2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களுக்கு பல ஆச்சரியங்களை அளித்தது. அவற்றில் ஒன்று முதல்வர் விஜய் உட்பட பல்வேறு முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஆகும்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளை தோற்கடித்து புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் அமர்ந்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.
தேர்தல் வழக்குகள் தொடர்வதாக இருந்தால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் தொடர வேண்டும். அந்த வகையில் இந்த காலக்கெடு கடந்த ஜூன் 18ஆம் தேதி நிறைவடைந்தது.
இந்த காலகட்டத்திற்குள் சுமார் 55 தேர்தல் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதில் புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் 850 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏ கார்த்திகேயனின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் ஓம் சக்திசேகர் தாக்கல் செய்த மனுவை தவிர வேறு எந்த தேர்தல் மனுக்களும் இதுவரை எண்ணிடப்படவில்லை என்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் சென்னை உயர்நீதிமன்ற (தேர்தல் மனுக்கள்) விதிகள் 1967 ஆகியவற்றின்படி தேர்தல் மனுக்களுக்கு எண்கள் வழங்கப்படுவதற்கு முன்னதாக கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதன்படி ஆய்வுக்கு பின்னரே எண்ணிடப்படும்.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த இரு வாக்காளர்கள் முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தனித்தனி தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
பெரம்பூரில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கூடுதலாக வியாசர்பாடியை சேர்ந்த தினேஷ் மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் ஆகியோரும் தாக்கல் செய்துள்ளனர். இந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 365 வாக்குகள் பெற்ற நிலையில் ஆர்.டி சேகர் 66 ஆயிரத்து 650 வாக்குகள் மட்டுமே பெற்று 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பெரம்பூரை தவிர திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். எனினும் அந்த தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இங்கு விஜயை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும் திமுக வேட்பாளருமான இனிகோ இருதயராஜ், தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதுபோன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் மரிய வில்சன், கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்ற அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு எதிராகவும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ விஜயகுமார் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழககு தாக்கல் செய்துள்ளார்
அதுபோன்று புதுக்கோட்டை தொகுதியில் 1867 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜாவின் வெற்றியை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஷெரிப் வழக்கு தொடர்ந்துள்ளார்.
லால்குடி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த தேர்தல் வழக்குகள் அனைத்தும் எண்ணிடப்பட்ட பிறகு தனித்தனி நீதிபதிகளுக்கு இவற்றை ஒதுக்குவதற்காக தலைமை நீதிபதி தர்மாதிகாரி முன்பு இவை சமர்ப்பிக்கப்படும்.
இந்த ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்று நீதித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது 2011 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வெறும் 12 தேர்தல் வழக்குகளும், 2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு 23 வழக்குகளும், 2021 இல் 13 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆனால் இந்த ஆண்டு 55 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
