வைஃபை ஆன் செய்ததும், “காலத்தின் தேவையிது… கசப்புகள் கடந்து போவோம்”னு வரிகளை படித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. ஏதோ கூட்டணி கட்சிகளை பத்தி சொல்ற மாதிரி இருக்கே..
ஆமாங்க ப்ரோ.. இப்ப ஹை வோல்ட் டாப்பிக்கே ‘கூட்டணி’ விவகாரம்தானே..
திமுக கூட்டணியில இருந்து வெளியேறி தவெகவை ஆதரிக்கும் சிபிஎம் செயலாளர் சண்முகம், கட்சி நிலைப்பாட்டை பத்தி தீக்கதிரில் ஒரு கட்டுரை எழுதினாரு. அதுக்கு எதிர்வினையா முரசொலியில 3 நாளைக்கு சிபிஎம்-ஐ கடுமையா விமர்சிச்சுட்டாரு ”சீனியர் ஜேனர்லிஸ்ட் திருமாவேலன். இதனால சிபிஎம் தோழர்கள் எல்லாம் ரொம்பவே கொந்தளிச்சும் போயிட்டாங்க..
இந்த களேபரத்துல திருவாரூர்ல மாஜி மினிஸ்டர் மதிவாணன் வீட்டு கல்யாணத்துல பேசுன ஆ.ராசா, கூட்டணி கட்சிகளை விமர்சித்துவிட்டு இன்னும் முடிவெடுக்காத மதிமுகவையும் சேர்த்து தாக்கினார்.. அதோடு, “தயவு செய்து இனி கூட்டணி யாரோடும் இல்லை, திமுக தனித்தே போட்டியிடும் என அறிவிங்க தலைவரே”ன்னு ஸ்டாலினுக்கு வேண்டுகோளும் வெச்சார்.

ஸ்டாலின் பேசும் போதும், “இன்றைக்கு இருக்கும் மக்கள் எல்லாம், கூட்டணியே தேவை இல்லை என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக அதையும் நாங்கள் விரைவில் பரிசீலிப்போம், பரிசீலிப்போம், பரிசீலிப்போம்”னு அழுத்தமாக சொன்னாரு..
மதிமுகவும் இன்னைக்கு உயர்நிலை குழு கூட்டத்தை நடத்துச்சு.. நாளைக்கு அந்த கட்சியோட பொதுக்குழு கூடுது.. அதுல, “திமுக கூட்டணியில இருந்து வெளியேறுவது”ன்னு முடிவை அறிவிப்பாங்கன்னுதான் எதிர்பார்க்கிறாங்க..
இப்படி கூட்டணி கட்சிகள் எல்லாத்தையும் சகட்டுமேனிக்கு லெப்ட் ரைட் வாங்குறது எல்லாம் தேவை இல்லையேன்னு ஸ்டாலினுக்கு சிலர் ஆலோசனை சொல்லி இருக்காங்க.. இதுக்கு மேலேயும் ‘ரொம்ப கடுமையாக’ பேசவும் வேண்டாமேன்னும் சொல்லி இருக்காங்களாம்..
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “கூட்டணி கட்சிகளை விமர்சிக்கிறதை பத்துன ஒரு டிஸ்கஷன் நடந்துச்சு… அப்ப, “காங்கிரஸ் கட்சியை நாம விமர்சிக்கிறதுங்கிறது வேற.. ஏன்னா எலக்ஷனுக்கு முன்னாடியும் சரி.. எலக்ஷன் முடிஞ்ச பிறகும் சரி.. காங்கிரஸ் நமக்கு செஞ்ச துரோகம் அப்படி.. எலக்ஷன் ரிசல்ட்டு வந்த உடனேயே நம்மகிட்ட சொல்லாம கூட தவெகவை ஆதரிச்சு கூட்டணியில சேர்ந்துருச்சு காங்கிரஸ்.

