தற்போது தமிழக மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக இருக்கும் சரத்குமார் (Sarathkumar), ஐபிஎல் போட்டியின் போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக கூறப்படும் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஐபிஎல் (IPL) போட்டியில் கேலரியில் அமர்ந்து அமைச்சர் சரத்குமார் தமது மொபைல் போன் திரையில் ஒரு வெள்ளை நிறப் பொடியை ஏடிஎம் கார்டு மூலம் ஒழுங்கு செய்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இது அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதைப் போல இருப்பதாகக் கூறி விமர்சனங்கள் எழுந்தன.

அமைச்சர் சரத்குமார் விளக்கம்
இந்த சர்ச்சைக்கு அமைச்சர் சரத்குமார் தனது குடும்பத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், “அது போதைப்பொருள் அல்ல, எனது ஒன்றரை வயது குழந்தைக்கு வழங்க வேண்டிய மாத்திரை. குழந்தை மாத்திரையை முழுமையாக விழுங்க மறுத்ததால், அதைத் தூளாக்கி திரவத்தில் கலந்து கொடுப்பதற்காக மாத்திரையைத் தான் அப்போதைய சூழலில் பொடி செய்தேன்” என்றார்.
மேலும் இந்த வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், தற்போது முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த பழைய வீடியோ வேண்டுமென்றே பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சரத்குமாரின் குடும்ப நண்பர் வீடியோ
இதே கருத்தை வீடியோவில் சரத்குமார் அருகே அமர்ந்திருந்த அவரது குடும்ப நண்பரும் வீடியோ மூலம் விளக்கம் தந்துள்ளார்.
அமைச்சர் சரத்குமார் மற்றும் அவரது குடும்ப நண்பரின் இந்த விளக்கங்கள், பிரச்சனையை விஸ்வரூபமாக்கியுள்ளது. இந்த விளக்கங்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் ஏராளமான கேள்விகள், ட்ரோல்கள், மீம்ஸ்கள் வலம் வருகின்றன.
அமைச்சர் சரத்குமாரின் ‘போதைப் பொருள்’ சர்ச்சையில் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் கேள்விகள்:
- அமைச்சர் சரத்குமார் தமது விளக்கத்தில், அன்று தனது குழந்தைக்கு மாத்திரை கொடுப்பதற்காகவே அதைத் தூளாக்கியதாகக் கூறியிருந்தார். ஆனால், வைரலான வீடியோவில் அமைச்சருடன் அவரது குடும்பத்தினரோ அல்லது குழந்தையோ அருகில் இருப்பது போலத் தெரியவில்லை. இதனால், “குழந்தைக்கு மருந்து கொடுக்கும்போது ஏன் குடும்பத்தினர் அருகில் இல்லை?” என்ற கேள்வி சமூக வலைதளங்களில் எழுப்பப்படுகிறது.
- இந்த வீடியோவைச் சில ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சர் தானே தனது சமூக வலைதளப் பக்கத்தில் “Thug Life” என்ற தலைப்புடன் பதிவிட்டிருந்தார். பொதுவாக ‘தக் லைஃப்’ போன்ற தலைப்புகளை ”குழந்தைக்கு மாத்திரை கொடுக்கவா?” வைப்பார்கள்? அப்படியானால் அந்தத் தலைப்பு ஏன் வைக்கப்பட்டது? என்ற சந்தேகம் முன்வைக்கப்படுகிறது.
- ஒரு பொது இடமான ஐபிஎல் ஸ்டேடியத்தில், மொபைல் போன் திரையின் மீது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி மாத்திரையைத் தூளாக்கும் விதம், போதைப்பொருள் உட்கொள்பவர்கள் கையாளும் முறையைப் போலவே இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
- ஒன்றரை வயதுக் குழந்தைகளுக்கு மாத்திரை கொடுக்கும்போது, அது தொண்டையில் சிக்கிக்கொள்ளும் அபாயம் (Choking hazard) உள்ளது. எனவேதான், மருத்துவர்கள் பெரும்பாலும் திரவ வடிவிலான டானிக்கையே பரிந்துரைக்கிறார்கள். “அப்படியிருக்க, ஏன் ஒரு தந்தை குழந்தைக்கு மாத்திரையைத் தூளாக்கிக் கொடுக்க வேண்டும்?” என்ற கேள்வி பல பெற்றோர்களால் எழுப்பப்படுகிறது.
- மாத்திரையை ஏடிஎம் கார்டு மூலம் தூளாக்கும்போது, அதில் குறிப்பிட்ட அளவு மருந்து குழந்தைக்குச் சென்றடைவதை உறுதி செய்வது கடினம். டானிக்குகளில் அதற்கென அளவிடும் கருவி (Measuring cap/dropper) இருக்கும். எனவே, அமைச்சர் கூறிய விளக்கம் மருத்துவ ரீதியாக நம்பகத்தன்மை அற்றது என்கின்றனர்
- “சகிக்க முடியாத ஒரு செயலுக்குப் பிறகு, பொதுமக்களை நம்ப வைப்பதற்காகக் கூறப்பட்ட ஒரு ‘வசதியான விளக்கம்’ இது” எனவும் நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
- மாத்திரையை தண்ணீரில் போட்டால் அதுவே கரைந்து விடும். உடைக்க தேவை இல்லை; அப்படியே உடைப்பதாக இருந்தாலும் phone screen இல் வைத்தா ஒரு அப்பா உடைப்பார் ? சரி எதுக்கு இன்னொரு கையில் 500 ரூபாய் நோட்டு ? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
