டிஜிட்டல் திண்ணை: ‘வெளுத்து’விட்ட அகிலேஷ், தேஜஸ்வி.. ‘வெளிறிப்போன’ ராகுல் காந்தி.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் நடந்தது என்ன?

Published On:

| By Mathi

NDIA Meet.. Akhilesh-Tejashwi Roast, Rahul Rattled

வைஃபை ஆன் செய்தது, “வீட்டுக்கு கூட்டியாந்து விருந்து வெச்சா விளாசிட்டுப் போறாங்க”ன்னு சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னங்க ப்ரோ.. சொலவடையோடு ஆரம்பிக்கிறீங்க.. யாரு விருந்து வெச்சதாம்?

நம்ம ஜென்சி யூத்ஸ்-க்கு இதுவும் தெரியனுமே.. நீங்க கேட்ட கேள்விக்கு வர்றேன் ப்ரோ.. டெல்லியில இந்தியா கூட்டணி கூட்டத்தை நேத்து காங்கிரஸ் கூட்டியிருந்துச்சு… இந்த கூட்டத்துல திமுக (DMK) கலந்துக்க முடியாதுன்னு சொல்லிடுச்சு இல்லையா?.

ADVERTISEMENT

டெல்லியில நேத்து இந்த கூட்டம் நடக்குறதுக்கு முன்னாடி 2 சம்பவங்கள் நடந்துச்சு.. ஒன்னு சிபிஎம் தேசிய செயலாளர் எம்ஏ பேபி , மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ஒரு லெட்டர் அனுப்பினாரு.. அதுல, “எங்களுக்கும் பாஜகவுக்கும் ரகசிய உறவு இருக்குன்னு கேரளா தேர்தலில் ராகுல், பிரியங்கா, நீங்க எல்லாரும் பேசுனீங்க.. பினராயி விஜயனை ஏன் கைது செய்யலைன்னும் கேட்டீங்க.. இப்படி எல்லாம் ராகுல் காந்தி பேசுறது எந்த வகையில நியாயம்? இதுதான் உங்க பாஜக எதிர்ப்பு நிலையா?”ன்னு கேட்டிருந்தாரு..

ரெண்டாவது சம்பவம், இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்குறதுக்கு முன்னாடி டெல்லியின் முக்கிய இடங்களில் தொங்கவிட்ட பேனர்கள்தான்.. அதுல காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் விமர்சிச்சு உதயநிதி ஸ்டாலின், பினராயி விஜயன், மமதா பானர்ஜி, கேஜ்ரிவால் சொன்ன கருத்துகள் இருந்துச்சு.. இதனால ஷாக் ஆன காங்கிரஸ், மெனக்கெட்டு அந்த பேனர்களை எல்லாத்தையும் கழற்றி கீழே போட சொல்லிடுச்சு.

ADVERTISEMENT

ஆரம்பிக்கிறதுக்கு முன்னே அமர்க்களம்னா கூட்டத்துல என்ன நடந்துச்சுங்க ப்ரோ?

இந்த கூட்டத்துல மமதா, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், சிபிஎம் ஜான் பிரிட்டாஸ், சுப்ரியா சுலே, திருமா, வைகோன்னு 22 லீடர்ஸ் கலந்துகிட்டாங்க..

இந்த கூட்டத்துல கலந்துகிட்ட எம்.பி.க்கள்கிட்ட நாம பேசுனப்ப,” ஒவ்வொருத்தரும் இந்தியிலும் இங்கிலீசிலும் பேசுனாங்க.. இந்தியில பேசுன அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியையும் ராகுல் காந்தியையும் செம்ம விளாசு விளாசிவிட்டார்.

ADVERTISEMENT

தண்ணி குடிக்க வைத்த அகிலேஷ் (Akhilesh)

இந்த கூட்டத்துலதான் ‘தண்ணி’ குடிக்க வைக்கிறதுன்னா என்னான்னு நேரில பார்த்தோம்..

அதாவது அகிலேஷ் பேசும் போது, “காங்கிரஸ் தலைமை இன்னும் பரந்த மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து போகனும்.. மாநில கட்சிகள் எல்லாம் காங்கிரஸ் எங்க கூட்டணியில இருக்குதுன்னு சொல்றாங்க.. ஆனா காங்கிரஸ் கட்சிதான், மாநில கட்சிகள் எங்களோட கூட்டணியில இருக்குதுன்னு சொல்லலை..