அதோடவும் நிற்கலையே.. ராகுல் காந்தியே சிபிஎம் பேபி, சிபிஐ டி.ராஜான்னு எல்லார்கிட்டேயும் பேசி தவெகவை ஆதரியுங்கன்னு ‘கேன்வாஸ்’ செஞ்சாரு.. அதனால காங்கிரஸை ராகுல் காந்தியை விமர்சிக்கிறது கூட சரிதான்..
ஆனால் மத்த கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் அவங்க தவெகவை ஆதரிக்கிறதை பத்தி நம்மகிட்ட டிஸ்கஷன் செஞ்சாங்க.. நாமும், “ஜனாதிபதி ஆட்சின்னு வந்துருச்சுன்னா 6 மாசம்தான் சொல்ல முடியாது.. 3 வருஷம்கூட நீட்டிச்சுடுவாங்க.. அதனால விஜய் ஆட்சி அமைக்க ஆதரிக்கலாம்”னு சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல்கிட்ட சொன்னோம்.. அவங்களும் அதை ஓபனாகவே, நம்மகிட்ட ஆலோசனை செஞ்சுட்டுதான் சொல்றோம்னு சொல்லி இருக்காங்க.. நாமும், “நாங்க சொல்லிதான் உங்க ஆட்சியே நடக்குது”ன்னு சொல்லிகிட்டு இருக்கிறோம்..
இப்படி இருக்கும் போது, ‘கூட்டணி கட்சிகளை கடுமையா பேசுறது எப்படி சரியா இருக்கும்? அப்ப நமக்கு கூட்டணியே இனி வேண்டாம்னு முடிவெடுக்கவா போறோம்?
இப்ப 5 தொகுதி பை எலக்ஷன் வருது.. சில கட்சிகள் நம்மை ஆதரிக்க முன்வந்தா வேண்டாம்னா சொல்லிடுவோமா? இல்லை நாம தனிச்சு போட்டி போட போறோமா? அதனால கூட்டணி கட்சிகளை அவங்க போக்குல விட்டுடுவோம்.. நாம நம்ம வேலையை பார்ப்போம்”னு சீரியசாகவும் ஸ்டாலின்கிட்ட சொன்னாங்க..
எல்லாத்தையும் ஸ்டாலினும் கவனமா கேட்டுகிட்டாரு.. இனிமேல ‘அட்டாக்’ மோடு கொஞ்ச நாளைக்கு ‘சைலண்ட்’ மோடுக்கு போகலாம்”ன்னு சொல்றாங்க ப்ரோ..
சரிங்க ப்ரோ.. திமுகவில வேறு கட்சியில இருந்து யாரும் சேர்றாங்களா ப்ரோ?
திமுகவில சேர்ந்தா தனக்கு துணை பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்க்கிறார் ஆளூர் ஷாநவாஸ்னு நாம சொல்லி இருந்தோம்.. இப்ப அதுல பாலோ அப் இருக்குங்க ப்ரோ.

இதை பத்தி நாம விசாரிச்சப்ப, “ஆளூர் ஷாநவாஸ் டிமாண்ட் பத்தி பொதுச்செயலாளர் துரைமுருகன்கிட்ட ஸ்டாலின் டிஸ்கஷன் செஞ்சாரு.. அப்ப துரைமுருகன், “திமுகவில இருந்து அதிமுகவுக்கு போயிட்டு திரும்பவும் திமுகவுக்கு வந்தவங்களுக்கு துணை பொதுச்செயலாளர் போஸ்ட் கொடுக்கலாம்.. ஆனா வேற கட்சியில இருந்து நேரடியாக வர்றவங்களுக்கு எடுத்த உடனே துணைப் பொதுச்செயலாளர் போஸ்ட் கொடுக்கிறது சரியா வராது.. ஒரு முஸ்லிம்-க்குதான் அந்த போஸ்ட்டை கொடுக்கனும்னா நம்ம கட்சியிலேயே எத்தனையோ முஸ்லிம்கள் சீனியரா இருக்காங்களே..அவங்களுக்கு கொடுக்கலாமே”ன்னு சொல்லி இருக்கிறார்..
ஸ்டாலினும் இதை அக்செப்ட் செஞ்சுகிட்டாரு..
இந்த தகவலும் ஆளூர் ஷாநவாஸுக்கு பாஸ் ஆகிடுச்சு.. இப்போதைக்கு ஷாநவாஸ் தனியா ஒரு அமைப்பை தொடங்கி நடத்துவாரு.. அது திமுக கூட்டணியில இடம் பெறும் அப்படின்னு முடிவு எடுத்திருக்காங்க”ன்னு சொல்றாங்க ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
