சென்னையில் நடைபெற்று வரும் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் சீர்காழி எம்.எல்.ஏ. செந்தில் செல்வன் பங்கேற்காதது சர்ச்சையாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக 4 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றது. சீர்காழியில் செந்தில் செல்வன், கடையநல்லூரில் திமு ராஜேந்திரன் வெற்றி பெற்றனர்.
தற்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. உள்ளிட்டோர் முதல்வர் விஜய் மற்றும் தவெக ஆட்சிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக கூட்டணியில் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்து நாளை ஜூன் 27-ந் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழுவுக்கு முன்னதாக மதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் இன்று ஜூன் 26-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக எம்.எல்.ஏ. சீர்காழி செந்தில் செல்வன் பங்கேற்கவில்லை.

இது தொடர்பாக செந்தில் செல்வன் எம்.எல்.ஏ. கூறுகையில், சட்டசபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் மதிமுகவில் இருந்து விலகி திமுகவின் உறுப்பினராக சேர்ந்தேன். தற்போதைய நிலையில் திமுக உறுப்பினராக திமுகவின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். அத்துடன் மதிமுகவின் உயர்நிலை குழு உறுப்பினராகவும் இல்லை. அதனால் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார்.
மதிமுக தரப்பில், “செந்தில் செல்வன் எம்.எல்.ஏ., உயர்நிலை குழு உறுப்பினர் இல்லை என்பதால் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மதிமுகவின் மற்றொரு எம்.எல்.ஏ.வான கடையநல்லூர் திமு ராஜேந்திரன், இந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. அதாவது, திமு ராஜேந்திரனும் மதிமுகவில் இருந்து விலகி திமுகவின் அடிப்படை உறுப்பினராகித்தானே திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அவர் மட்டும் எப்படி மதிமுக உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்?” என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