இந்த கூட்டணியோட பவுண்டேஷன் மெம்பர் திமுக.. ஆனா இந்த கூட்டத்தை புறக்கணிச்சிருக்கு.. காரணம் காங்கிரஸ்.. அரசியல் சூழ்நிலையோட தீவிரம் என்னாங்கிறதை காங்கிரஸ் லீடர்ஸ் புரிஞ்சுக்கவே இல்லை.. இப்படித்தான் ஏற்கனவே நிதிஷ்குமாரையும் வெளியே போகவிட்டாச்சு.. கேரளா முதல்வராக இருந்த பினராயி விஜயனுக்கு சென்ட்ரல் ஏஜென்சி மூலமா பாஜக நெருக்கடி கொடுக்குது… நாம எல்லாரும்தான் ஒற்றுமையா பினராயி விஜயனுக்கு ஆதரவா இருக்கனும்.. இப்ப காக்ரோச் ஜனதா பார்ட்டிக்கு மக்கள்கிட்ட ஆதரவு அதிகமாகுது.. இது ஏன் நடக்குதுன்னும் நாம யோசிக்கனும்”ன்னு மூச்சுவிடாம பேசினாரு..

அகிலேஷ் பேச பேச இங்கிட்டு ராகுல் காந்தி தண்ணியை குடிச்சுகிட்டே இருந்தார்.. அகிலேஷ் பேசி முடிக்கிறதுக்குள்ள ராகுல் முகமெல்லாம் பதற்றமாகிடுச்சு.. ரொம்பவே வியர்த்து போச்சு.. நான்கைந்து முறையாவது ராகுல் காந்தி தண்ணீர் குடிச்சிருப்பார்..

அகிலேஷ் பேசி முடிச்சதும் மமதா பானர்ஜியை பேச சொன்னாங்க.. ஆனா மமதாவோ, “நான் அப்புறமா பேசறேன்”ன்னு சொல்லிட்டாங்க..

விளாசிய தேஜஸ்வி யாதவ் (Tejashwi)

ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் பேச ஆரம்பிக்கும் போதே ’அகிலேஷ் ஸ்டைலில்’தான் ஆரம்பிச்சார்.. பீகாரில் காங்கிரஸ் என்னவெல்லாம் செஞ்சது. .எப்படி எல்லாம் காங்கிரஸால கூட்டணி கட்சியான ஆர்ஜேடிக்கு பாதிப்புன்னு லிஸ்ட் போட்டு விளாசிவிட்டு, இப்பகூட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீர்னு கட்சி தாவிட்டாங்க.. அதனால இந்தியா கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய 1 ராஜ்யசபா சீட்டும் போச்சு.. பீகாரில ராகுல் காந்தி எடுக்குற முடிவுகள் எல்லாமே ரொம்ப அதிர்ச்சியா இருக்கு.. ஏன்தான் இப்படி முடிவு எடுக்கிறாருன்னு தெரியலை”ன்னு அவரு பங்குக்கு முகத்துக்கு நேராக விளாசிட்டார்..

நேருக்கு நேர் மோதிய ஜான் பிரிட்டாஸ்

அடுத்ததாக கேரளா சிபிஎம் லீடர் ஜான் பிரிட்டாஸ் எம்பி பேசுனார்.. ஜான் பிரிட்டாஸ் தான் என்ன பேசப் போறேன்னு இந்தியா கூட்டணி லீடர்ஸுக்கு முன்னாடியே தன்னோட ஸ்பீச் காப்பியை அனுப்பியும் வெச்சுட்டாரு..

