திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் உச்சியில் தர்கா அருகே உள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 18) மீண்டும் விசாரணைக்கு வந்த போது மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
“திருப்பரங்குன்றம் மலையில் உள்ள அந்த கல் தூண் தீபம் ஏற்றுவதற்காக உருவாக்கப்பட்ட தூண் அல்ல. வேறு நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட சர்வே தூண்.
எனவே சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர அனுமதித்தால் இதுபோன்ற ஆயிரக்கணக்கான சர்வே தூண்களுக்கு மதச்சாயம் பூசப்பட்டு, அங்கு மத ரீதியான நடவடிக்கைகள் தொடங்கும் அபாயம் ஏற்படும்.
கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டபத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அந்த தூணில் தீபம் ஏற்றுவதற்கு இதுவரை எந்த மரபும் நடைமுறையில் இல்லை” என்று கூறினார்.
மேலும் மலை அடிவாரத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயிலும் மறுபுறம் தர்காவும் அமைந்துள்ளது என்று கூறி திருப்பரங்குன்றம் மலையின் புகைப்படங்களையும் ட்ரோன் காட்சிகளையும் நீதிபதிகளிடம் காட்டினார்.
சிக்கந்தர் பாதுஷா தர்கா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹூசைஃபா அஹ்மதி, ”உயர் நீதிமன்ற தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பு தர்கா நிர்வாகத்திற்கு உரிய அவகாசம் வழங்கவில்லை.
அதோடு தனி நீதிபதி தர்கா நிர்வாகத்திடம் எந்த முன்னறிவிப்பும் செய்யாமல் அந்த இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்த தீபத் தூண் நெல்லிதோப்பிற்கும் தர்காவிற்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. எனவே நீதிபதி நேரில் சென்று பார்வையிடுவதற்கு முன் தர்காவிற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அந்த தூண் கோயில் வளாகத்திற்குள் இருப்பதாக முடிவுக்கு வந்திருக்க முடியாது.
புதிய இடத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக புதிய மரபை உருவாக்க விரும்பினால் பொதுநல வழக்கு மூலம் அல்லாமல் உரிமைகள் வழக்கு மூலமாகவே அதனை அணுக வேண்டும்” என்று தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் இடைக்கால உத்தரவு தொடர்பான வாதங்களை சுருக்கமாக முன்வைக்குமாறு அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினர்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 19ஆம் தேதி 2 மணிக்கு ஒத்தி வைத்தனர்.









