நான் போதைப்பொருள் பயன்படுத்தினேனா? – அமைச்சர் சரத்குமார் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

Minister sarathkumar

போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றிப் பரவி வரும் அவதூறு வீடியோ குறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் இன்று விளக்கமளித்துள்ளார்.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமூகத்தைப் போதை இல்லாததாக மாற்றும் நோக்கத்தில் தான், இன்று காலை கூட ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குச் சென்று வந்தேன். ஆனால், அதற்குப் பிறகு என்னைப்பற்றி ஒரு தவறான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. உண்மை என்னவென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஐபிஎல் (IPL) போட்டியைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது எனது மகள் மாத்திரையைச் சாப்பிட மறுத்த காரணத்தால், அதை அவளுக்காகப் பொடி செய்து தண்ணீரில் கலந்து கொடுத்தோம்.

அதற்காக ஒரு மாத்திரையைத்தான் அந்த இடத்தில் நான் நுணுக்கிக் கொண்டிருந்தேன். ஐபிஎல் மேட்ச் நடந்த அந்த மைதானத்தில் அவ்வளவு பெரிய கும்பல் மற்றும் கடுமையான காவல்துறை கண்காணிப்பு இருந்தபோது, குழந்தைக்காக நாங்கள் செய்த விஷயத்தை இப்போது தவறான கோணத்தில் வைரல் செய்து கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் மனதிற்கு கஷ்டமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. தயவு செய்து இது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள், அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், தன் மீது திட்டமிட்டு இதுபோன்ற அவதூறுகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் Thug life Moment என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ள அந்த பழைய வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share