ஜான் பிரிட்டாஸ் பேசுறப்ப, கேரளாவுல காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான பிரசாரத்தை மையமா வெச்சு விமர்சிச்சாரு.. ”பாஜகவோட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொடர்பு இருக்குதுன்னு பிரசாரம் செஞ்சீங்க.. பினராயி விஜயனை ஏன் அரெஸ்ட் செய்யலைன்னு கேட்டீங்க.. இப்படி கேட்டது லோக்கல் லீடர்ஸான கேசி வேணுகோபாலோ மத்தவங்களோ இல்லை.. கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திதான்.. இப்ப நாம எல்லாரும் பாஜகவை எதிர்க்கனும்னு சொல்றோம்.. நம்பகத்தன்மையே இல்லாம நீங்க நடந்துக்கும் போது எப்படி பாஜகவை ஒன்னா நின்னு எதுக்க முடியும்? தமிழ்நாட்டுல கூட 2 அமைச்சர் பதவிக்காக திமுகவை கழற்றிவிட்டது காங்கிரஸ்.. உங்க மேல எப்படிதான் நம்பிக்கை வரும்?”னு வறுத்தெடுத்துட்டார். இதே மாதிரிதான் சிபிஐ லீடர் டிராஜாவும் பேசினார்.

2 அமைச்சர் பதவிக்காக திமுகவை கழற்றிவிடுவதா?

இவங்களுக்கு அடுத்ததா சிபிஐ(எம்எல்) திபங்கர் பட்டாச்சார்யா இங்கிலீஷ்லதான் பேசுனாரு.. அவரும் “அமைச்சர் பதவிக்காக திமுகவை விட்டுட்டு காங்கிரஸ் எப்படி போகலாம்?… திமுக அப்படிங்கிறது இந்தியா கூட்டணியோட பவுண்டேஷன் மெம்பர்.. அவங்களை விட்டுட்டு 2 அமைச்சர் பதவிக்காக நீங்க போயிருக்கீங்களே?”ன்னு காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் காய்ச்சி எடுத்துட்டார்..

ஆன்லைனில உத்தவ் தாக்கரே பேசுனாரு.. அவரு காங்கிரஸை அட்டாக் பண்ணாம, “பாஜகவை எதிர்க்க எல்லாரும் ஒன்னா நிக்கனும்..”னு பொதுவான பேசுனாரு..

அப்புறமா காஷ்மீர் உமர் அப்துல்லா பேசும் போது, எல்லா மாநில கட்சிகளை ஒட்டக் கூடிய பசையா இருக்கிறது காங்கிரஸ்தான்.. காங்கிரஸை பிடிச்சுகிட்டு நாம ஒற்றுமையா இருக்கனும்”னு சொன்னார்.

உமர் பேசும்போது, ”காக்ரோச் ஜனதா பார்ட்டி கூட நாமும் சேர்ந்து போராடனும்”.. அப்படின்னும் வலியுறுத்தினாரு..

திமுகவுக்காக குரல் கொடுத்த திருமா

திருமாவளவன் பேசுனதை நாங்க யாரும் எதிர்பார்க்கலைதான்.. “அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்”னு திமுகவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுத்தார்..

அந்தர் பல்டி அடிச்ச மமதா பானர்ஜி

இதுக்கு அடுத்துதான் செம்ம ட்விஸ்ட் நடந்துச்சு.. மமதா பானர்ஜி பேச ஆரம்பிச்சாங்க.. காங்கிரஸை விட்டு போய் தனிக் கட்சி தொடங்கி 15 வருஷம் மேற்கு வங்கத்தை ஆண்டவங்க மமதா.. இப்ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே மமதாவிடம் இருந்து கை நழுவிப் போயிடுச்சு.. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் எல்லாம் மமதாவை விட்டு போயிட்ட நிலையில நேத்து பேசும் போது, அப்படி ஒரு ‘பல்டி அடிச்சார்’ பாருங்க…

பொதுவாக காங்கிரஸை விமர்சித்துதான் பேசுவாங்க மமதா பானர்ஜி.. ஆனா இந்த கூட்டத்துல காங்கிரஸுக்கு ஆதரவா பேசுனாங்க.. காங்கிரஸ் இல்லாம ஒன்னுமே செய்ய முடியாது.. பாஜகவை எதிர்க்க காங்கிரஸ்தான் வேணும்.. காங்கிரஸ்தான் நமக்கு எல்லாமே.. இப்ப போய் காங்கிரஸை நாம விமர்சிக்க கூடாது..”ன்னு பேச பேச சோனியா காந்தி ரொம்பவே நெகிழ்ந்து போய் மமதாவையே பார்த்துகிட்டு இருந்தாங்க..

