பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் முதல் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 5) தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது

இதில் பள்ளி கல்வித்துறைக்கு 2025-2026 ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால் பட்ஜெட்டில் பள்ளி கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது தவெக அரசு தனது முழு முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருக்கிறது. இதில் பள்ளிக் கல்விக்கான பட்ஜெட் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என்ன குற்றச்சாட்டு எழுந்தது

ADVERTISEMENT

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் பதிவில், “வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது!

2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.

ADVERTISEMENT

இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.

அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட சுமார் 6,003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.

ADVERTISEMENT

வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட சுமார் 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதைக்குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும்.” என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் நிதி பயன்பாட்டில் தாமதம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கலாம். ஆனால், அதைக் காரணம் காட்டி கல்வித்துறைக்கான நிதியைக் குறைப்பது வருத்தமளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share