்டு மொத்த தமிழகமும் ஒன்றாக இருக்கத்தான் போகிறது. அதற்காக நாம் போராட போகிறோம். சுதந்திரம் வாங்கியது முதல் காவிரி, முல்லைப் பெரியாறு, தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றை பற்றி நாம் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இதுவரை நிரந்தர தீர்வு கண்டதாக வரலாறு இல்லை. நமது உரிமைகளுக்காக கர்நாடகா, கேரளா மற்றும் இலங்கையிடம் கேட்கிறோமே தவிர, தமிழ்நாடு என்று தன்னிறைவு பெற போகிறது என்ற கேள்வி எழுகிறது. எனவே மேகதாது அணை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தேவை. கர்நாடக முதலமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
சிபிஎம்
இந்த தீர்மானத்தின் மீது பேசிய சிபிஎம் எம்எல்ஏ செல்லசுவாமி, “அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடனும் முதலமைச்சர் பிரதமரை சந்தித்து முறையிடலாம். கர்நாடக அரசின் முயற்சியை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இயற்கையான காற்றையும் நீரையும் தடுத்தால் மனித குலம் அழிந்துவிடும்” என்று ஆதரவு தெரிவித்தார்.
மதிமுக
இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன், ‘இந்திய ஒன்றிய அரசு தமிழ்நாடு கர்நாடகாவா என்று வரும்போது, அவர்கள் கர்நாடகாவுக்கு தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இதை கவனமாக மனதில் வைத்து தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பாமக
பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசுகையில், ‘தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் காவிரியை நம்பித்தான் இருக்கின்றன. எட்டு கோடி மக்களில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை நம்பி தான் வாழ்கிறார்கள். காவிரி ஆறு நீண்ட தூரம் தமிழ்நாட்டில் தான் ஓடுகிறது. அப்படி பார்த்தால் 400 டிஎம்சி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர். நாளடைவில் அதை 205 டிஎம்சியாக குறைத்து விட்டார்கள். இதையும் 177.25 டிஎம்சி தான் இன்று தமிழ்நாட்டுக்காக உறுதி செய்கிறார்கள். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கடைமடை மாநில அனுமதி இல்லாமல் எந்த ஒரு கட்டுமான பணியும் மேற்கொள்ளக்கூடாது” என்று கூறி மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அதிமுக
இந்த தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ‘இரு மாநிலநல்லுறவை சீர்குலைக்கும் வகையில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. காவிரியின் உரிமையை பேணிக்காக வேண்டியது நமது கடமை. அதிமுக சார்பில் அப்போதே கடுமையாக எதிர்த்தோம். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் 5.12.2014 அன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் பிரதமருக்கும் ஜெயலலிதா கடிதம் அனுப்பினார். கீழ்படுகை மாநில ஒப்புதல் இன்றி மேல்படுகை மாநிலங்கள் அணை கட்டக்கூடாது. கர்நாடக அரசின் முயற்சி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் நோக்கம் கொண்டது.
காவிரி விவகாரத்தில் உச்ச நதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பை பெற்று தந்தது அதிமுக
பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் நீரை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அதே காரணத்தை கூறி மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட முயற்சிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடக அரசு பின்பற்றவில்லை. ஒவ்வொரு முறையும் போராடி தான் காவிரி நீரை பெற வேண்டி உள்ளது. எனவே மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது” என்றார்.
திமுக
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ”காவிரி விவகாரத்தில் நீண்ட அரசியல் சட்டப் போராட்டத்தை நடத்தி நமது உரிமையை பெற்றுள்ளோம். திமுக அரசினாலேயே நமது உரிமை நிலை நாட்டப்பட்டது என்பதை இங்கு உள்ள மூத்த உறுப்பினர்கள் அறிவார்கள்.
எங்களுடைய கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தாலும் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் எங்கள் தலைவர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்.
இந்த அணை கட்டுவதற்காக கர்நாடகா அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியதை கண்டித்து இதை அவையில் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு.
திமுக அரசின் தொடர் முயற்சியால் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை நீர்வள அமைச்சகத்தில் இருந்து திரும்ப அனுப்பப்பட்டது.
திமுக அரசு இருந்தவரை அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை.
காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியாக பேசி நமக்கான நீர் பங்கீட்டை பெற வேண்டும்
அரசு கொண்டுவந்த இந்த தனி தீர்மானத்தை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.
மேகதாது அணைக்கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு அனைத்து கட்சி குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த தனி தீர்மானத்தை பிரதமரிடம் சென்று வழங்க வேண்டும். குறிப்பாக தனி தீர்மானத்தில் மேகதாது பிரச்சனைக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.
திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றம்
அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களும் இந்த தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், இந்த தனி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அதோடு மே 26 அன்று மேகதாது பிரச்சனைக்காக தனது தலைமையில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தனி நடுவர் மன்றம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
அதோடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன் வைத்த கோரிக்கையை இந்த தீர்மானத்தையும் நாலாவது பத்திக்கு அடுத்து கூடுதலாக சேர்க்கலாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து திருத்தப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