ராகுல் காந்தி (RAHUL) பேசியது என்ன?

இப்ப ராகுல் காந்தி மைக் பிடிச்சாரு.. வழக்கத்தை விட ரொம்ப சீரியசா டென்ஷனா இருந்த ராகுல் காந்தி, “சிவபெருமான் விஷத்தை குடிச்ச கதைக்கு போனாரு..

அதாவது, தேவர்களும் அசுரர்களும் சாகா வரம் தரக் கூடிய அமிர்தத்துக்காக பாற்கடலை கடைஞ்சப்ப கயிறா பயன்படுத்துன பாம்பு ”ஆலகால’ விஷத்தை கக்குச்சு.. இந்த விஷயம் உலகத்தை அழிக்க தொடங்குச்சு.. அதனால அசுரர்களும் தேவர்களும் சிவபெருமானிடம் முறையிட அவரே அந்த ஆலகால விஷத்தை குடிச்சாரு.. ஆனா பார்வதி தேவி சிவபெருமானின் தொண்டையை பிடிச்சுகிட்டதால அந்த விஷம் சிவபெருமான் உடலுக்குள் போகலை..

இந்த கதையை வெச்சுதான் ராகுல் காந்தி பேசினாரு.. சிவபெருமான் மாதிரி காங்கிரஸ் மேல வைக்கிற அத்தனை விமர்சனங்களையும் நானே ஏத்துக்கிறேன்னுன்னு சொன்னார் ராகுல்..

அதோட, “காங்கிரஸ் கட்சி ஒரு ஐடியாலஜி இயக்கம்.. காங்கிரஸ் பிறந்ததே போராடுறதுக்குதான்.. ஆர்.எஸ்.எஸ். ஐடியாலஜிக்கு எதிரான ஐடியாலஜி உள்ள கட்சிதான் காங்கிரஸ்.

தமிழகம் பற்றி ராகுல் காந்தி

தமிழகம், கேரளாவுல மக்களும் சரி.. கட்சிகாரங்களும் சரி.. என்ன நினைக்கிறாங்களோ.. மக்களோட, கட்சிக்காரங்களோட உணர்வு என்னவோ அதை நாங்க ஏத்துக்கிறோம்.. போராடுனாதான் மக்கள் மதிக்கிறாங்க..

கேரளாவுல இடதுசாரிகள், இடதுசாரிகளா ஆட்சி நடத்தலையே.. ஆதாரங்களை வெச்சுதானே விமர்சிச்சோம்.. “னு ரொம்பவே உணர்வுவயப்பட்டு பேசினார் ராகுல்..

அப்புறமா, “பாஜக ஒன்னும் ஜெயிக்கவே முடியாத கட்சின்னு சொல்ல முடியாது.. 2024 எலக்‌ஷன் ரிசல்ட் அப்படித்தானே இருந்துச்சு.. இப்பவும் கூட்டணி ஆட்சிதான் நடத்துறாங்க.. அதனால நாம ஒற்றுமையா இருந்தா நிச்சயம் ஜெயிப்போம்”னு கான்ஃபிடன்ட்டா சொன்னார் ராகுல்.

ஆனா, எந்த முடிவும் சொல்லாம ராகுல் உட்கார போகும் போது, “அதெல்லாம் சரிங்க.. அடுத்து என்னதான் செய்ய போறீங்க?”ன்னு ராகுலை நோக்கி ஒரு வாய்ஸ் வந்தது.. அதை யாருன்னு பார்த்தா எல்லாருக்குமே ஷாக்தான்.. அப்படி ராகுல் காந்தியை பக்கத்துல வெச்சுகிட்டு நறுக்குன்னு கேட்டதே மல்லிகார்ஜூன கார்கேதான்..

இப்படி கேள்வி கேட்டும் கூட, ராகுல் காந்தியோ, எதுவும் பேசாம, “பஞ்சாயத்து முடிஞ்சுருச்சு.. எல்லாரும் போலாம்.. போலாம் ரைட்”ன்னு வடிவேலு மனநிலையில இருந்தார்..

அதுக்கு பிறகுதான், கார்கே ஏற்கனவே எழுதி வைச்சிருந்த தீர்மானத்தை வாசிச்சு நிறைவேத்துனாங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடி ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share